Skip to main content

புதிய மாதவியின் ‘பெண்வழிபாடு’ – வளவ. துரையன்




தலைப்பு-புதியமாதவியின் பெண்வழிபாடு, வளவ.துரையன் ; thalaippu_penvazhibaadu_puthiyamathavi_valavan_thuraiyan

புதிய மாதவியின் பெண்வழிபாடு:

சிந்தனையைததோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு

  சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
 மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி புதிய இலக்கியத்தில் முதன்மையான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை,  திறனாய்வு எனப் பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
  பெண் தலைமை தாங்கும் மன்பதை மறைந்து ஆணை முதலாகக் கொண்ட மன்பதை என்று உருவாகத் தொடங்கியதோ அன்றே பெண்ணடிமையாகும் சூழல் தோன்றத் தொடங்கிவிட்டது எனலாம். என்னதான் பெண் கல்வியில் முன்னேறி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன் காலில் நிற்கும் அளவிற்குப் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் அவள் வீட்டிலும் வெளியிலும் ஒரு போகப் பொருளாக, ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட வேண்டியவளாகவே இருக்கிறாள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
‘பெண்வழிபாடு’ எனும் முதல் கதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் வைக்கப் பட்டிருக்கிறது. இக்கதை கூறப்பட்டிருக்கும் வகை ஒரு புதுமையாக இருக்கிறது. மரபிலக்கியங்களில் பெண்ணை அவளின் அகவையை வைத்துப்  பேதை, பெதும்பை, மங்கை மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனச் சில பருவங்களாகப் பிரித்துள்ளனர். இப்பருவங்கள் ஒவ்வொன்றையும் கூறி அவற்றில் அவள் அடையும் பாலியல் தொந்தரவுகளை இச் சிறுகதை காட்டுகிறது.  ஆகப் பெண்ணுக்கு எல்லாக் காலங்களிலும் ஆண் வழி வரும் ஆதிக்கத்தை நாம் உணர முடிகிறது. பத்து அகவையில் தனிப்பயிற்சி அளிக்கும் ஆசிரியர், பதினைந்து அகவையில் தனிப்பயிற்சி அளித்த பெண் ஆசிரியை, மடந்தைப் பருவமான இருபத்து நாலு அகவையில் அக்காள் கணவன், என அவளுக்குப்  பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. மணமான பின்போ கணவன் இவள் விருப்பம் அறியாமல் களிக்கக் கூடியவனாக இருக்கிறான். “அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கேச் சிதறிக் கிடக்கும் படுக்கையில். சுருக்குப் பையைக் கிழித்து நுழையும் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது.” என்ற வரிகள் அவளின் மன ஆழத்திலுள்ள அவலத்தைப் படம் பிடிக்கின்றன.
  ஆனால் இதற்கெல்லாம் பழி வாங்குவது போலப் பழகுகின்ற ஒரு நண்பரிடமே அவள் தன் உடலைக் கொடுக்க ஆயத்தமாகிறாள். நண்பரோடு தனியாய் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. “அன்று வீட்டில் யாரும் இல்லை. அவருடன் தனியாகக் கழிக்கப் போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றிக் காத்திருந்தது உண்மை.” என்ற வரிகள் அவளுக்கு நாம் கொடுத்த ஆதரவை மீட்டெடுக்கலாமா என எண்ண வைக்கின்றன. இவ்வளவு துன்பப் பட்டவள் வரம்பு மீறுவதும் தவறில்லைதான் என நினைக்கும் நாம்  கதை இப்படிக் கூட முடியலாம் என்றெண்ணுகிறோம். ஆனால் மரபில் கூறும் பருவங்களை வைத்து எழுதும் ஆசிரியரால் அதை மீற முடியவில்லை போலும். கதை இந்த இடத்தில் திடீரெனத் தடம் மாறுவது ஆசிரியரை மீறியே நடந்து விட்டது என நினைக்கிறேன்.
  அடுத்த வரியைப் பாருங்கள். “அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. உடலைக் கழற்றித் தூர எறிந்துவிட முடியாத அல்லல்பாட்டில் அவள் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.”அவர் அவளைத் தொட அவள் பிடி இறுக இருவரும் பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறார்கள். தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல, கவனக் குறைவால் ஏற்பட்ட நேர்ச்சி(விபத்து) என ஊடகங்கள் பேசுகின்றன. படிக்கும் வாசகன் அவள்தான் அவரையும் தள்ளிக் கொண்டு விழுந்தாள் என்பதையும் உணர்கிறான். கவனக் குறைவு எனும் சொல் இங்கு விழுந்திருக்கிறது.
