அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 80-82 : தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
83. விலையேற்றம்
சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் –
ஆம், ஆம், யானை விலை குதிரை
குதிரை விலை மாடு
மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை விலை கத்தரிக்காய்
ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன்.
அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.
இப்பொழுது விற்பது – யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.
‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது – என்ன செய்வது?
—————-
84. நல்ல வைத்தியர்
செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன் என்ன சொல்வான், அதற்கு நாம் என்ன சொல்வது என்று தானே சிந்தித்தான்.
முதலில் நாம் போனதும் நோயாளியை, ‘நோய் எப்படி இருக்கிறது’ – என்று கேட்போம். அவன், ‘கொஞ்சம் குணமாக இருக்கிறது’ – என்று சொல்வான். பின் நாம் ‘ஆகாரம் என்ன’ – என்று கேட்போம். அவன், ‘ஏதோ கஞ்சி’ – என்று சொல்வான். நாம், யார் டாக்டர்’ என்று கேட்போம். அவன் யாராவது டாக்டர் பெயரைச் சொல்வான்.
அவற்றிற்கு ஏற்றபடி பதில் சொல்வோம். இவ்வாறு (பேச்சு நடைமுறை) முன்கூட்டியே முடிவு செய்து கொண்டே, செவிடன் நோயாளியைப் பார்க்கப்போனான் போனதும், முதற்கேள்வி – ‘நோய் எப்படி இருக்கிறது’ – என்று கேட்டான்.
அவன் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது.’ பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை’ என்றான்.
செவிடன் (காதுதான் கேட்காதே) தன்திட்டப்படியே ‘நானும் அப்படித்தான் நினைத்தேன் – அதுதான் சரி விரைவில் எல்லாம் சரியாய்விடும்’ – என்று சொல்லிவிட்டு, (அடுத்த கேள்வியாக) ‘ஆகாரம் என்ன உண்கிறீர்கள்? – என்று கேட்டான்,
அவனது முதல் பதிலையே கேட்டதனால் வருந்திய நோயாளி – “ஆகாரம் மண்ணுதான்” என்று மிகவும் வெறுப்புடனே கூறினான்.
(இதைக் கேளாத செவிடு) “அதையே சாப்பிடு; அதுதான் நல்ல உணவு” என்று சொன்னான்.
அடுத்து, ‘எந்த வைத்தியர் வந்து பார்க்கிறார்?’ என்று கேட்டான்.
நோயாளி (புண்பட்ட மனத்துடனே நொந்து) ‘எமன்தான் டாக்டர் – ’ என எரிசலாகச் சொன்னான்.
உடனே செவிடன்,
“அவரே நல்ல டாக்டர். அவரையே வைத்துப்பாரு, அடிக்கடி வருகிறாரா? – எல்லாம் சரியாப் போய்விடும்’ – என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டான்.
நோயாளி – துயரம் தாங்காது வருந்தினான் – இவன் செவிடன், காது கேட்காது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் செவிடனுக்குத் தன் காது செவிடு எனத் தெரியும். இதை நோயாளிக்குத் தெரிவித்திருந்தால், இருவருக்குமிடையே – இந்தத் தொல்லைகள் வளர்ந்திருக்காது.
உள்ளதை மறைத்து வீண் பெருமை பாராட்டுவதனால் நேரிடுகின்ற விளைவுகளில் இதுவும் ஒன்று.
————-
85. குருவும் சீடர்களும்
தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு சொன்ன பின்புதான் எந்த வேலையையும் செய்வர். ஆகவே அவர்களுக்குச் சிந்தனையறிவே வளரவில்லை.
ஒருசமயம் குரு அருகில் உள்ள ஓர் ஊருக்குக் குதிரையில் ஏறிப் புறப்பட்டார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஐந்து கல் தூரம் சென்றதும் தன் பட்டாக்கத்தியைக் காணாத குரு சீடர்களை அழைத்து. ‘வெள்ளிப் பிடியில் தங்கமுலாம் பூசிய என் பட்டாக்கத்தி எங்கே? என்று கேட்டார். அவர்கள் மிகவும் பயபக்தியுடன் “குருவே, அது அப்பொழுதே கீழே விழுந்துவிட்டது. ஆனால் நீங்கள் எதுவும் சொல்லவில்லையாதலால் நாங்கள் எடுத்துவரவில்லை” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வருந்திய குரு, ‘இனிமேல் எது கீழே விழுந்தாலும் எடுத்து வரவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மறுமுறை பயணம் போகும்போது, நடுவழியில் சீடர்கள் “பயணத்தை நிறுத்துங்கள். குரு சொன்னதுபோல் செய்ததில் குதிரைச் சாணம் கொண்டு வந்த சாக்குகளில் நிரம்பிவிட்டது. இனி வேறு வழியில்லை” என்று குருவிடம் முறையிட்டனர். உடனே குரு “அட முட்டாள்களே! எதை எடுப்பது; எதை விடுவது என்பது தெரியாதா” என்று கூறி எடுக்கிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், விடுகிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், குரு எடுத்துச் சொல்ல, சீடர்கள் அதைக் கவனமாக எழுதிக் கொண்டனர்.
வேறொரு சமயம், குருவானவர் குதிரையில் ஏறிச் சவாரி செய்துகொண்டு மலைப்பக்கம் போனார். அப்போதுகுதிரை கல் தடுக்கி விழுந்தது. கீழே விழுந்த குரு, அருகில் உள்ளப் பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு கொண்டே போனார். அவரைப் பிடிக்க ஒடிய சீடனை மற்றொருவன் தடுத்து, “அடேய்! அவரைத் தொடாதே. நமக்கு கொடுத்தப் பட்டியலில் குருவின் பெயர் இல்லையே! பெயர் இல்லாதபோது அவரை எடுக்கலாமா?” என்று விவாதம் பண்ணிக் கொண்டிருந்தான்.
குதிரையிலிருந்து விழுந்த குருவும் அடிபட்டு இரத்தம் கசியப் புலம்பிக்கொண்டே பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்தார்.
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment