இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! – கவிஞர் அம்பாளடியாள்
அகரமுதல 164, கார்த்திகை 26, 2047 / திசம்பர் 11, 2016
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!
செந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச்சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!
கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும் மோகன மே!
என்னை ஈர்த்தவன் நெஞ்சினி லே – பொங்கும்
இன்தமிழ்க் கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!
தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!
மல்லிகை முல்லையும் பூத்தன வே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்தன வே
அல்லியும் தன்னிதழ் மூடிட்ட தே – இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலை யே!
கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம் வாட்டிடு தே!
அன்பெனும் இன்பச் சோலையி லே -ஈர்
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!
சத்திய வாக்கு தந்தவ னே – இன்னும்
சங்கட மெத்திடச் செய்வா யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!
– கவிஞர் அம்பாளடியாள்
Comments
Post a Comment