அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை
அகரமுதல
162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016
அறம் செய விரும்பு!
வாகை சூடி வரவேற்று, வந்தவிருந்தினர் மகிழ வகை செய்து
பணிவுடன் அன்பும் காட்டுந் திறம்
பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்!
ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம்
ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம்
கொல்லா நெறியும் வாய்மையும் அறம்
கோபம் வென்ற சாந்தம் அறம்!
தன்னல மில்லாத் தியாகம் அறம்
தாய், தந்தையரைப் பேணுதல் அறம்
பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம்.
பேதம் இல்லா சமுதாயமே அறம்!
அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம்
அறத்தின் சிறப்பே அன்ன சத்திரம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம்
அக்கினி மதுரைச் சிலம்பின் சீற்றம்!
இனியவை கூறி இடர்தீர்த்தல் அறம்
ஈதல் இசைபட வாழ்தல் அறம்
இல்வாழ்வை இயல்பொடு அமைத்தல் அறம்
எதிர்பார்ப் பில்லாக் கடமையே அறம்!
இம்மையும் மறுமையும் ஈடின்றி வாழ
இன்னாப் பிறப்பை இனியதாய் மாற்றும்
பேரின்பம் அளிக்கும் பெரும்புகழ் சேர்க்கு மறம்.
ஆதலால் மனமே! அறம் செய விரும்பு!
[15.10.2016, சனிக்கிழமை
அன்று, தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மா), இனிய நந்தவனம் அறக்கட்டளை
(தமிழ்நாடு) இணைந்து யாங்கோன் ஓர்ச்சிட்டு உணவகத்தில் நிகழ்த்திய
இலக்கியப் பெருவிழாவில் பாடிய கவிதை வரிகள்]
– ஞா.மணிமேகலை
தமிழாசிரியை
தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்
யாங்கோன், மியான்மா
தமிழாசிரியை
தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்
யாங்கோன், மியான்மா
Comments
Post a Comment