உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்
அகரமுதல 163,
கார்த்திகை 19, 2047 /
திசம்பர் 04, 2016
உவமைக் கவிஞர் சுரதா
காதல் எப்படிப்பட்டது?
வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா,
“மலரினும் மெல்லியது காதலே”.
காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள்.
மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் – இப்படி, “சுடர் மின்னல்
கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”.
கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது.
காலையில் சூரியனைப் பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும்.
இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் – அறிவோம் நாம். நாளும் இவை நடைபெறத்தான் செய்கின்றன.
ஆனால் எப்போதோ மேகம் கருத்து, மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அதுவும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்து விடுகிறது.
அந்த ஓரிரு மணித்துளிகளில் பட்டுத்
தெறிக்கும் மின்னலின் சுடரைக்கண்டு தாழை மலர்கிறது, என்ற அறிவியல் உவமையைக்
காதலுக்குள் நுழைக்கிறார் கவிஞர் சுரதா.
அதனால்தான் அவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் முதன்மை மாணாக்கருள் சுரதாவும் ஒருவர்.
1941ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 14ஆம் நாள் பாவேந்தரை முதல்முதலாகச் சந்தித்தார் சுரதா.பாரதிதாசனாரை ஆசானாக ஏற்றுக்கொண்டு, அவரின் நினைவைத் தாங்கும் வண்ணம்,
‘சுப்புரத்தினம்’ என்ற பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து சுரதா ஆனார் நம் கவிஞர்.
பாவேந்தரின் புகழ்பெற்ற ‘புரட்சிக்கவி’ பாவியம், நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் அமைச்சராக நடித்தவர் சுரதா. அந்நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் என்.எசு.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது.
1947ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘பொன்னி’ இதழில் வெளியான சுரதாவின் ‘சொல்லடா’எனும் கவிதை அவரை அடையாளம் காட்டியது.
‘தலைவன்’ என்ற இதழின் ஆசிரியர் நாராயணன்; அவ்விதழின் துணை ஆசிரியர் சுரதா. இதுவும் புதுக்கோட்டையில் வெளிவந்தது.
அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாசி’ இதழில் இவரின் பல கவிதைகள் வெளிவந்தன.
சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’ இது 1946 மார்ச்சு திங்களில் வெளியானது.
1954இல் கலைஞரின் ‘முரசொலி’ இதழில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன.
1955இல் ‘காவியம்’ எனும் வார இதழை நடத்தினார்.
1956இல் ‘பட்டத்தரசி’ எனும் பாவிய நூலை வெளியிட்டார்.
1958ஆம் ஆண்டு ‘ஊர்வலம்’
1963ஆம் ஆண்டு ‘விண்மீன்’
1964ஆம் ஆண்டு ‘சுரதா’
– ஆகிய கவிதை இதழ்களை நடத்தினர்.
1974ஆம் ஆண்டு சுரதாவின் தொகுக்கப்பட்ட கவிதை நூல் ‘சுவரும் சுண்ணாம்பும்’ வெளியானது.
இக்கவிதைகள் ‘ஆனந்த விகடனில்’ வெளிவந்தன, வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தன.
1966ஆம் ஆண்டு இவர் ‘தமிழ்க் கவிஞர் மன்ற’த்தின் தலைவரானார்.
அக்காலத்தின் திரைப்படங்களில் மிக இனிமையான பாடல்கள் எழுதுவபர்களில்
கு.சா.கிருட்டிணமூர்த்தியும் ஒருவர். அவர்தான் சுரதாவைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்.
‘மங்கையற்கரசி’ எனும் திரைப்படம் இவர் உரையாடல் எழுதி வெளிவந்த படம்.
“கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே, இன்ப காவியக்கலையே ஓவியமே”-“அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே” போன்ற சுரதாவின் பாடல்கள் இன்றும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறன.
சுரதா பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவரின் ‘தேன்மழை’ நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலுக்கு 1 இலட்ச ரூபாய் பரிசுடன், இராசராசன் விருதும் வழங்கியுள்ளது.
1972இல் இவருக்குத் தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
1982ஆம் ஆண்டு இவரின் மணிவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அதே ஆண்டில் குன்றக்குடி அடிகளார் சுரதாவுக்குக் ‘கவியரசர்’ பட்டத்தை வழங்கியுள்ளார்.
1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் இவர்.
1990ஆம் ஆண்டு கலைஞர் இவருக்குப் ‘பாரதிதாசன் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
2007ஆம் ஆண்டு இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
2008ஆம் ஆண்டு சென்னையில் கவிஞர் சுரதாவுக்குச் சிலை நிறுவப்பட்டது. அச்சிலையைக் கலைஞர் திறந்து வைத்தார்.
- தேன்மழை
- சுவரும் சுண்ணாம்பும்
- அமுதும் தேனும்
- எச்சில் இரவு
- சாவின் முத்தம்
- தமிழ்ச் சொல்லாக்கம்
- பட்டத்தரசி
- பாவேந்தரின் காலமேகம்
தஞ்சை மாவட்டம், பழையனூரில் திருவேங்கடம் – செண்பகம் அம்மையாரின் மகனாக, கார்த்திகை 08, 1952 / 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் கவிஞர் சுரதா பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசகோபாலன். தன் 84ஆம் அகவையில் உடல் நலிவுற்றார்.
“பிறந்தோம் என்பது முகவுரையாம்
பேசினோம் என்பது தாய்மொழியாம்
மறந்தோம் என்பது நித்திரையாம்
மரணம் என்பது முடிவுரையாம்”
இப்படி நிலையாமையைச் சொன்ன உவமைக் கவிஞர் சுரதா அவர்கள், ஆனி 06, 2037 / 2006ஆம் ஆண்டு சூன் திங்கள் 20ஆம் நாள் நிலையற்ற வாழ்வில் இருந்து விடைபெற்றார் – மரணத்தைத் தழுவிக் கொண்டு.
மறக்கமுடியுமா இவரை நாம், மறக்கமுடியுமா!
ஐப்பசி, நவம்பர் 1 – 15, 2016
Comments
Post a Comment