Skip to main content

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6

தலைப்பு-இலக்குவனாரின் பன்முக ஆளுமை, இ,திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_panmuka_aalumai_ilakkuvanar-thiruvalluvan

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6


அருங்கேடும் கேடறியாமையும்
நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி இயற்கையோடு இயைந்து யாவரும்  ஏற்கத்தக்க வகையில் பேராசிரியர்  விளக்குகிறார்.
உரிமையுள்ள நாடே பாதுகாப்பான நாடு
   நாட்டிற்கு அணிகலன்களில் ஒன்றாகப் பாதுகாப்பைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள்738) குறிப்பிடுகிறார். இதற்கு, அனைத்து உரையாசிரியர்களிடமிருந்தும் வேறுபட்டு, எண்ணும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, வழிபடும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்எனச் சிறப்பாக ஆராய்ந்து உரைக்கிறார்.
செங்கோல்ஆட்சி இலக்கணம்
செங்கோல்ஆட்சி இலக்கணத்தை உலகப் புலவர் திருவள்ளுவர்,
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.’ (திருக்குறள் 543) என விளக்குகிறார்.
பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ்ப் பண்பாட்டு அறநூலாம் திருக்குறளுக்கு ஏற்றவாறு பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
அந்தணர் நூற்கும் உயிர்களிடம் இரக்கம் கொண்டு தொண்டாற்றும் பெரியோர் வெளியிடும் நூல்களுக்கும், அறத்திற்கும் நல்நெறிக்கும், ஆதியாய்அடிப்படையாய், மன்னவன்கோல் மன்னன் ஆட்சி, நின்றது நிலைபெற்றது.
நாட்டுமக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் அறநூல்கள் வேண்டும். அவ் வறநூல்களை வெளியிடுவோர் அறவோர் ஆவார். அறவோராம் பெரியோர்கள் நல்நெறி நூல்களை வெளியிட ஆட்சி வேண்டும். அறவோர் நூல்களை வெளியிடாதவாறு தடுத்தலும் கூடுமன்றே. சில நாடுகளில், உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள் தம் கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதலின், நல்நெறி நூல்கள் வெளிவர நல்லாட்சி இன்றியமையாதது. அந் நூல்களில் கூறப்படும் அறம் நிலைபெறவும் நல்லாட்சி வேண்டும்.[12] இவ்வாறு படைப்புரிமைக்குத் தடையாக நில்லாமல் காப்பாக விளங்கும் செங்கோலாட்சியைப் பேராசிரியர் விளக்குகிறார்.
செங்கோலாட்சி
செங்கோலாட்சியில் நாடுஇருக்கும் நிலையை,
‘இயல்புளி கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.’ (திருக்குறள் 545)
என உலகப் புலவர் திருவள்ளுவர் படம்பிடித்துத் தருகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், மன்னவனின் நல்லாட்சி முறையால் இவை அமையும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்:
நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.[13] அனைவரும் ஏற்கத்தக்க வகையில் சிறப்பாக விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் திறன் போற்றற்குரியது.

இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி :  சென்னை வானொலி நிலையம்
நட்புஇணைய இதழ்
எண் குறிப்பு:
[11] வள்ளுவர் வகுத்த அரசியல்
[12] வள்ளுவர் வகுத்த அரசியல்
[13] வள்ளுவர் வகுத்த அரசியல்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்