Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி

 

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி)

          வான முகட்டின் வாய்திறந் திறங்குதல் 

          மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின்    140

          ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும்

பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;  

—————————————————————

          மல்லல் – வளப்பம், தண்டாது – இடைவிடாது, கங்குல் – இரவு, மான – போல, ஒய்ய்யெனும் – ஒலிக்குறிப்பு, எருத்து – கழுத்து.

++++

வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண்

தானது என்னத் தயங்கி நின்றிடும்;        

          விலங்கினம் அன்றி வழங்குதல் இன்மையின் 145

          கலங்கினென் ஆயினும் காணாஅ இன்பமும்

அலைவுறும் மனத்தில் அளப்பரும் அமைதியும்

நிரம்பிய தாதலின் நெடும்பொழு திருந்தேன்

திரும்பவும் நினையின் அரும்பிடும் அந்நிலை;        

          சிற்றருவி என்று செப்பிடும் ஒன்று          150

          மற்றொரு பாங்கரின் உற்றது கண்டு

பற்றொடு சென்று பைம்புனல் ஆடினம்;

உருவம் சிறிதென உள்ளினென் நிற்ப

அருவியின் வேகம் அறியா என்றன்       

          கூந்தலும் ஆடையும் குலைத்துடன் வீழ்த்த      155

          இடுக்கண் வருங்கால் இமைப்பில் வந்துடன்

தடுக்கும் நட்பினை நிகர்க்கும் கைகள்

உடுக்கையைக் காத்தன; உருவுகண் டெள்ளுதல்

வடுப்படு செயலெனும் வாய்மொழி உணர்ந்தேன்; 

          செந்தமிழ் ஒன்றே தெலுங்குடன் கன்னடம்     160

          சந்தம் மிகுமலை யாளம் துளுவென

வந்தது போல வாய்ந்தஓர் அருவி

ஐந்து கிளையாய் ஐந்தருவி என்னத்

தவழ்ந்திடல் கண்டு தனித்தனி அவற்றிற்       

          சிவந்திட விழிகள் சிலபொழு தாடினம்;  165

          இங்ஙனம் இனிமையில் இருந்துழி ஒருநாள்

பொங்குமா கடலெனப் பொங்குபே ரருவியில்         

—————————————————————

          நிவந்த – நிமிர்ந்த, வால் – தூய்மை.

++

          துங்கநீ ராடித் துணையுடன் கூடிக்

குறும்பலா வடியில் இருந்தனென்; ஆங்கண்  

          செங்கதிர் மேலைத் திசையினில் மறைய       170

          மாலைக் காதலன், மண்மகள் போர்த்த

சீலை யாகிய செழுமிள நாற்றினை

வாலைக் குறும்பென வளரிளந் தென்றற்

கைகொடு வருடி அலைத்திடல் கண்டும்,        

          கடுவனும் மந்தியும் கனிவகை கொடுத்துத்    175

          தொடுவதும் விடுவதும் தொடர்ந்துடன் ஓடிக்

கிளைதொறும் தாவித் திரிவது கண்டும்,

மென்சிற கொலியால் வீணையின் இசைத்து

நன்மணம் பரப்பும் பன்னிற மலர்தொறும்     

          நறவம் மாந்திடும் வண்டினம் கண்டும், 180

          பறந்தும் இருந்தும் பாடும் புள்ளினம்

விருந்தெனச் செவிவழிக் கிருந்தன கண்டும்,

நகைத்துரை யாடிக் களித்தவண் இருக்கத்    

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்