  மரபை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் அதில் கட்டுண்டு கிடக்கும் சூழல் ஒரு புறம் என இக்காலப் பெண் இருபொறிகளில் சிக்கித் தவிப்பதைக் கதை நன்கு காட்டுகிறது. ஒருவர் எதை நினத்துக் கொண்டிருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார் என்பது உள நூல் வல்லுநர்களின் கருத்தாகும். அதுபோல எசுதரின் மனம் முழுதுமே கருப்பாய் மாறிவிடுகிறது. “கருப்புதான் எனக்குப் பிடிச்ச வண்ணம் (கலரு)” என்று பாடவில்லையே தவிர காரணம் தெரியாமலே அவளுக்குக் கருப்பு பிடித்துவிடுகிறது.“கருப்பண்ண சாமி கோயில் பக்கம் போகாதே” என்று அம்மா சொன்னாலும் அவள் அந்தப் பக்கமாகப் போகும் போதெல்லாம் கருப்பண்ணசாமியைத் திருட்டுத்தனமாகப் பார்த்து மகிழ்ந்து வருகிறாள். பள்ளி ஆண்டு விழாவின் மாறுவேடப் போட்டியில் கருப்பண்ண சாமி வேடம் போட்ட மாசானத்தை ஆட்சியர்(கலெக்டர்) பாராட்ட அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அதற்கு ஆட்சியர்(கலெக்டர்) கருப்பாக இருந்ததும் ஒரு காரணம். கருப்பு நிறத்தைப் பூசிக் கொண்டுவரும் இரவு அவளுக்குக் கிளர்ச்சி ஊட்டுகிறது.
  அவளின் மன உணர்வு தெரியாமல் அவள் குணமடைய அவள் அம்மா வாரம் தவறாமல் தேவாலயத்திற்கு நடக்கிறாள். இக்கதை மகளின் மனம் அறியாமல் இருக்கும் தாயைக் காட்டுகிறது என மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணின் சிறு அகவையில் ஆழப் பதியும் உணர்வு எவ்வளவு அவளைப் பாதிக்கிறது என்று அறிய முடிகிறது. ஒரே ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு அவளின் மன எண்ணங்களைப் படம் பிடித்து அழகாக ஆசிரியர் கதையை நடத்திச் செல்கிறார்.
  திரைத்துறைபற்றி ஒரு கதை. அதில் விழுந்தவர்கள் மீளமுடியாது என்பதைக் காட்டுகிறது. அகவையான பின்னும் ஆண் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் உலகம் அது. ஆனால் சற்று அகவையானாலே பெண் நடிகர்களுக்கு,  சித்தி, பாட்டி அம்மா பாத்திரங்கள்தாம் கிடைக்கின்றன. ஆனால் அதை அவர்களால் தாங்க முடியவில்லை. அறுபது வயது நடிகரை இளம் பெண் விரட்டி விரட்டிக் காதலிக்கும் கதைகள்தாம் ஆணாதிக்கமுள்ள சூழலில் மாட்டித்தவிக்கும் அந்த உலகில் இருப்பதையும் இச்சிறுகதை காட்டுகிறது.
  முதியோர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களைச் சிறுமைப்படுத்தும் கதைதான் ‘பாட்டி என்ன சொல்லி விட்டாள்?’
  தொன்மத்தில் புகுந்து அதே நேரத்தில் இயல்பாக எழுதப்பட்ட கதை என ‘அம்மாவின் காதலன்[ர்]’ கதையைச் சொல்லலாம். இருந்தாலும் ஆனைமுகனை வள்ளி காதலித்தாள் என்பதெல்லாம் கொஞ்சம் மிகுதி. ஆனால் கற்பனைக்கு விலங்கிட முடியாதுதான். அதே நேரத்தில் குறிஞ்சி அழகனாக வந்தது ஆனைமுகன்தான்  என்று அவள் நினைப்பதை ஏற்க முடியாது ஏனெனில் அவள் ஒரு மானிடப் பெண். இந்தத் தொன்மம் எப்படி அம்மாவின் காதலரைத் தேடிப்போகும் கதை சொல்லிக்குச் சரியாகிறது என்பது புரியவில்லை.
   ‘பரிசித்’ கதை எங்கோ தொடங்கி எங்கோ முடிகிறது. இக்கதையை எந்த நோக்கதோடு புதிய மாதவி எழுத வந்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு மையங்களை வைத்துக் குழப்பப் பட்டுள்ளது. குருசேத்திரப் போரில் பல ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்காளாயினர் என்பது ஒரு கரு. பாஞ்சாலி எப்போதும் மனத்தில் அர்ச்சுனனை மனத்தில் வைத்திருந்து மற்ற கணவர்களுக்குத் துரோகம் செய்தாள் என்பது மற்றொன்று. இரண்டையும் தனித்தனியாகவே எழுதி இருக்கலாம்.  ஆனால் அக்காலப் போர்முறைகளை இக்காலத்துப் போர்முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். போரே அன்று நகரத்துக்குப் புறம்பான வெட்ட வெளியில்தான் நடந்தது. தோற்றவர்களின் பெண்டிரைச் சிறை எடுக்கும் வழக்கம் புராண காலத்திற்குப் பின்னர்தான் வந்தது. இன்னும் நன்கு கனிந்த பழமாக வந்திருக்க வேண்டிய கதை இது.
 ‘தசரதபுரம்’ எனும் கதையும் இதேபோலத்தான் அமைந்து விட்டது. இன்னும் சற்று அழுத்தமாகப் பதிய வேண்டிய கதைதான் அது. வெளி நாட்டுக்குப் போன பாட்டி அங்குள்ள சூழலுக்கு ஒத்துப் போக முடியாமல் தவிக்கும் கதைதான் மரகதம் பாட்டி பற்றியது. ஆனால் மேல் நாட்டு வெப்பம், மற்றும் குளிரால் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்களது நாகரிகத்தையும் நாம் கிண்டல் செய்யக் கூடாது என்பது எண்ணம்.
”நாட்டுக்கு நாடு எல்லாமே மாறுகிறதே. ஆனால் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு என்று இதைத் துணிந்து சொல்லலாம். ஏனெனில் புதிய மாதவியின் நடை சற்று மாறுபாடானது. இத் தொகுப்பின் தளங்களும் வெவ்வேறானவை. புதிய சிந்தனையைத் தோற்றுவிப்பவை.

வளவ. துரையன் 

புதியமாதவியும் வளவ.துரையனும் ; puthiyamadavi_valavaithuraiyan
இலக்கியவேல், நவம்பர் 2016, பக்கங்கள் 35-37

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்