முற்றுப்புள்ளி – கா.உயிரழகன்

தலைப்பு-முற்றுப்புள்ளி, கா.உயிரழகன் ; thalaippu_mutrupullifaa-uyirazhagan

முற்றுப்புள்ளி – கா.உயிரழகன்

வரவை அழிக்கும் செலவுக்கும் கூட
குடியை அழிக்கும் குடிக்கும் கூட
உடலை அழிக்கும் புகைக்கும் கூட
உறவை அழிக்கும் கெட்டதிற்கும் கூட
பண்பாட்டை அழிக்கும் பழக்கத்திற்கும் கூட
ஒழுக்கம் இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே!
முரண்பாடுகள் முளைக்காமல் இருக்கக் கூட
முறுகல்கள் தோன்றாமல் இருக்கக் கூட
மோதல்கள் தொடராமல் இருக்கக் கூட
முறிவுகள் மலராமல் இருக்கக் கூட
சாவுகள் நிகழாமல் இருக்கக் கூட
அமைதி இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே!
நட்புகள் நலமாக அமையத் தான்
உறவுகள் அன்பாக இணையத் தான்
காதலும் சுகமாக ஈடேறத் தான்
மணவாழ்வு மகிழ்வோடு தொடரத் தான்
மழலைகள் அறிவோடு வளரத் தான்
புரிதல் இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே!
தமிழில் ஒன்றைச் சொல்லி முடிக்கையில்
தமிழில் இடுவது முற்றுப் புள்ளியே!
காற்புள்ளி, அரைப்புள்ளி இருந்தாலும் கூட
ஏற்றிடு முற்றுப் புள்ளி இடுவதையே!
தமிழைக் கற்றிடு, தமிழிலேயே பாப்புனைக
பிறமொழிக் கலப்புக்கு வை முற்றுப்புள்ளியே!
[தடாகம் கலை இலக்கிய வட்டம் – கல்வி, கலை, பண்பாட்டு பன்னாட்டு அமைப்பு 2016 அட்டோபர் மாதத்தில் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது.]

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்