Skip to main content

உயிரே உயிரின் உயிரே! – அம்பாளடியாள்

தலைப்பு-உயிரின் உயிரே,  அம்பாளடியாள் ;thalaippu_uyirinuyire_ambaladiyaal

உயிரே  உயிரின்  உயிரே!

ஈன்றவளுக் கொப்பான  இன்றமிழை நான்மறவேன்
தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! – வான்மழைபோல்
இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல்   என்னுயிரே !
என்றுமிது போதும் எனக்கு!

தூக்கத்தில் கூடத்தான் உன்றன்  எண்ணம்
தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால்
பூக்கின்ற புலமையும்  பூலோ கத்தில்
பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்!
தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது
தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்!
ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும்
எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!

உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம்
உலகத்தில் எனக்கிங்குச்  சொர்க்கம் ஆகும்!
பொன்னான வரமளித்த தாயே உன்னால்
போகட்டும் பொல்லாத தூக்கம் இங்கே!
கன்னல்பூங் கவிதைகளால் மாலை செய்து
காலமெல்லாம் உனக்களித்தால் அதுவே  போதும்
இன்றெனக்கும் இதைவிடவும் மகிழ்ச்சி உண்டோ!
இன்றமிழே! என்வாழ்வே! வணங்கு கின்றேன்!

திக்கெட்டும் இனியிந்த அம்பாள் அடியாள்
தீந்தமிழின் உணர்வேந்திச் செல்ல  வேண்டும்!
துக்கத்தை எவர்மனமும் துறக்க வேண்டும்!
துணையாக உனையெண்ணச் செய்ய வேண்டும்!
பக்குவமாய் எடுத்துரைக்கும் கருத்தால் நாளும்
பலசமய இருள்நீங்கச் செய்ய வேண்டும்!
உக்கிரமாய் நின்றொழிக்கும் பகையும் இங்கே
உன்பாதம் சரணடையச் செய்ய வேண்டும்!

அணியணியாய்ப் பலகதைகள் வந்த போதும்
அடியவளின் உள்ளத்தில் இன்றும் வாழும்
மணிமேகலை யுடன்சிலப்பதி  காரம் என்றும்
முத்தான காவியமாம் இராம காதை
பணிவன்பு தரவல்ல  பார தத்தைப்
பயின்றுவந்தால் நல்வாழ்வும் அளித்துக் காத்துத்
துணிவுடனே வாழவைக்கும் என்றே சொல்லித்
தூயதமிழ்மேல்  ஆர்வத்தைத் தூண்டிச் செல்வேன்!

வள்ளுவனார் குறள்நெறியும் ஓளவை தந்த
வற்றாத மூதுரையும் ‘பைபிள் மற்றும்
தெள்ளுதமிழ்ப் பாட்டிலுள்ள   திருக்குர் ரானும்
தேடிநிதம் கற்றிட்டால் இன்பம் என்றே
கள்வடியும் பாட்டாலே  எடுத்து ரைத்துக்
கலியுகத்தில் எம்மவரின் போக்கை மாற்றிப்
பள்ளிகொள்ள வைத்திடுவேன் நாளும் இங்கே
பைந்தமிழே   உயிரென்று உலகம் மெச்ச!
– அம்பாளடியாள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்