அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 – தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
77. இரு குரங்கின் கைச்சாறு
பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.
‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.
இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.
அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ! என்ன இது?’ என்று காரணம் கேட்டார் இவன் தான் ஒலையில் படித்த செய்தியைச் சொன்னான்.
அவனது அறியாமையைக் கண்டு இரங்கிய பெரியவர் சொன்னார் – “தம்பி, இரு குரங்கின் கைச்சாறு என்பது மறைமொழி. அது குரங்கின் சாறு அல்ல; முசு என்றால் குரங்கு. இரு குரங்கின் கைச்சாறு என்றால் முசுமுசுக்கைச் சாறு என்பது பொருள்.”
“இனி நீ வைத்தியம் செய்வதனால் அறிந்த அனுபவம் உள்ள பெரியோரை அணுகிக்
கேட்டு, அவர் கைப்பாக முறையைத் தெரிந்து தொழில் செய்ய வேண்டும். நூலைப் படித்துத் தானே தெரிந்து, கொண்டதாக நினைப்பதும் தவறு, பெரியோரை அணுகிக கேட்க வெட்கப்படுவதும் தவறு. நன்கு தெரிந்து தெளிந்து தொழில் செய்யவேண்டும் என அறிவுரை வழங்கிச் சென்றார்.
————-
அ . நகைச்சுவை
78. ஊர்வலம்
திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது.
மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்து திளைக்கின்றனர்.
அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க.
அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார்.
அவர்கள், ‘அவரல்ல, இவர்தான் பொன்னுசாமி’ என்று சுட்டிக்காட்டிச் சொன்னதும் –
வந்தவர். ‘இவரைவிட அவர் நல்லா வாசித்தாரே’– என்றார்.
‘எப்படி ஐயா கண்டீர்கள்’ – என வியந்து கேட்க மாலை போட்டவர்,
‘இவர் விட்டுவிட்டு ஊதுகிறார்?
‘அவர் விடாமல் ஊதுகிறாரே’
– என்று சொன்னார்.
அறுபது ஆண்டுகட்கு முன்பே –
நம்மில் சிலர் இசையைச் சுவைத்த அழகு இது –
—————
79. அரசனும் அறிஞனும்
அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர்.
அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான்.
அரசனது காவலர்கள் அவனைத் தாக்க முயன்றனர். இதுகண்ட அரசன் அவனை அடிக்க வேண்டா என்று தடுத்து, ‘அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டிவிடுங்கள். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்’ என்று கட்டளையிட்டான்.
ஆட்கள் அவ்வாறே செய்தனர். பல்லக்கு தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரன் அங்கு வந்து நின்று கொண்டு, “என்னிலும் ஏழையான அரசன் என் காசைப் பிடுங்கிக் கொண்டான். என்னிலும் ஏழையான அரசன் என் காசைப் பிடுங்கிக்கொண்டான்” என்று உரத்துக் கூவினான்.
அதுகண்ட அரசன், தன் காவலாளியிடம், “முன்பு அவன் தன்னைவிடப் பணக்காரனல்ல என்றுதான் சொன்னான். இப்போது தன்னைவிட ஏழை என்று என்னைச் சொல்லுகிறான். இது என் செல்வத்தையே பழித்துக் காட்டுவதாக இருக்கிறது. போனால் போகிறான் காசை அவனிடம் கொடுத்து விரட்டுங்கள்” என்று கூறினான். காவலர்களும் அப்படியே செய்தனர்.
பல்லக்கு மேல வீதியில் வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அப்பிச்சைக்காரன், “அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான். அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான்” என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்
அரசன் சினந்து, அவனைக் கொல்ல தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். பிச்சைக்காரன் ஒடி மறைந்தான்.
பல்லக்கு வடக்கு வீதியில் வந்தது, அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரன். “பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான். பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான்” என்று அலறிக் கொண்டேயிருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துத் துன்புறுத்த முயன்றனர்.
அவர்களை அரசன் தடுத்து, அவன் பிச்சைக்காரனல்ல அறிஞன் என உணர்ந்து அறிவிலும், செல்வத்திலும், வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்து ஒழித்த பேரறிஞன் இவனே.” எனப் பாராட்டிப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தான்.
அக்கால அரசர்களில் இப்படியும் சிலர் இருந்ததாகத் தெரியவருகிறது.
————
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment