பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 : செ. இரவிசங்கர்
அகரமுதல
161, கார்த்திகை05, 2047 / நவம்பர்20, 2016
திருக்குறள் உரைச் சிறப்பு 2/2
சுருக்கம்:
‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்
’ என்பது போல திருக்குறளுக்கான உரையை மிகச் சுருக்கமாகச் சொல்லி
புரிய வைத்துள்ளபணியை இலக்குவனார் மிகத் தெளிவாகச் செய்துள்ளார்.
இலக்குவனார் சுருக்கமாக உரை யெழுதக் காரணம் யாது? “ஓரளவு படிப்பறி
வுடையோரும் புரிந்துகொள்ளும் வகையில் திருக்குறள் எளிய பொழிப்புரை
எழுதினார்” என்று மறைமலை கூறுகிறார். எனவேதான் சுருக்கமான கருத்தை
எழுதியுள்ளார் எனலாம்.
திருக்குறளில் அதிகாரத்திற்கு
அமைந்துள்ள தலைப்பை உரையாசிரியர்கள் விளக்க முற்படும்போது தேவையற்ற
கருத்துக் களையெல்லாம் கூறிச் செல்கின்ற போக்கினைக் காண முடிகின்றது.
‘வான்சிறப்பு’ என்னும் தலைப்பிற்கு
மணக்குடவர் உரை எழுதும் போது வான் சிறப்பாவது மழையினது தன்மை
கூறுதல். இது கடவுட் செய்கையாதலால் அதன் பின் கூறப்பட்டது. இது ஈண்டுக்
கூறியது என்னையயனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும்
இனிதுவப்பது, மழையுண்டாயின் என்றற்குப் போலும். அன்றியும் காலத்தின்
பொருட்டுக் கூறினார் என்றும் அமையும்’ என்கிறார்.
இங்கு வள்ளுவர் தலைப்பில் இவ்வளவு
செய்திகளையும் கூறவில்லை. ஆனால் மணக்குடவர் தானாகவே இவ்வாறுதான்
வள்ளுவர் நினைத்திருப்பார் என்பதுபோல வள்ளுவராகவே தன்னை
மாற்றிக்கொண்டு கருத்துரைக்கிறார். ஆனால் திரு.வி.க. மட்டும்
‘மழையினது சிறப்பைக் கூறுதல்’ என்று தலைப்பிற்கு விளக்கம்
தந்துள்ளார். ஆனால் இலக்குவனார் இன்னும் சுருக்கமாக ‘மழையின் சிறப்பு
’ என்று மட்டும் விளக்கம் தந்துள்ளார்.
இது போலவே அனைத்துத்
தலைப்புகளுக்கும் மிகச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். அது போலவே
சில குறள்களுக்கும் சுருக்கமான உரையைத் தந்துள்ளார்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் 66)
மழலைச்சொல் கேளா தவர். (குறள் 66)
என்னும் குறளுக்கு மிகச் சுருக்கமாக
“தம் மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்களே குழலிசையும் யாழிசையும்
இனிமை யானவை என்பர்” என்று உரை தந்துள்ளார். மேலும் ‘மடியின்மை’
அதிகாரத்தில் அமைந்துள்ள
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (குறள் 602 )
என்னும் குறளுக்கு, “தாம் பிறந்த
குடியை மென்மேல் உயரும் நற்குடியாக்க விரும்புவர், சோம்பலைச்
சோம்பலுறச் செய்து வாழ்க” என்று சுருக்கமாக உரையெழுதியுள்ளார்.
இதுபோல எல்லா அதிகாரத்
தலைப்புக்களுக்கும், மற்றும் சில குறள்களுக்கும் மிகச் சுருக்கமாக அதே
வேளையில் பொருளின் தன்மை மாறுபடாமல் உரை எழுதியுள்ளார். அதாவது இலக்குவனார் எல்லா மக்களுக்கும் திருக்குறள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உரை எழுதியுள்ளார்.
நடைமுறை வாழ்க்கையை பொருத்திக் காண்பது:
இலக்குவனார் நடைமுறை வாழ்க்கையை
உரையில் பொருத்திக் காட்டி உரை எழுதியுள்ளார். அந்த வகையில் ஒரு குறள்,
அனைவராலும் ஆராயப்பட்ட ஒன்று ..
எண் என்ப ஏரன எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு (குறள் 392)
இக்குறளுக்கு இலக்குவனார், ‘எண் என்று
சொல்லப்படும் அறிவியலும் எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும்
உண்மையான வாழ்கின்றவர்கட்கு கண்கள் என்று சொல்லுவார்கள்’ என்று உரை
தந்துள்ளார்.
“எண் என்பதற்கு வெறுங்கணக்கு
என்றும், எழுத்து என்பதற்கு வெறும் இலக்கணம் என்றும் பொருள் கூறுதல்
பொருந்தாது. அறிவியலுக்கு எண்ணுதலும் கலையியலுக்கு எழுதுதலும்
முதன்மையாக உள்ளனவாதலின் தமிழகப் பெரியார் அறிவியலை எண் என்றும்
கலையியலை எழுத்து என்றும் அழைத்து வந்துள்ளனர்.
‘என்ப’ என்று கூறுவதிலிருந்து
இக்குறியீடுகள் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே வழக்கில்
இருந்துள்ளன என்று தெளியலாகும். ‘ஒருவருக்கு இவை இரண்டும் உயிர்
போன்று இன்றியமையாதன என்று கூறியுள்ளதன் நயம் பாராட்டத்தக்கது”
என்று தமது ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ நூலில்
கூறியுள்ளார். இது வள்ளுவன் குறளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்
விதமாக அமைகிறது.
இக்குறளைப் பற்றி பலரும்
பலவிதமானக் கருத்துகளை எழுதியுள்ளனர். சிலர் பின்னடியில் வருகின்ற
‘கண் ’ என்பதற்கு எதுகையாக ‘எண் ’ என்று படைத்துள்ளார் என்கின்றனர்.
ஆனால் அது அப்படி இருக்க முடியாது என்று இலக்குவனார், வள்ளுவர்
காலத்துக் கல்விச் சிறப்பைக் கொண்டு விளக்குகிறார்.
அஃதாவது, “அறிவியல் ஆய்வுக்கு உரியது.
கலையியல் உள்ளவியல்பாம் பண்புக்குரியது. அறிவு முதிர்ச்சியும்
பண்பு முதிர்ச்சியும் ஒருசேர வாய்க்கப் பெற்றால்தான் கற்றோர்
என்பவர் மக்களின் நல் வாழ்வுக்குப் பயன்படுவர். இன்றேல் கூர்த்த
அறிவியலறிவால் அழிவுச் செயல்களும், முதிர்ந்த கலையியல் அறிவால் களி
இன்பச் செயல்களும் மிகுந்து உலகம் கேடுறும். ஆகவே இன்றைய பல்கலைக்
கழகப் பாடத்திட்டம் இவ்விரண்டு பகுதிகளிலும் ஒருவர் புலமை
பெறுவதற்குரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நம் முன்னோர்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிந்து மேற் கொண்டு ஒழுகினர் என்பது
அறிந்து வியத்தற்குரியதன்றோ?” என்று திருக்குறளை நடைமுறை வாழ்க்கையோடு
பொருத்திப்பார்த்து உரை எழுதியுள்ளார் இலக்குவனார். இது இவ்வுரைக்குரிய
சிறப்பாக அமைகிறது.
முடிவுரை
இவ்வாறாக சி.இலக்குவனார்
திருக்குறளுக்கு இயற்றியுள்ள உரை என்பது மிகுந்த சிறப்புடையதாக
அமைந்துள்ளது. பொதுவாக மனித நாகரிகம் மூன்று யுகங்களைக் கண்டிருக்
கிறது. வேளாண்மை நாகரிக யுகம் தொழில் நாகரிக யுகம், கல்வியுகம்;
இம்மூன்றும் கடந்து இன்றும் குறள் நிலைத்து நிற்கிறது. மேலும்
வள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக் காலம். இன்று அது மறைந்து
சனநாயக காலத்தில் இருக்கிறோம். அன்று பயணம் என்பது கட்டை வண்டிப்
பயணம். இன்று விண்கலப் பயணம். அன்று ஒரு சிலருக்கே கல்வி . இன்று
அனைவருக்குமான கல்வி. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் திருக்குறள்
நிலைத்து நிற்பதற்குக் காரணம் என்ன என்று வா.செ. குழந்தைசாமி கேள்வி
எழுப்புகிறார். அதற்கு இலக்குவனாரின் திருக்குறள் உரை போன்றதுதான்
என்றும் கூறலாம். காலம் மாறும் போது குறளுக்கான விளக்கமும்
எளிமையாகவும், தெளிவாகவும், அதே சமயத்தில் சுருக்கமாவும், நல்ல
ஆராய்ச்சிப் போக்குடனும் உரை அமைவதே குறள் காலம் கடந்து நிற்கக்
காரணமாகும். அதனை சி.இலக்குவனார் செய்திருக்கிறார்.
முனைவர் செ. இரவிசங்கர்,உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை‡ 625 021
அலை பேசி: 9943812252
Comments
Post a Comment