ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – புலவர் கா.கோவிந்தன்
(வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
ஆகமங்களின் மூலம்
ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை, தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக் கொண்டனவும் ஆம் ஆதலின், தசுயூ வழிபாட்டு உரிமைகள், வேத காலத்தில் என்ன ஆயின என்ற வினாவை, எவன் ஒருவனும் தனக்குத் தானேயும் கேட்டுக் கொண்டான் அல்லன். ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர் தசுயூக்களிடையேயான பகை, இனம் பற்றியதாம் என்பதற்காம் பல்வேறு விளக்கங்களிலும், தசுயூக்களை ஆரியர்களோடு இரண்டறக் கலக்கப் பண்ணும் புரியாப் புதிரிலும், முழுமை. யாக ஆழ்ந்து போயிருந்தமையால், ஆரிய வழிபாட்டுமுறை பரவிய பின்னர், தசுயூ வழிபாட்டு முறையின் வரலாறு பற்றி ஆய, அவர்கள் ஒரு முறையும் நின்று நோக்கினாரல்லர். இவ்வினாவுக்குப் பொருத்தம் உற விடையளிக்க நம்மால் இயலுவதற்கு, “சுரெளத” வேள்விகள் எனப்படுபவை, “இர்த்(து)விகா” என அழைக்கப்படும் வேள்வி ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடியது.
வேத வேள்விகளை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தருமளவு, பெருஞ்செல்வம் வாய்ந்த வேந்தர்களும், வேந்தர் நிகர் விழுநிதிச் செல்வர்களும் வணிகர்களும், அவ்வேள்விகள் தரும் கட்புலனாகாப் பலன்களைத்தான் பெற முடியுமேயல்லாது, அவ்வேள்விச் சடங்குகளில் பங்கு கொள்ளக் கூடாது. எல்லார்க்கும் தெரிந்து சமயம் என அழைக்கப்பட வேண்டியதான பொது மக்களின் சமயச் சடங்குகள் ஆகா என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
மனைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீ வழிபாடுகளில் பயன்படும் மந்திரங்களை அதர்வ வேதம் கொண்டுள்ளது உண்மை. ஆனால், இவ்வழிபாட்டு முறைகள், ஒருவர் விடாமல் மக்கள் எல்லாராலும், ஏதும் அறியாப் பாமரர்களைப் போலவே முற்றவும் அறிந்த உயர்ந்தோர் ஒரு சிலராலும் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்யும் சான்று எதுவும் அறவே இல்லை . வேதகாலம் முழுவதும் சாதாரண பொதுமக்கள் தீ வழிபாட்டு முறையல்லாத, சமய வழிபாட்டு நெறிகளைப் பெற்றே இருக்க வேண்டும். அவை, பண்டைய தசுயூ வழிபாட்டு முறைகளாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வழிபாட்டு முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை, பொதுமக்கள் வழிபட்ட கடவுள்கள் யாவை என்பதை அறிந்து கோடற்கான மார்க்கம் ஏதேனும் உண்டா? தமிழ் இந்தியா, வட இந்தியாவைப் போலவே, ஆரிய தீ வழிபாட்டு நெறி தோன்றுவதற்கு முன்னர், தசுயூக்களின் தீ வழிபாடற்ற வழிபாட்டு முறையினையே பின்பற்றி வந்தது; பண்டைத் தமிழரின் சமய வழிபாட்டு முறை பற்றிய விளக்கக் குறிப்பு முன்பே கொடுக்கப் பட்டுளது. வடநாட்டுச் சாதாரண மக்கள், வேதகாலம் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்தில் வழிபட்டு வந்தது போலவே, வேதகாலத்திலும், தீ வழிபாடு இல்லாத, உள்நாட்டுக் கடவுள்களையே வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவரவர்களின் இன்றைய வழிபாட்டு நெறியைப் போலவே, தசுயூக்களின் வழிபாட்டு நெறி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டா ஆடல் பாடல் தொடர்ந்து வர கடவுள் திருமேனிகளுக்கு உணவு படைத்தலைக் கொண்டிருந்தது. வால்மீகி கூற்றுப்படி, சுக்கிரீவனின் முடி சூட்டு விழா, அவ்வகையில்தான் கொண்டாடப்பட்டது. அந்நாட்களில் முடிசூட்டு விழா, சமயச்சார்பற்றது அன்று. மாறாக சமயச் சார்புடைய ஒரு சடங்கே ஆகும்.
மகாபாரதப் போருக்குப் பின்னர், தீ வழிபாட்டு முறை மறையத் தொடங்கவே பிராமணச் சமய ஆசிரியர்கள், தங்கள் தொழில் அழிந்துபோனதை அறிந்து கொண்டு நாட்டில் அப்போதும் நடைமுறையில் இருந்துவந்த தீ வழிபாடற்ற வழிபாட்டு நெறியில் தங்கள் கருத்தைத் திருப்பியிருத்தல் வேண்டும். பெரும்பாலான மக்களின் இயல்பு, உணர்ச்சி வயப்பட்டுப் போவதே ஆதலின் – கட்புலனாகா நுண்ணிய உலகியல் கடந்த பொருளுணர்ச்சி குறித்த ஆய்வாம் உணர்விலேயே வாழ்ந்துவிடவல்ல உள்ளம் வாய்க்கப் பெற்ற, அறிவார்ந்த உணர்ச்சியினராகிய மக்கள், எக்காலத்தும் ஒரு சிலரே. அம்மக்களுக்குப் பத்தி(பக்தி) மார்க்கம் மீதான கவர்ச்சி பிராமணர்களின் கருத்தைப் பத்திவழியில் திருப்பியதற்கான மற்றொரு காணக்கூறு ஆதல் வேண்டும்.
