கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்
அகரமுதல
162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016
கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! –
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்!
இன்னும்
எத்தனைக் காலம்தான்
கண்ணீர் விடப்
போகின்றீர்கள்
இழந்தவற்றை எண்ணி?
இன்னும்
எவ்வளவு நேரம்தான்
கண்ணீர் சிந்தப்
போகின்றீர்கள்
உங்கள் தனியரின்
கல்லறையின் முன்னால்
கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல
கருத்தரிப்பதற்கே!
ஓர்
இருளின் உகத்தை
எரிப்பதற்காகத் தான்
அவன்
சூரியனாகிப் போனான்
போராளி நடந்த
சுவடுகளைத்
தொட்டுப் பாருங்கள்
சுள்ளென்று சுடும்
அவன்
விடுதலையின் தாகங்கள் !
அவன்
உயிரின் ஆன்மா
எதை நினைத்து
உறங்கிப் போயிருக்கும்
தனது
தோளில் தாங்கும்
விடுதலை வேட்கையைத்
தனது சந்ததி
சுமக்கும் என்றுதானே….
அவன் வீரமரணத்தின்
அருத்தத்தை
அசிங்கப்படுத்தாதீர்!
கண்ணீர் விடுவது
கன்னத்தில் கை வைப்பது
கோழையின் செயல்!
விழிகளைத் துடையுங்கள்
தெளிவான பாதையைத்
தேடுங்கள்
மீண்டும் மீண்டும்
இழப்புகள்
எதிரொலிக்கலாம்
இழப்புகள் இன்றி
எதுவுமேயில்லை
இழந்தவற்றில்
இருந்துதான்
அவன் எழுந்தான்!
எரிந்த குடில்
கருகிய வயல்
எரியுண்ட படிப்பகம்
வாழ்விழந்த பெண்
ஓடிய குருதி
அயலவரின் பிணம்
இழப்புகளிலிருந்து தான்
அவன் எழுந்தான்!
கண்ணீர் சிந்தி
கல்லறையைக்
களங்கப்படுத்தாதீர்கள்
விழிகளைத் துடையுங்கள்
விரைவாய்
அவன் வழி தொடருங்கள்
கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல !
– ஈழத்து நிலவன்
Comments
Post a Comment