மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6
அகரமுதல 165, மார்கழி 03, 2047 / திசம்பர் 18, 2016
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்
4/6
அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும் 110தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர்.
கோவிந்த சாமியாம் கூறும் தம்பி
கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி
அறநெறி போற்றிடும் அரிய வணிகர்.
புன்னகை தவழும் நன்னல முகத்தர். 115
அடக்கமே வடிவம்; அன்பே பண்பு
அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர்
உடலால் இருவர் உளத்தால் ஒருவர்
பகுக்க முயல்வோர் பயன்பெறத் தவறும்
உறுதிப் பாட்டால் ஒன்றிய கேண்மையர். 120
ஆதலின்
குமணனின் உயர்ந்த குலவுசீர் அண்ணனை
சென்றுநீ கண்டிடச் சிறிதும் அஞ்சேல்!
வீட்டினும் வெளியினும் விரும்பும் மாணவர்
அன்பாய்த் தொடர அறிவுரை நவின்றே 125
கையில் குடையும் காலில் செருப்பும்
மெய்யில் தூய வெண்மைச் சட்டையும்
எளிமையும் இனிமையும் ஏற்றமும் பண்பும்
உருவெடுத் ததுபோல் உயர்நடைச் செம்மல்
செல்வதைக் காணலாம்; செல்கநீ தம்பி, 130
வீட்டிலும் வெளியிலும் அன்றி விரும்பிச்
செல்லும் இடம்தனைச் செப்புவேன் கேளாய்
தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறும்
மருத்துவர் இயல்பெலாம் மரபாய்க் கொண்டு
பிணிதனைப் போக்கலே பெருங்கடனாக 135
மக்கள் தொண்டு மகிழ்வுடன் ஆற்றும்
இனிய நண்பர் இராமச் சந்திரர்
மருத்துவ அறிஞர் மருத்துவ மனையாம்
இராமன ருளில்* இருந்திடக் காண்பாய்
– பேராசிரியர் சி.இலக்குவனார்
[* புதுக்கோட்டையில் புகழ்வாய்ந்த மருத்துவராகத் திகழ்ந்த மரு.இராமச்சந்திரனைக் குறிக்கின்றது.]
Comments
Post a Comment