அப்பிராமணர்கள், திரிமூர்த்திக் கொள்கையை, தாங்கிய சமயக் கொள்கையாம் உலகப் பருப்பொருளின் முக்குணக் கொள்கையோடு ஒன்றுபடுத்திட உருவாக்கினர். விட்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கும், சிவனின் எண்ணற்ற , ஆனால் தற்காலிக மானிட இயல்பு காட்டும் திருவிளையாடல்களுக்கும் உருவம் கொடுத்து வளர்த்தனர். (பாகவத புராணம் குறைந்தது 22 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது) (பிரம்மாவின் செயல்பாட்டுத்திறன், படைப்புத் தொழிலோடு தீர்ந்து விடுவதால், அவன் உயிர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயலான். ஆகவே, ஆகமங்கள், அவனை இருட்டடிப் புச் செய்துவிட்டன) அப்பிராமணர்கள், 108 வைணவ ஆகமங்களையும், 28 சைவ ஆகமங்களையும் இயற்றினர். 77. ஆகமங்களைக் கொண்டிருப்பதாய்ப் பெருமை சாற்றிக் கொள்ளும், சத்திக்கு(சக்திக்கு) உரியதான பிறிதொரு ஆகம நெறி பிற்காலத்தே வளர்ச்சி பெற்றது. இக்காலங்களில், சிவ வழிபாடும், கிருட்டிண வழிபாடும் வழக்காற்றில் இருந்தன என்பதற்குப் பாணினியும் சான்று பகர்கின்றார்.
பையப்பைய, வேதாந்த நெறியும், ஆகம நெறியும், ஒன்றையொன்று ஈர்க்கத் தொடங்கின புராணங்களில் அவை, அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. ஆனால் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடவில்லை, சங்கராச்சாரியார் காலத்திலும் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) அவை, ஒன்றாகி விடவில்லை என்பதை நாம் அறிகிறோம். வேதாந்த சூத்திரங்களை விளக்கிக் கூறும் நிலையில், பாசுபத சமயநெறியும், பாஞ்சராத்ர சமய நெறியும் ஒன்றோடொன்று முரண்பட்டவை எனக் கூறுவதில், அவர் பாத்ராயணரைப் பின்பற்றுகிறார் என்றா லும், அவருடைய ‘’பிரபஞ்ச ஹர்தயம்’’ என்ற நூல். உண்மையான ஆகம நூலே ஆகும்.
செவிவழிச் செய்திப்படி, விட்ணு, சிவன் சத்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் ஆகியோர் வழிபாட்டு நெறிகளை முறைப்படுத்தினார். அவற்றிடையே தாம் கண்டு நிறுவிய மதங்கள் பின்பற்றும் வழிபாட்டு முறையினைப் புகுத்தினார் என்ற காரணங்களால், அவர் சண்மத ‘ தாபனாசாரியர் (அறுவகை மதங்களைக் கண்ட ஆசிரியர்) எனவும் அழைக்கப்பட்டார். இவ்வகையால், தம்முடைய வேதாந்த நூல்களையும், ஆகம நூல்களையும், ஒன்றோடொன்று கலக்க விடாது வேறுபடுத்தியே அவர் வைத்திருந்தார் என்பதைக் காண்கிறோம். பொதுவாக ‘விசிட்ஃகாத்வைத வேதாந்தம்’ என அழைக்கப்படும் வைணவ வேதாந்த நெறியைத் தோற்றுவித்த யாமுனாச்சாரியர்தாம், வைணவத் தலைமைக்கு, (ப்ராமாண்யம்) அதாவது, வேதத்திற்கு நிகரானது, ‘சாத்விக ஆகமம்’ என்பதற்கு முதன்முதலில் வாதிட்டவராவர். உண்மையில் இராமானுச ஆச்சாரியர்தாம், அவை இரண்டையும் இரண்டற்று ஒன்றுபட இணைத்தவ ராவர். இது, ஆகம நெறிக் கொள்கைகள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்ததற்குப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்தது. தென்னிந்தியாவில், அவை எப்பொழுது, எவ்வாறு பரவியிடங்கொண்டன என்பது பின்னர் ஆராயப்படும். ஆரியத்துக்கு முந்திய இந்திய வழிபாட்டு நெறியிலிருந்து முகிழ்த்த ஆகம வழிபாட்டு நெறி, கி.பி. 55 ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியரின் உள்ளத்தை ஆட்கொள்ளவும், வேதாந்த நெறியோடு இரண்டறக் கலந்துவிட்டபோது, மீண்டும் வட இந்தியாவுக்கே பாய்ந்து சென்று, கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் இந்து சமயமாகவும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதலின், வட இந்தியாவில் ஆகம நெறிகளின் வளர்ச்சி குறித்து, இவ்வளவு விரிவாக ஆராய வேண்டியதாயிற்று
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment