Skip to main content

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6




தலைப்பு-இலக்குவனாரின் பன்முக ஆளுமை, இ,திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_panmuka_aalumai_ilakkuvanar-thiruvalluvan
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6
உரைநயம் உணர்த்தும் உரை வளம்
 
இலக்குவனார், இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார்.
பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமை
  எல்லாரும் இந்நாட்டு அரசர், அமைச்சர் யார்?,  திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம்  அல்லது காதல் வாழ்க்கை, வள்ளுவர் வகுத்த அரசியல் என்னும் தலைப்பிலான திருக்குறள் விளக்க நூல்கள் பேராசிரியரின் ஆராய்ச்சிப்புலமையைத் தெள்ளிதின் வெளிப்படுத்துகின்றன. தள்ளற்பாலன சாற்றும் இயல், அறிவன தெரிவன அறையும் இயல், கொள்ளற்பாலன கூறும் இயல் என்ற முறையில் திருக்குறள் அதிகாரங்களைத் தொகுத்துத் தரும் முறையும் அதிகாரங்களுக்கான விளக்கங்களும் திருக்குறள் கருத்துகளுக்கு மாறுபடாத பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமையை நன்கு வெளிப்படுத்துகின்றன.
பேராசிரியரின் ஆராய்ச்சி அணுகுமுறைகளின்  சிறப்புகள்
 
இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
  1. எளிமை
    2. நுண்மை
    3. பகுத்தறிவுப் பார்வை
    4. தமிழ் நெறிப் பின்புலம்
    5. பெண்ணுரிமை பேணல்
    6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்
    7. ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல்
    8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை
    9. தனியர் தாக்குதல் இன்மை
    10.கருத்தில் வன்மை
    11.நடையில் மென்மை
    12.வகுத்தும் தொகுத்தும் விவரித்தல்
    13.சொல்விளக்கமும் இலக்கணக் குறிப்பும்
    14. அறிவியல்பார்வை
    15. புரட்சி எண்ணம்
  இவை அனைத்தையும் காண்பதற்குக் காலச் சூழல் இடந்தராமையால் – பானைச் சோற்றுக்குப் பதம்பார்ப்பது போல் – இவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
மகளும் மகனும் இணையே!
  மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும் பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள் முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.[2]
பெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,
தந்தை  மகற்குஆற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67)
என்கிறார் உலகப் புலவர்  திருவள்ளுவர். பேராசிரியர் இலக்குவனார், பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
மகற்குஎன்று கூறினாலும் மகளும்அடங்குவர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச் செல்லினும் எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை கூடும் இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில் அமரும் தகுதியைக் குழந்தைகட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா வாயிலாகப் பெற்றோரின் கடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.[3]தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய தம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர் விளக்கியுள்ளது எந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி :  சென்னை வானொலி நிலையம்

        ‘நட்புஇணைய இதழ்
குறிப்பெண் விவரம்:
[2] வள்ளுவர் கண்ட இல்லறம், பதிப்புரை
[3] வள்ளுவர் கண்ட இல்லறம்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்