அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு
அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
வக்கீல் : உமக்கு என்ன வேலை?
சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.
வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?
சாட்சி : ஆம். இருக்கிறது.
வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?
சாட்சி : கட்டிடமாக.
விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு
சாட்சி : ஒரு இலட்ச உரூபாய் பெறும்.
வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.
சாட்சி : ஆமாம்.
வக்கீல் : அதுவா ஒரு இலட்சம் பெறும்?
சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.
வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.
———-
81. வரத நஞ்சையபிள்ளை
50 ஆண்டுகட்கு முன்பு.
தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.
முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாகச் சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள்.
அவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார்.
கூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே பல மணித்துளிகள் ஆயின.
குறிப்பு – சேலம் மாவட்டத்தில் சிற்றூரில் பிறந்தவர் அப்படி, அன்றி, உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாக இருந்தன.
————–
82. தோல்வியிலும் மகிழ்ச்சி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். நல்ல அறிஞர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ – என்ற புதினத்தை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில் புதினம் எழுதிய பெருமை அவரைச் சாரும்.
அக்கதையில், முதலியார் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். மற்றும் எட்டுப் பேருடன் இவரும் குதிரைமேல் ஏறி ஒட்டுகிறார். குதிரைவேகமாக ஓடுகிறது. எல்லாக் குதிரைகளும் பந்தயத்தில் விரைவாக ஒடின முதலியார் குதிரைதான் 9 ஆவது குதிரையாக வந்தது.
எல்லாரும் சிரித்தார்கள்.
தன் குதிரையைக் கையில் பிடித்துக்கொண்டே சிரித்த மக்களிடம் வந்து. என் குதிரை கடைசியாக வந்தது எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும். இந்த தொத்தக் குதிரையைப் பார்த்து, நல்ல குதிரைகள் ஏன் மிரண்டு ஓடின – என்பதுதான் தெரியவில்லை – என்றார்.
இதைக் கேட்டதும் எல்லாருமே ஆரவாரத்துடன் சிரித்து மகிழ்ந்தனர். இது நகைச்சுவை. கருத்து மிக ஆழம்.
தோல்வியைக் கண்டு அஞ்சாமையும் தோல்வியையே பெருமைப்படுத்தி மகிழ்வதும் மக்களாய்ப் பிறந்தவர்கட்கு மிகவும் தேவை என்பது அவரது கருத்து.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர் நம் வாழ்வில் துன்பம் வரும்போதெல்லாம் இதனை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment