Skip to main content

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்




தலைப்பு-திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை, குறளேந்தி ந.சேகர் l thalaippu_thiruvalluvar_kaattum_vaazhkaimurai_na-sekar

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை

உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.
  திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.
  இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள்  தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.
 முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது பண்புகள், வழிபாடு, அதனால் பெறும் பயன்களை எடுத்துக்காட்டி மனிதர்கள் அனைவரும் வணங்கத்தக்க கடவுளை வழிபடுவதையே சிறந்த கடவுள் கொள்கையாகக் காட்டுகின்றார்கள்.
  ‘தெய்வம்’ என்கிற சொல்லினைத் திருவள்ளுவர் ‘கடவுள் வாழ்த்து’ என்ற முதலாவது அதிகாரத்தில் சொல்லவே இல்லை என்பது பெரிதும் சிந்திக்க வேண்டியதாகும். இக்காலத்தில் ‘தெய்வம்’ என்ற சொல் இறைவனைக் குறிக்கும் சொல்லாகவே நடைமுறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அப்படி அல்ல!
கடவுள் வேறு – தெய்வம் வேறு.
கடவுள் ஒருவர் – தெய்வங்கள் பல.
  கடவுள் எல்லாம் வல்லவர், எப்போதும் உள்ளவர், பிறப்பு – இறப்பு இல்லாதவர். ஆனால், தெய்வங்கள் அப்படி இல்லை. தெய்வப் பிறவி, தெய்வப் பிறப்பு என்று சொல்வார்களே, அப்படித் தெய்வங்கள் ஊழ்வினைப் பயனால் பிறக்கின்றன. பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும். எனவே, தெய்வங்கள் நிலையானவை அல்ல என்பது பெறப்படும். ஆகவே, உயர் பிறப்புடைய மனிதன் எல்லாம் வல்ல, எப்பொதும் உள்ள, பிறப்பு இறப்புகள் இல்லாத, நிலையான, உண்மையான கடவுளையே எண்ணி, நோக்கி வழிபட வேண்டும்; வணங்க வேண்டும் என்பது நம் தமிழ் மகான்களின் கூற்றாயிற்று.
  அந்த ஒரே கடவுள் கொள்கையில் இறைவனை உறுதியுடன் வழிபடுபவர்கள் அடையும் பெரும்பயன்களை,
நிலமிசை நீடு வாழ்வார்
யாண்டும் இடும்பை இல
நெறிநின்றார் நீடு வாழ்வார்
மனக்கவலை தீர்தல் – என்ற வரிகளினால் திருக்குறள் அறிவிக்கின்றது.
  அடுத்தபடியாக, முதற்பாலாகிய அறத்துப்பால் மனிதனுக்குச் செய்யத்தக்கன, செய்யத்தகாதன கூறி வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய நல்வாழ்வை விளக்குகின்றது.
  உலக வளர்ச்சியும் அன்பு வளர்ச்சியும் இல்வாழ்க்கையில் அமைந்திருப்பதை இல்லறவியலில் (இருபது) அதிகார வரிசையால் நன்முறையில் திருக்குறள் அறிவிக்கின்றது. இல்லறம் நடத்துவோர் யாரோடும் பேசினாலும் இனிமையாகப் பேச வேண்டும்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (அ.10
; கு.96).
பிறர்க்கு நன்மை தரும் சொற்களை இனிமையானவற்றைச் சொல்பவனுக்குத் தீங்குகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும். அடுத்து,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (அ.10; கு.100)
  இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்கள் பேசுவது பழங்களை விட்டுவிட்டுக் காய்களைப் பறித்துக் கொள்வது போலத்தான்.
  இல்லறத்தார்க்கு செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை – அதாவது, யாரிடத்திலும் சமமாக நடந்து கொள்ளும் குணம் – வேண்டும்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின். (அ.12
; கு.116)
  ஒருவன் நடுநிலைமை நீங்கி மாறான செயலைச் செய்யத் துணியும்போது மனச்சாட்சி ‘நான் கெட்டுப் போவேன்’ என்று அறிய வேண்டும்.
அடுத்து, இல்லறம் நடத்துவோர்களுக்கு ‘அடக்கம் உடைமை’ மிக முதன்மையான நெறிமுறையாகும். குணம், மொழி, மெய் ஆகியவற்றைத் தீ நெறியில் செல்ல ஒட்டாமல் அது தடுத்து அடக்கத்துடன் இருக்கச் செய்கிறது.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (அ.13
; கு.127)
எதை அடக்கி ஆளாவிட்டாலும் நாக்கை அடக்கி ஆள வேண்டும். நாக்குப் பதற்றமில்லாத அடக்கமே மிகவும் தலையாயது என்று திருக்குறள் அந்த அடக்கத்தை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றது.
மேலும், மக்களுக்குரிய ஒழுக்கத்தில் நின்று வாழவும் ஒழுக்கம்தான் மனிதனுக்கு விழுப்பமான உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரை விடப் பேணிக் காத்து வாழவும் வழிகாட்டுகின்றது. இதை –
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (அ.14
; கு.133)
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (அ.14
; கு.134)
என்கிற குறள்களால் அறியலாம். ஒழுக்கமுடைமையினால்தான் ஒருவன் உயர்ந்த பிறப்புடையவனாகக் கருதப்படுகிறான். ஒழுக்கம் கெட்டவன் தாழ்ந்த பிறப்புடையவனாகவே கருதப்படுவான் என்று விளக்கி சாதியில் ஒன்றும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது திருக்குறள்.
  மேலும், ஒழுக்கங்கெட்டு, பிறனுடைய இல்லாளை விரும்பாதிருக்க வேண்டும் என்றும் பிறனுடைய இல்லாளை விரும்பித் தீமை புரிந்து ஒழுகுவார்களானால்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (அ.15
; கு.146)
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார். (அ.15
; கு.143)
என்று பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் அவனை விட்டு ஒருக்காலும் நீங்காது என்றும் அவர்கள் இறந்தவர்களே ஆவார்கள் என்றும் மிகவும் கண்டிக்கிறது திருக்குறள்.
  பொறுமை என்னும் நற்பண்பைப் பெற்றிருத்தலும் பொறாமை என்னும் தீயகுணம் இல்லாதிருத்தலும் இல்லறத்தானுக்கு மிகவும் கட்டாயமாகும்.
  அடுத்து, இல்லறத்தார்களை ஒப்புரவு அறிதல், ஈகை, புகழ் ஆகிய நல்லறங்களைச் செய்து மனிதன் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்து நிலைத்து நிற்கும் புகழினைப் பெற்றுப் பயனுள்ள வாழ்க்கையாக இருந்திட திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை சிறப்பாக அமைந்திருக்கிறது.
  அடுத்ததாகத் துறவறவியல் வருகின்றது. இந்தத் துறவறவியல் திருக்குறளின் உயிர் நாடி என்றே கூற வேண்டும். திருக்குறளின் ‘இதயப் பகுதி’ என்றும் கூறுவார்கள்.
  இவ்வியலில் மனிதனுக்கு விருதப் பகுதி, ஞானப் பகுதி என்று இரண்டு பகுதிகளை எடுத்துக்காட்டி மனிதப் பிறப்பு, அதன் நோக்கம், அடைய வேண்டிய இலக்கு, செல்லும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வழிகாட்டுகின்றன வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறைகள்.
  குறிப்பாக, மனிதன் அருள் நெறியைக் கடைப்பிடித்து எல்லா மனிதர்களிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்தும் கருணையோடு நடந்து  கொள்ள வேண்டும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (அ.27
; கு.264)
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (அ.27
; கு.267)
ஆகிய குறள்கள் தவம் செய்வதனால் மனிதனுக்கு ஆற்றல்கள் உண்டாகின்றன, தவ வலிமை கூடும், தவத்தின் வலிமையால் தக்க பேரறிவு (ஞான) ஒளி உண்டாகும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
  அடுத்து, ‘கள்ளாமை’ பேசிப் பிறருடைய பொருளைக் களவு செய்தற்கு நினையாமல் இருக்க வேண்டும் என்றும் ‘வாய்மை’யில் வாயால் பேசப்படுகிற உண்மையைத்தான் பேச வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.
  ‘வெகுளாமை’ அதிகாரத்தில் சினத்தினால் வரும் தீமைகளும் அவற்றை நீக்குதலும் பற்றி எச்சரிக்கை செய்கின்றார்கள். அதாவது,
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (அ.31
; கு.304).
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (அ.31
; கு.305)
ஒரு மனிதனுக்கு இன்பத்தைக் கெடுக்கக்கூடியது சினம் என்றும், அச்சினத்தை அடக்காவிட்டால் அது தன்னையே அழித்துவிடும் என்றும் மிகவும் கண்டித்துச் சொல்கின்றார்கள். அடுத்து,
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர். (அ.32
; கு.320)
துன்பங்கள் எல்லாம் துன்பங்களைச் செய்தவர்களுக்கே வந்து சேரும். பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்று அழுத்தமாகச் சொல்கின்றார்கள்.
கொல்லாமை’யில் எவ்வுயிரினையும் கொல்லாதிருத்தலாகும். எந்த நோக்கத்தைக் கொண்டும் பிற உயிரைக் கொன்று போக்காதிருப்பது பற்றி,
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. (அ.33
; கு.327)
என்கிறார்கள். உயிரை ‘இன்உயிர்’ என்று கூறுகின்றார்கள். அதாவது, இனிமையான உயிர் என்று கூறுகின்றார்கள். இது மிகவும் சிந்தனைக்குரிய சொல்லாகும் என்பது குறிப்பிடற்பாலது.
  மேற்கூறிய அறங்களை உறுதியுடன் கடைப்பிடித்து மிகவும் பண்பட்ட நிலை அடைந்து மேலான அறிவுநிலை பெற்றவனை,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (அ.35; கு.350)
என்றும்,
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.(அ.36; குறள் 360)
என்றும் கூறுகின்றது திருக்குறள். அஃதாவது அவாவை (ஆசையை) முற்றிலும் விட்டு விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் இறைவனுடைய பற்றினைப் பிடித்துக் கொள் என்றும் அவா, சினம், அறியாமை இந்த மூன்று குற்றங்களும் அறவே இல்லாமல் போனவனுக்குப் பிறவித் துன்பமும் இல்லாமல் போகும் என்றும் உறுதியாகக் கூறுகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம்
மாணாப் பிறப்பு. (அ.36; கு.351)
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருளாக உணர்ந்து விடுகிற மயக்கத்தால் கீழான பிறவி வந்துவிடும்.
  கடவுள் அல்லாதவற்றைக் கடவுள் என்று உணர்ந்து விட்டவனுக்குக் கீழான பிறவி வந்து விடும். மனிதர்கள் மிகவும் பண்பட்ட நிலை அறிந்து மேலான அறிவுநிலை (ஞானம்) பெற்றுவிட்டால் கடவுளைத்தான் வணங்குவார்கள். அதாவது, கல்வி கற்றவர்கள். கடவுளைத்தான் வணங்குவார்கள். கல்வி கற்காதவர்கள் எதையும் கும்பிடுவார்கள். பிறப்பு, வீடு என்பவற்றின் காரணங்களை ஐயமின்றி உண்மையாகத் தெரிந்தவர்கள் கடவுளைத்தான் வணங்குவார்களேயொழிய சிறு தெய்வங்களை வழிபட மாட்டார்கள். அதாவது, சிறு தெய்வங்கள் என்றால் காட்டேரி, பாம்பு, அனுமன், இடும்பன், கடம்பன் இன்னும் சில சிறிய தெய்வங்கள் ஆகியவற்றை மெய்ப்பொருள் என்று மயங்கிவிடக்கூடாது என்பது உணரத்தக்கது.
 பேரறிவின் முதற்படியான நிலையாமை கண்டு துறவுள்ளம் எய்தி, மெய்யுணர்ந்து, அவா நீங்கப் பெற்றுப் பேரின்ப நிலையான வீடு பெறும் வழிமுறையை இனிமையாகத் திட்டவட்டமாகக் காட்டுகின்றது வான்புகழ் வள்ளுவம். இதை –
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (அ.37
; கு.370)
என்ற குறள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
  அடுத்தபடியாக, பொருட்பால் பகுதியில் மக்கள் சமுதாயம் நன்றாக நடைபெறுவதற்கு மனிதன் அறிய வேண்டிய அறிவுகளும் செய்ய வேண்டிய நன்முயற்சிகளும் விலக்க வேண்டிய தீமைகளும் பற்றிப் பற்பல முறைகளில் வழிகாட்டுகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.
  நாட்டுத் தலைவனுக்கும் மக்களுக்கும் அமைய வேண்டிய அறிவையும் திறமைகளையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது திருக்குறள். அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய அறிவுகள் நிறைந்து கொடை, அளி (அருள்), செங்கோல், குடி ஓம்பல் நிறைந்திருக்க வேண்டும் என்றும் கற்க வேண்டியவற்றைக் கற்கவும், கல்வி இல்லாமையின் இழிவும் பேசி, கல்வி இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது என்றும் உறுதிபடக் கூறுகின்றது. கற்றறிந்தார் சொல்வதைக் கேட்டல் மூலமாகவும் கல்வி கேள்விகளினால் அறிவுடையவனாக வழிகாட்டுகின்றது.
  நல்ல அறிவுள்ள பெரியோர்களை நட்பாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிலும் குணத்திலும் ஒழுக்கத்திலும் இழிவானவர்களைச் சேர்க்கையால் பல தீமைகள் வரும் என்றும் திருவள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கையாகக் கூறுவார்கள். இது மிகவும் பயனுடைய அறிவுரையாகும்.
  மேலும், மனிதனுக்கு ‘மான உணர்ச்சி’ வேண்டும் என்றும் அந்த மான உணர்ச்சி உயர்ந்த கொள்கைகளுக்காகவும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றது திருக்குறள். சிறப்பில்லாத, பயனில்லாத, பொறுமையில்லாத குறுகிய மான உணர்ச்சி அதாவது ‘மாண்பிறந்த மானம்’ இருக்கக்கூடாது என்றும் ‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்றும் கூறிக் கீழ் நோக்கிப் போகும் எண்ணங்களை எண்ணக்கூடாது என்றும் கண்டிக்கின்றது திருக்குறள்.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (அ.80; கு.798)
துன்பக் காலத்திலே எட்டிப் பார்க்காமல் போனவர்களுடைய நட்பைக் கொள்ளக்கூடாது என்றும் வள்ளுவப் பெருமான் அறிவுரை கூறுவார்கள்.
‘உள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல்’ என்று நமது எண்ணங்கள் உயர்வான, மேன்மையானவற்றையே எண்ணி உயர்ந்து வாழ வேண்டுமென்று திருக்குறள் வழிகாட்டுகின்றது.
அடுத்து, மனிதர்கள் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்றும், தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றும் கீழ்வரும் குறள்கள் வழிகாட்டுகின்றன.
கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். (அ.107
; கு.1061)
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். (அ.107
; கு.1065)
ஆகிய குறள்கள் மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய குறள்கள் ஆகும். அடுத்து,
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (அ.92
; கு.920)
வரையறையில்லாத வரைவின் மகளிரும் கள்ளும் சூதும் ஆகிய மூன்றிடமும் செல்பவர் நீக்கப்பட்டவர் என்று மிகவும் எச்சரிக்கை செய்யும் குறள்கள் ஆகும் இவை.
  மேலும், மனிதத்தன்மை எதுவுமே இல்லாத கீழோர் இயல்பை, அதாவது எந்த நற்குணமும் இல்லாத மிகவும் கீழ்த்தரமான மனிதர்கள் உண்டு என்பதைக் கூறும்போது கயமையைப் பற்றிப் பேசுவார்கள்.
  அடுத்தபடியாகத், திருக்குறளின் இறுதிப்பாலான இன்பத்துப்பாலில் வயதுக்கு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாகக் காதல் வருவதையும் அக்காதல் தூய்மையாகவும் நீதியுள்ளதாகவும் வாய்மைக்கும் கட்டுப்பட்டதாகவும் எடுத்துக்காட்டி உறுதியான காதல் வாழ்வைக் கடைப்பிடிக்கச் செய்து கற்பொழுக்கத்துடன் வாழச் செய்கிறது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.
  மேலும், மனிதன் ஆதிபகவனாகிய முழுமுதற் கடவுளை அடைக்கலம் அடைந்து அதன் மூலம் பிறப்பு இறப்பு அற்ற வீடுபேறு அடைவதே மனிதனாகப் பிறவி எடுத்ததன் நோக்கமாகும் என்று வலியுறுத்தும் திருக்குறள், வீடு பேறு அடைய இல்லறத்தின் மூலமும் துறவறத்தின் மூலமும் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும் அறங்களையும் குறள்பாக்கள் மூலம் தெளிவுபடுத்துகிறது.
  மேலும், ஊழ்வினை காரணமாகப் பிறந்து வாழ்ந்து இறந்து மீண்டும் பிறக்கும் பிறவிச் சூழல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் அப்பிறவிச் சூழலை நிறுத்திப் பிறவாமை பெறுவதே பேரின்பம் என்று கூறுவதோடு இன்னும் ஒருமுறை,
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (அ.37; கு.370)
என்று உறுதிப்படுத்துகின்றது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.
  ஆகவே, மனிதன் அன்போடும் பண்போடும் அறத்தோடும் வாழ்ந்து இம்மைப் பயனும் மறுமைப் பயனும் பெற்று முழுமையான நல்வாழ்வை அடைய, அத்தகைய நிலைக்கு மனிதக்குலத்தை அழைத்துச் செல்ல வள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறைக்கு ஆற்றல் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
 குறிப்பாக, நம் தமிழ் மக்கள் திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்று உணர்ந்து கடைப்பிடித்து ஒழுகி, திருக்குறள் வழியில் வாழ்ந்து, பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் இனிய மக்களாகத் திகழ வேண்டும் என்பது நம் தமிழர்களின் நல்வாழ்வை விரும்பும் அனைவரின் மிகப் பெரிய விருப்பமாகும்.
– குறளமுதன், குறளேந்தி ந.சேகர்
திருக்குறள் தேர்வுப் பொறுப்பாளர்
கலைமகள் தமிழ்க்கல்வி நிறுவனம்
தட்டோன் மாநகர், மியான்மா

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்