பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
அகரமுதல 165, மார்கழி 03, 2047 / திசம்பர் 18, 2016
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
பொருளியலிலும் நாட்டியல்
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463)
இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார்.
பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சிபேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள் கருத்திற்கிணங்கத் தற்பொழுது நடைமுறையில் உள்ள திருவள்ளுவர்ஆண்டைப் (கி.மு.31) பின்பற்றினாலும் திருவள்ளுவர் காலம் தமிழ்ச் சங்கக்காலப் பகுதியில் வடக்கே அசோகர் வாழ்ந்த காலம் என்கிறார்.
திருவள்ளுவர் காலம் சங்கக் காலம்
‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,
“நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென
அறம்பாடிற்றே ஆயிழை கணவ” [19]
என்று பாடுகின்றார்.
இதில்,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”[20]
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”[20]
என்ற குறளை எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார். ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும்’’ எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்து திருவள்ளுவரைச் சங்கக்காலப் புலவர் என்கிறார்.
திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்
‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார். ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர்ஆதல் வேண்டும். புத்தர் பெருமானுக்குப் பிற்பட்டுத் தோன்றி புத்தமதம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பொழுது வந்தார் என்று கொள்ளலாம். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் உலகம் எங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழ் நாட்டிலும் பரவிற்று. ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’
என மேலும் ஆராய்ந்து திருவள்ளுவரின் காலம் அசோகர் காலம் என ஆராய்ந்து நிறுவுகிறார்.
பேராசிரியரின் முடிபுகள்
பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப்புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.
- திருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர்
- பெண்களுக்கான முதல் புரட்சியாளர்
- எண்ணப்புரட்சி செய்தவர் திருவள்ளுவர்
- தமிழ்ப்பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர்
- திருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார்
- திருக்குறள் உலகத்திற்கான நூல்
- வள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே!
- திருவள்ளுவர் காலம் சங்கக்காலம்
- திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்
- திருக்குறள் தனித்தமிழ் நூல்
- திருக்குறள் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது
- குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்
நிறைவுரை :
திருக்குறளைத் திருக்குறள் வழியிலேயே ஆராய்ந்து தமிழ்நெறியின்படியானஆராய்ச்சிச் சிறப்பினை அறிய இதுவரை சிலவற்றைப் பார்த்தோம். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், “இந்நாளில்
திருக்குறளுக்குப் புதுப் புது உரைகள் காணப்படுகின்றன. அவற்றுள்
பொருந்தியன சிலவே. அச்சிலவற்றுள் ஒன்று தமிழ்ப் பேராசிரியர் சி.
இலக்குவனார் உரை’’ என்று பராட்டியுள்ளமை பேராசிரியரின் உரை வளத்தின் சிறப்பாகும். ‘‘பொதுவாகப்
புராணக் கதைகளைக் கேட்கத்தான் மக்கள் கூட்டமாக வருவர்; ஆனால் குறள்நெறி
வகுப்புகளுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகிறார்கள்’’ எனத் தந்தை பெரியார்
அவர்கள், பேராசிரியரின் திருக்குறள் விளக்கக் கூட்டங்கள் குறித்துத்
தெரிவித்தமை பேராசிரியரின் திருக்குறள் ஆராய்ச்சி மக்களால் பெரிதும்
கவரப்பட்டதற்குச் சான்றாகும். இவ்வாறு அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும்
போற்றப்படும் ஆராய்ச்சித்திறனால் பேராசிரியர் சி.இலக்குவனார்
அவர்களின் திருக்குறள் படைப்புகள் எளிமையாய் அமைந்து எக்காலத்திற்கும்
பொருந்தும் கருத்துமணிகளாக அமைந்துள்ளன. இவற்றிற்கிணங்கத் திருக்குறளைப் புரிந்து அதன் வழி நின்று திருவள்ளுவர் பெருமையைக் காலமெல்லாம் நிலைக்கச் செய்வோம்!
–இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி : சென்னை வானொலி நிலையம்
‘நட்பு‘ இணைய இதழ்
எண் குறிப்பு:
[18] வள்ளுவர் வகுத்த அரசியல்[19] ஆலந்தூர்கிழார். புறநானூறு 34
[20] திருக்குறள் 110
Comments
Post a Comment