நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்
அகரமுதல
159, ஐப்பசி 21,2047 / நவம்பர் 06, 2016
நாடிவந்து நிற்குமன்றோ!
நாநயம் இருந்துவிட்டால்
நாணயம் நமக்குவரும்
பேய்மனம் கொண்டுவிட்டால்
பிணம்போல ஆகிடுவர்
தூய்மையது மனமேறின்
துட்டகுணம் மறைந்துவிடும்
நாமென்றும் வாழ்வினிலே
நாணயத்தைக் காத்திடுவோம் !
மேடைகளில் முழங்கிடுவார்
விதம்விதமாய் எழுதிடுவார்
விவாதங்கள் வந்துவிட்டால்
மேதையெனக் காட்டிடுவார்
போதைபற்றி கதைசொல்வார்
பொறுப்புபற்றி பலசொல்வார்
போதையுடன் வீடுவந்து
பொங்கிடுவார் வீட்டினிலே !
அறவழியை விட்டுவிட்டால்
அனைவர்க்கும் தீமையென்பார்
அகிம்சைதனை அரவணைத்தல்
அனைவர்க்கும் நன்மையென்பார்
அன்புபாசம் யாவருக்கும்
அத்திவாரம் தானென்பார்
அசிங்கமுள்ள அத்தனையும்
அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !
வள்ளுவரை அருகழைப்பார்
வாய்மைபற்றிப் பேசிடுவார்
தெள்ளுதமிழ் தலைவனென்பார்
தில்லுமுல்லு பலசெய்வார்
உள்ளமெலாம் கள்ளமுடன்
ஒழுக்கமின்றி அவரிருப்பார்
நல்லதமிழ் காத்திடுவோம்
நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !
கண்ணகியைப் போற்றிடுவார்
கற்புப்பற்றி நூல்செய்வார்
எண்ணமெலாம் திருவருளே
எனச்சொல்லி திருடிநிற்பார்
தன்னைவிட மேதாவி
தோன்றவில்லை எனவுரைப்பார்
தலைதெறிக்கக் காரியங்கள்
சமத்தாகச் செய்துநிற்பார் !
பெண்ணடிமை ஒழிவதற்குப்
பரப்புரை செய்திடுவார்
பெண்பித்து தலைக்கேறி
பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்
மண்மீது போதையது
மடிவதற்கு முழங்கிடுவார்
மதுமீது அவர்தவழ்ந்து
வந்துநிற்பார் மனைக்குள்ளே !
வீண்வார்த்தை பேசாதீர்
வீண்வாதம் புரியாதீர்
மாண்புடனே பேசிடுவீர்
மாண்புடனே நடந்திடுவீர்
தான்வாழும் சமுதாயம்
தலைநிமிர வேண்டுமென்று
தான்நினைத்து வாழ்பவரே
தலைவனாய் உயர்ந்திடுவார் !
உள்ளொன்றும் புறமொன்றும்
உயர்வினுக்கு ஏற்றதல்ல
உரைக்கின்ற வார்த்தையது
உள்ளிருந்து வரவேண்டும்
கள்ளமிலா உள்ளமொடு
கருணையுடன் வாழ்வதுதான்
நல்லதொரு வாழ்வாக
நமக்கெல்லாம் அமைந்துவிடும் !
நாணயமாய் வாழ்ந்துவிட்டால்
நாட்டுக்கே நன்மையன்றோ
நாட்டுக்கே இப்போது
நாணயமே தேவையன்றோ
நாநயத்தைக் காப்பாற்றி
நாணயமாய் நாமிருந்தால்
நன்மையெலாம் எமைநோக்கி
நாடிவந்து நிற்குமன்றோ !
Comments
Post a Comment