Skip to main content

மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்




தலைப்பு-மாணவர் ஆற்றுப்படை-சி.இலக்குவனார் ; thalaippu_maanavar-aatrupadai

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

2/6


என்றே அலமரும் இளைஞனை நோக்கி
“அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி;
தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்;                            35
அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத்
தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து
கல்விக் கூடம் காண்தக அமைத்து
நாடும் நலம்பெற நல்லன புரியார்;
அழியாப் புகழை அடைய விரும்பார்                               40
உரையும் பாட்டும் உடையார் அன்றி
மறையிலை போல் மாய்வோர் பலரே;
அறுவகைச் சுவையும் அளவில துய்த்து
உறும்பல நோய்க்கே உறைவிட மாவார்;
உண்ணவும் உறங்கவும் உரைக்கவும் மருந்து                     45
எண்ணவும் எழவும் இருக்கவும் மருந்து
மருந்து மருந்தென வருவாய் போக்கி
தமக்கும் பிறர்க்கும் தகுபயன் இன்றி
வாணாள் தன்னை வீணாள் ஆக்குவர்
அறிவொடு பொருந்தா அனைத்துப் பண்டிகை                      50
தமக்கும் சடங்குகள் தமக்கும் சற்றும்
எண்ணாது பெரும்பொருள் எளிதில் போக்குவர்
திருமணம் என்றால் செலவிடும் தொகையோ
கணக்கினுள் படாதே; காண்போர் தாமும்
“உம்மில் மணமே ஊரார் மணங்களில்                            55
சிறக்க நிகழ்ந்தது” எனப்பலர் செப்ப
கடனும் பெற்றே கழித்து மகிழ்வர்;
மக்கள் தம்மை மாண்புற ஆக்கார்
கல்விப் பெருங்கலன் கவினுற அணியார்
பல்வகைப் பூண்கள் பகட்டாய் அணிந்தே                             60
நடைப்பூண் காட்சியாய் நானிலம் சுமத்துவர்;
தேர்தல் என்றால் தேடி ஓடுவர்
அனைவரும் மயங்க அள்ளி வீசுவர்;
இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று
படிந்தும் பணிந்தும் பகலிரா வின்றி                                65
ஓயா துழைத்தே உளவெலாம் போக்குவர்
உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார்
விளம்பரம் பெற்றிட வேண்டுவ செய்வார்;
ஏழை மாணவர் இன்னல் போக்கிடார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

பேராசிரியர் சி.இலக்குவனார்
– பேராசிரியர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்