அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85 – தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டா
ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான்.
அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு வந்து, அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.
அப்போது அங்குக் கூடத்தில் கட்டியிருந்த எருமை மாடு தலையை வேகமாக ஆட்டி ‘ம்மா’ என்று கத்தியது. வந்தவன் உடனே பயந்து, இது எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ஒடியே போய்விட்டான். உடனே தாசிப்பெண் எருமைமாட்டின் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் – இந்தா இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று மீண்டும் மீண்டும் கெஞ்சுவதை அந்த நேரத்தில் வந்த அவள் கணவன் பார்த்துவிட்டுக் காரணம் கேட்டான். அவளும் ‘பழைய சிநேகன் ஒருவன் வந்தான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்’ என்ற செய்தியைச் சொல்லிவிட்டாள்.
உடனே இவனும் ‘நம் குடும்பக் கெளரவம், பேர் எல்லாம் கெட்டுப்போகுமே என்று கருதி, இதை யாரிடமும் சொல்லாதே’ என்று, எருமையின் மற்றொரு காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
வெளியே போயிருந்த தாயும் தந்தையும் வரவே, அவர்களும் இதுவெல்லாம் என்ன என்று மகனை விசாரித்து, செய்தியைத் தெரிந்துகொண்டதும், ‘ஐயோ! எங்கள் மானமே போகிறதே. எங்களைக் காப்பாற்று’ என்று எருமையின் மற்ற இரண்டு கால்களையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்கள்.
எருமை மிரண்டுபோய்க் கயிற்றை அறுத்துக் கோண்டு ஓடியது.
நம்ம வீட்டு எருமை ஊரெல்லாம் போய்ச் சொல்லி விடுமே என்று பயந்து, நாலுபேரும் கூடி என்ன செய்வது என ஆலோசித்தனர்.
உடனே ஒரு தமுக்கு அடிப்பவனைக் கூப்பிட்டு, “எங்க வீட்டு எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டது. அது எங்கள் மருமகள் அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்ததாகத் தவறாக வந்து சொல்லும். அது உண்மையல்ல. ஆதை யாரும் நம்ப வேண்டா” என்று ஊர் முழுவதும் நன்றாகப் பறை அறைந்து சொல்ல ஏற்பாடு செய்தனர்.
எப்படி இச்செய்தி பரவுகிறது பாருங்கள்!
————-
87. கரையேறுதல்
ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில் முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.
குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் வருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
அவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.
————–
88. கடையும் உடையும்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.
அங்கே, கடற்கரையில் ஒரு சிறுபையன் அலையை நோக்கி வேகமாக ஒடுவதும், தண்ணிரைக் கண்டதும் பின்வாங்குவதும் பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்போது ஒரு பெரிய அலை வந்தது.
அதைக்கண்ட குடியானவன் பயந்துபோய், அப் பையனின் கூட வந்தவரைப் பார்த்து, “சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
அதுகேட்ட ஆள் சிரித்து, “அது பையன் அல்ல; பெண்” என்றார். அப்படியா? நீங்கள்தான் அப் பெண்ணின் தந்தையா?” என்று கேட்டான், குடியானவன்.
அவர் “இல்லையில்லை. நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல. தாய்” என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.
பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை , மாற்றி நடந்துகொள்ளும் வேடிக்கையைப் பம்பாயில் பார்த்துவிட்டு வந்த அவன், தன் ஊர் வந்ததும் அனைவரிடமும் அதைச் சொல்விச் சொல்லி சிரித்தான்.
எப்படி நம்நாட்டில் நடையும் உடையும்?
————
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment