௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்
(அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?
பிறமொழிக் கலப்பால் பிற மொழிகள் வளரலாம். ஆனால், தமிழ் அதற்குப் புறம்பானது. தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதைப் பலர் அறியாமையால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழ் வளம் பெறும் என்கின்றனர். இத்தகையோர் மொழி நூலறிவு அற்றவராவர். சமற்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்ததென்றும், அதனால் தமிழ்வளம் பெற்றதென்றும் பிதற்றும் பேதையர் பலராவர். இவர்தம் கூற்று முற்றும் பொய்யே!
வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் தமிழில் கலந்தமையால் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்தன. அங்ஙனமே வேற்றுமொழிச் சொல் எது தமிழில் வந்து கலந்தாலும், அதற்குரிய தமிழ்ச்சொல் ஒன்று வழக்கற்றுப் போகும் என்பதறிக.
இன்று நாம் பேசும் சொற்களுள் நூற்றுக்கு எண்பது சொற்கள் வேற்றுமொழிச் சொற்களே. ஐம்பது விழுக்காடு வடமொழிச் சொற்களாகும். தமிழில் சொற்கள் இல்லையெனின், பிறமொழிச் சொற்கள் கலந்தமை ஓரளவு பொருந்தலாம். ஆனால், உண்மை அதுவன்று.
வடமொழி, மக்களால் பேசவியலாத ஒரு மொழி; வடமொழி நூல்களாகிய இராமாயணம், மாபாரதம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் முதலியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் தமிழ் நன்கு கல்லாமையின், வடமொழிச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்தால் எழுதிவிட்டார்கள். அந் நூல்களைப் படித்தவர்களும், படிக்கப் பக்கமிருந்து கேட்டவர்களும், அச்சொற்களையே பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்தத் தொடங்கினர். அச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் வழக்கு ஒழிந்து போயின. பல்லாயிரம் வேற்றுமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரத் தொடங்கிவிட்டன்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எழுதப்பெற்ற தமிழ் நூல்களில் வடமொழிச் சொற்களோ, பிறமொழிச் சொற்களோ கலக்கவில்லை. அந்நூல்களை இன்று படித்துப் புரிந்து கொள்வது பலர்க்கு இயலாத ஒன்றாகிவிட்டது. அதனால், அவர்கள், “இது ஒரு தமிழா? கல்லையும் கடலையையும் வாயில் போட்டு மெல்லுவது போலிருக்கிறது” என்கின்றனர்.
இன்றைய எழுத்தாளர் பலர் தங்களுக்குத் தெரிந்த மொழிச் சொற்களையெல்லாம் பயன்படுத்தியே எழுதுகின்றனர். இந்தக் கொச்சைத் தமிழைப் படித்துப் பழக்கப்பட்டவர்களுக்குப் பண்டைய இலக்கியத் தமிழ் எங்ஙனம் புரியும்?
இன்றைய எழுத்தாளர் யாவரும் தமிழ்க் கொலைஞராவர். எத்துணைத் தமிழ்ச் சொற்களை வழக்கொழியச் செய்து வருகின்றனர். இவர்கள்தாம், “மக்கள்தமிழில்” எழுத வேண்டும் என்கிற மேதாவிகளாவர். “மக்கள்தமிழ்” என்று ஒரு தமிழ் இல்லை. தற்கால எழுத்தாளர் தொடர்பில்லாத நாட்டுப்புற மக்கள் பண்டைய இலக்கியத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதைக் கேட்டால் எமக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. அதே நேரத்தில் இன்றைய எழுத்தாளர் எழுதும் தமிழைப் படித்தால் மனவேதனையே உண்டாகிறது.
இன்றைய எழுத்தாளர் பல்லாயிரம் தமிழ்ச்சொற்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் கலந்துள்ளனர் என்பதை, திரு.நீலாம்பிகை அம்மையார் எழுதியுள்ள “வடசொல் தமிழ் அகரவரிசை”யையும், யாம் தொகுத்துள்ள “தமிழ் கற்போம்” என்னும் நூலையும் பார்த்துத் தெளிக.
தமிழ்க் கொலைஞர் செய்யும் தமிழ்க்கொலைக்குச் சில காட்டுகள் தருவாம்.
தமிழ்ச்சொல் பிறசொல்
செருக்கு அகங்காரம்
பொழுது அகசு
எழுத்து அட்சரம்
அறியாமை அஞ்ஞானம்
தீ, நெருப்பு அக்கினி
தலைமை அக்கிராசனம்
உறுப்பு அங்கம்
செரியாமை அசீரணம்
அழுக்கு அசுத்தம்
குதிரை அசுவம்
எட்டாம் நாள் அட்டமி
குருட்டுவாய்ப்பு, நன்னுகர்ச்சி அதிட்டம்
இடர் அபாயம்
மிகுதி, பெருக்கம் அமோகம்
கருத்தின்மை அலட்சியம்
செல்வம் ஆசுத்தி
உளக்கொதிப்பு ஆத்திரம்
உயிர் ஆத்(து)மா
சாறு (இ) ரசம்
அரத்தம், குருதி இரத்தம்
தேர் (இ)ரதம்
துன்பம் கசுட்டம்
திறை கிசுத்தி
ஊர் கிராமம்
குமரி குமாரி
இழப்பு நட்டம்
முழக்கம் கோசம்
பெருமை கௌரவம்
ஆயிரம் பெயர் சகசுரநாமம்
கழகம் சங்கம்
உடன்பிறப்பு சகோதரம்
இசை சங்கீதம்
திங்கள், மதி சந்திரன்
மகிழ்ச்சி சந்தோசம்
ஐயம் சந்தேகம்
உருவேற்றல் செபம்
சோறு சாதம்
அறிவு ஞானம்
பொத்தகம் புசுத்தகம்
கேள்வி, சிக்கல் பிரச்(சி)னை
நலம் சௌகரியம்
ஒன்பானிரவு நவராத்திரி
அன்பு பட்சம்
பறவை பட்சி
எதிர்வழக்காளி பிரதிவாதி
சாவு மரணம்
தாய் மாதா
இரத்தல் யாசகம்
நல்வினை யோகம்
பண் (இ)ராகம்
குறி, அடையாளம் (இ) லிங்கம்
ஏற்றல் வகித்தல்
பொருள் வசுத்து
அறிவு, பகுத்தறிவு விவேகம்
மேலும் பலவுள.
தன்மானமுள்ள தமிழர் இவற்றை ஆராய்ந்து தமிழ்வாழ, வளமுற வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி, பேசி தமிழைக் கொலை செய்ய வேண்டாமென்று பணிவன்புடன் வேண்டுகிறோம்.
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment