Skip to main content

பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 - செ. இரவிசங்கர்




  தலைப்பு-இலக்குவனார்-திருக்குறள் உரைச்சிறப்பு, செ.இரவிசங்கர் ;thalaippu_ilakkuvanarin_thirukkuralurai_chirappu_se-ravisankar

பேராசிரியர்  சி.இலக்குவனாரின் 

திருக்குறள் உரைச் சிறப்பு   1/2                                        

 முன்னுரை:
 திருக்குறளுக்கு  உரையெழுதிய பலருள்  சி.இலக்குவனாரும் ஒருவர்.  தமிழுக்காகப் பணி  செய்த  மாபெரும்  அறிஞர் இலக்குவனார்  என்பதை  இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின்  முலம்  அறியலாம்.             “இலக்குவனாரின்  தமிழறிவும்ஆற்றலும்,  துணிவும்,  திறமையும்,  அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும்,  விடா முயற்சியும்,  தொண்டு  புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும்  பாடுபடும் தன்மையும்  பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்”   என்கிறார்.  இது முற்றிலும்  உண்மையாகவே  அவரது   தமிழ்ப்பணியைப்  பார்க்கும்போது  தெரிகிறது. இவ்வளவு  திறமையும்  உழைப்பும்  கொண்ட  இலக்குவனாரின் பணிகளுள்  திருக்குறளுக்கு இயற்றியுள்ள  உரைப் பணி போற்றத்தக்கதாகும்.  இக்கட்டுரை   அவரின்   திருக்குறன்  உரைச்சிறப்பைப் பற்றி அமைகிறது.
உரையின் தோற்றம்:
  பொதுவாகவே வாய்மொழியாக இருந்த  பாடல்கள் எல்லாம் சுருக்கமாக எழுதப்பட்டன.  காலம்  செல்லச்செல்ல  அவ்வாறான பாடல்கள் அடுத்த கால வளர்ச்சியில் புரியவில்லை. எனவே மக்கள்  புரிந்து  கொள்வதற்காக விளக்கம் தேவைப்பட்டது.
  அப்போது உரை  எல்லா  இலக்கியங்களுக்கும்   தோன்றியது.  அது போலவே திருக்குறளுக்கும்  உரை தோன்ற ஆரம்பித்தது.  ஆரியர்களின்  ஊடுருவலால்  தமிழ்நாட்டின்  அரசர்களைத் தன் வயப்படுத்தினர்.  இந்நிலையில்,   தங்கள்  மொழியே  உயர்ந்தது  என்றும் தங்கள் பண்பாடே உயர்ந்தது  என்றும்  கருத்துப்பரவலை  ஆரியர்கள் திட்டமிட்டுச்  செய்துவந்தனர்.  அதனுடைய விளைவாக, ஆரியரின் சமசுகிருதம்  தேவமொழி என்றும்  தமிழ்  நீசமொழி என்றும் தேவமொழியில்தான்  உயர்ந்த  இலக்கணங்களும்,  இலக்கியங்களும்  தத்துவங்களும் தோன்ற முடியும் என்றும், நீசமொழி தமிழில்  உயர்ந்தஇலக்கணங்களும்    இலக்கியங்களும்   தத்துவங்களும்    தோன்ற முடியாது என்றும் கருத்துகளைப் பரப்பித் தமிழினத்தைத் தாழ்த்த அவர்கள் முயன்றுள்ளனர்,  என்பர் கு.மோகனராசு.
