Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி

 

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : 

நிலவுக் காட்சி



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி-தொடர்ச்சி)

          தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில்   

          வெண்மதி வட்டம் விட்டொளி கான்று    185

          தண்புனல் கானம் தளிர்கொடியாவும்

வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம்;

அள்ளிய விழியால் ஆர வுண்டனம்

உள்ளந் துள்ளிய உவகைப் பாங்கினைத்        

          தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி!     190

          உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால்   

—————————————————————

          வாலை – இளமை, நறவம் – தேன், மாந்திடும் – பருகும், புள்ளினம் – பறவைகள், கானம் – காடு.

+++++++++++++++++++

          பைந்தொடீ! முன்பே பாடுந் திறனும்

இயைந்துளேன் ஆதலின் வாய்விட் டிசைத்தேன்;

மயங்கிய துணைவன் வாயிசை கேட்டு

          வியந்துரை கூறி நயந்தனன் ஆக  195

          எற்புகழ்ந் துரைத்த இசைமைத் திறலால்

முற்படு செருக்குள் மூழ்கி இருந்தேன்;  

          யாழொலி யோவென யாண்டிருந் தோஒரு

மெல்லிசை நல்லிசை மெல்லென வந்தது;      

          மெல்லிய அவ்விசை மென்கால் தன்னொடு    200

          மிதந்து படர்ந்தென் செவியகம் புகுந்தது;

புகுந்தஅவ் விசையாற் புலமெலாம் ஒன்றாய்ச்

சொக்கிய விழியும் சோர்வுறும் மொழியும்

உடையே னாகி உணர்வு தளர்ந்திடும்   

          நடையே னாகி நல்லிசை வருதிசை       205

          மருங்கினை நாடி நெருங்கினேன்; ஆங்கண்  

          மருங்குல் கொடியாய் மதியம் முகமாய்க்

கருங்கண் குவளையாய்க் காட்டும் ஒருமகள்

இனிய காட்சியள் இசைமழை பொழிந்து       

          தனிய ளாகித் தனைமறந் திருந்தனன்;  210

          செவியுள் இசையும் சேலிரு விழியுள்

அவளின் உருவும் அகத்துள் மகிழ்வும்

நிறைந்திடப் பெற்றேன் நின்றேன் அவள்முன்;

அகமும் முகமும் அருள்நிறை விழியும்  

          உகந்தும் மலர்ந்தும் உற்றெனை நோக்கி        215

          வருக வருகென வாய்மலர்ந் தருளினள்;

—————————————————————

          மென்கால் – மெல்லிய காற்று, புலமெலாம் – ஐம்புலன்கள், மருங்குல் – இடை

++++++++++++++++++++++++++++++++

          தூயவள் தன்னைத் தொழுதவண் இருந்து

தோயும் நின்னிசை தாயே ஈங்கெனை

ஈர்த்த தெனநான் இயம்பலும், இன்னிசை      

          வார்த்தனள் மீண்டும்; மகிழ்ந்திசை பருகி       220

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்