தேறாத மனத்துக்கு ஆறுதலேது! – தமிழ்சிவா
அகரமுதல
166, மார்கழி10, 2047 / திசம்பர்25, 2016
தேறாத மனத்துக்கு ஆறுதலேது!
நிலத் தட்டுகள் இடம்பெயர்ந்து
நிலை தடுமாறியது
பெயராநிலம் !
எல்லைகள் கடந்து
பிள்ளைகளுக்குப் பிணமென்று
பேர்வைக்க பீறிட்டுக் கிளம்பியது கடல்!
பெருகிய ஓலங்கள்
பேரலைகளின் பேய்த்தனமான
பேச்சொலியில் நீரணைந்த நெருப்பாயின !
தணியாத தாகத்தில்
நீர் குடித்த உடலங்கள்
சடலங்கள் என்னும் சட்டை போட்டுக்கொண்டன!
கண்ணீர்ச் சுவையில்
உவர்ப்பு ஒழிந்து கைப்பு கூடியது..
தொலைந்த இறகுகள்தேடி
அலைந்துகொண்டே இருக்கிறது
கலுழ்ந்து கலுழ்ந்து
கண்கள் பூத்த காலம்!
நச்சு மரங்களை வீழ்த்தியிருக்க வேண்டிய
நான்
பிள்ளை வரங்களைப் பெயர்த்தேனே என
வயிறளைக்கும் அலைகள்!
நினைவுகளைக் கடலெனத் தேக்கிய
உறவுகளின் கால்கழுவி
நிறைவடைகிறாய் நீ
தேறாத மனத்துக்கு
ஆறுதலேது! ஆறுதலேது! !
– தமிழ்சிவா
(மார்கழி 11, 2035 – 2004.12.26 அன்று
(மார்கழி 11, 2035 – 2004.12.26 அன்று
ஆழி ஆடிய ஊழித் தாண்டவத்தில்
உற்ற உயிர்களைத் தொலைத்த உறவுகளுக்கு)
12ஆவது நினைவுநாள்
12ஆவது நினைவுநாள்
Comments
Post a Comment