   இந்தச் சூழ்நிலையில்  இருந்து தமிழ்  மொழியையும் தமிழ்நாட்டையும் காக்கத்  தமிழ்ப்புலவர்கள் முயன்றனர். “பண்டைய  தமிழ்  இலக்கண இலக்கியங்களை முன்னிறுத்தி மக்களிடையே ஓர் எழுச்சியை  ஏற்படுத்தினர்.  பண்பாட்டில்  சீர்குலைந்த  மக்களுக்கு  அவற்றைக்  கற்பிக்கத்  தொடங்கினர்.   இதனால்  பண்டைய  தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு  உரை  காண  வேண்டிய  தேவை  ஏற்பட்டது”,   என்று  ந.இராசசெல்வம் குறிப்பிடுகிறார்.  இது போன்றுதான் ஏதோ ஒரு  தேவை  ஏற்பட்டதன் விளைவாகப் பழந்தமிழ் நூல்களுக்கு  உரை  எழுந்துள்ளன.  அந்த  வகையில்  தான்  திருக்குறளுக்கும் உரையெழுந்துள்ளன.
திருக்குறள்  உரை:
    திருக்குறளுக்கான  உரை  என்பது  இரண்டு  விதங்களில் அமைந்துள்ளன.  ஒன்று  சமயத்தின்  அடிப்படையில் , மற்றொன்று  பகுத்தறிவு அடிப்படையில்.  இந்த  இரண்டையும்   தவிர்த்து  வா.செ.குழந்தைசாமி  மட்டும்  வாழும்  வள்ளுவத்தில்  அறிவியல்  அணுகு முறையில்  பார்த்துள்ளார்.  ஆனால்  அது  உரையல்ல.  உரை  எனில்  மேற்கூறிய  இரண்டில் மட்டும்தான்  இது வரையில்  அனைத்து  உரையாளர்களும்  கூறிவந்துள்ளனர்.  ஆனால்  அவற்றில்  காலத்தின்  மாற்றத்திற்கேற்ற புதுமையான  விளக்கங்களால்  ஒவ்வொரு உரையாசிரியர்களும்  தங்களைத்  தனித்துவப்படுத்திக்  கொள்கின்றர்.  அவர்களில்  சி.இலக்குவனாரும்  ஒருவர்.
சி.இலக்குவனாரின்  உரைச் சிறப்பு:
   சி.இலக்குவனார்   திருக்குறளைப் பகுத்து  தொகுத்து  மிகவும்  அருமையான உரையை  வழங்கியுள்ளார்.  அதாவது  மரபைத்  தொடர்ந்தும்  தேவையான  இடங்களில்  புதுமையான  விளக்கங்களாலும்  அளவான  கருத்துகளைக்  கொண்டு  உரை  அமைத்துள்ளார்.   திருக்குறள்  ஒரு சிறந்த  வாழ்க்கை  நூல்;  தமிழில்   பிறந்தது; உலகத்துக்குரியது;  சாதி,  மதம், நிறம்,  மொழி,  நாடு முதலிய  வேற்று மைகளைக் கடந்து  நிற்பது.  இத்தகைய  நூலை  மக்கள்  வாழ்க்கையில் மருவுமாறு  செய்ய  வேண்டுவது  பொதுமை விரும்புவோர்  கடன்.
     “இந்நாளில்  திருக்குறளுக்குப்   புதுப்புது  உரைகள்  காணப் படுகின்றன.  அவற்றுள், பொருந்தியன  சிலவே.  அச்சிலவற்றுள், ஒன்று      தமிழ்ப் பேராசிரியர்  சி.இலக்குவனார்  உரை என்று  கருதுகிறேன். இதுவரையில்  சில  பகுதிகள்  என்முன்னே படித்துக்காட்டப்பட்டன. அவை  காலத்துக்குரியன  என்று  கண்டேன்”,  என்று  திரு.வி.க.  இலக்குவனாரின் அமைச்சர் யார்?(1949)  நூல்லுக்கான தமது முகவுரையில்  கருத்துரைத்துள்ளார்.
   அதாவது  இலக்குவனார்  தொடர்ந்து  திருக்குறளைப் படித்து, அதனை  ஆராய்ச்சி  செய்து  மற்றவர்களில்  இருந்து  வேறு விதமாக  உரையயழுதியுள்ளார்.  அவர்  செய்துள்ள   உரை
  1. எளிமை
  2.  சுருக்கம்
  3. நடைமுறை வாழ்க்கையைப் பொருத்திக் காண்பது
போன்றவற்றில் அமைகிறது.
 எளிமை:
    பொதுவாகத்  திருக்குறளுக்கு  உரை  வகுத்தவர்கள்  எளிமையான சொற்களையும்,  வாக்கியங்களையும்  தவிர்த்தே  உரை  எழுதி உள்ளனர்.  குறிப்பாக  பரிமேலழகர்  உரையில்  எவ்விடத்திலும்  எளிமையைக்  காணமுடியாது.  ஒருவிதமான  கடின  நடை  இடம்  பெற்றிருக்கும்.
              அகர  முதல  எழுத்தெல்லாம்;  ஆதி
               பகவன்  முதற்றே  உலகு   (குறள் 01)
என்னும்  குறளுக்குப்  பலரும்  பலவிதமான  உரைகளைத் தந்துள்ளனர்.
   மணக்குடவர்: ‘எழுத்துகள்  எல்லாம்  அகரமாகிய  எழுத்தைத் தமக்கு முதலாக உடையன.  அவ்வண்ணமே  உலகம்  ஆதி ஆகிய  பகவனைத் தனக்கு  முதலாக  உடைத்து என்றவாறு ’ என்கிறார்.
  பரிதி :    ‘உயிர்  எழுத்துப் பன்னிரண்டும்  அகரம் முதல் எழுத்தாதல்   முறைமை போல ,  ஆதியான  பகவன்  முதலாம் உலகத்துக்கு என்றவாறு’  என்கிறார்.
     பரிதி கூறும் 12 எழுத்து  என்பது  குறளில்  இடம் பெறவில்லை. இது போலவே  அனைத்து  உரையாசிரியர்களும்  தமது  உரையைக் கூறியுள்ளனர்.   ஆனால்  இலக்குவனார்   ‘எழுத்துக்கள் எல்லாம் ‘அ ’  என்னும்  ஒலி வடிவை  முதலாக  உடையன.  அதுபோல  உலகம்  ஆதியாகிய  பகவனை  முதலாக உடையதாய் அமைகிறது.’  மேலும்  கடவுள்  வாழ்த்தில்  இடம்பெற்றுள்ள  அனைத்துக் குறளுக்குமான  உரைகளை மிகவும்  எளிமையானதாக இலக்குவனார் அமைத்துள்ளார்.
  பொறிவாயி  லைந்தவித்தான்  பொய்   தீரொழுக்க
  நெறி  நின்றார்  நீடுவாழ்வார்                          (குறள் 06)
என்ற குறளுக்குப்  பழைய  உரைகளைப் படிக்கும் போது  மிகப்பெரிய குழப்பம்தான் மிச்சப்படுகிறது.    “மெய், வாய், கண், மூக்கு, செவி  என்னும்  ஐம்பொறிகளின்  வழியாக வரும் ஊறு,  சுவை,  ஒளி,  நாற்றம் , ஓசை என்னும்  ஐந்தின்  கண்ணும்  செல்லும்  மனநெகிழ்ச்சியை அடக்கலானது  மெய்யற்ற  ஒழுக்க  நெறயிலே  நின்றாரன்றே நெடிது வாழ்வார்  என்றது” என்று  மணக்குடவர்  உரை வரைந்துள்ளார்.  இதனை மீண்டும் மீண்டும்  வாசிக்கின்ற போதுதான்  ஓரளவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது.  ஆனால்  இலக்குவனாரின்  உரை  மிக எளிமையாக ஒரே முறை  வாசித்தவுடன்  புரிந்து போகிறது.
 “மெய்,  வாய்,  கண்,  மூக்கு,  செவி  என்னும்  பொறிகளை  வழியாகவுடைய  விருப்பங்களையும்  கொடுத்தவனாகிய  கடவுளின் பொய்மை நீங்கிய  ஒழுக்க  வழியின்கண் தவறாது  நின்றவர்கள  எக் காலத்தும்  வாழ்வார்கள்”.  இந்த  உரை  விளக்கம்தான்  இன்றைய மாற்றம் பெற்றுள்ள  சமுதாயத்திற்குத்  தேவை.  அதனை  இலக்குவனார் நன்கு  புரிந்து கொண்டு  திருக்குறளுக்கு  உரை  வகுத்துள்ளார்.
 இது போல  பல  இடங்களில்  எளிமையான,  படித்தவர்கள், குறைவாகப் படித்தவர்கள் என்ற  அனைவருக்கும்  குறள்  புரிந்து  கொள்ளும் அளவில்  உரையை  எழுதியுள்ளார்  அறிஞர் இலக்குவனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
முனைவர்  செ. இரவிசங்கர்,
 உதவிப்பேராசிரியர்,  ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம்,
 மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,  மதுரை‡ 625 021
 அலை பேசி:  9943812252

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்