அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
98. எது அறிவு?
நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று.
மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா?
நண்பன் : ஆம்! அரபு நாட்டான் ஒருவன் வந்தான். ஊரும் தெரியாது; பெயரும் தெரியாது! அவனிடம் போய் 5 குதிரைக்கு 500 பொன் பேசி குதிரை கொண்டு வரும்படி, முன்பின் யோசியாமல் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறீர்களே! இது முட்டாள்தனமல்லவா?
மன்னன் : நாளைய தினம் அவன் குதிரைகளைக் கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்து விட்டால் நீ என்ன செய்வாய்?
நண்பன் : நான் என்ன செய்வேனா? உங்கள் பெயரை அடித்துவிட்டு அந்த இடத்தில்
அவன் பெயரை எழுதிவிடுவேன் என்றான்.
எப்படிக் கதை நகைச்சுவையைக் காட்டுகிறது. இது நாட்டில் உள்ள சிலரின் நடைமுறைகளைக் காட்டுமே தவிர, நல்லறிஞர்களின் வாழ்வைக் காட்டாது. நேர்மையாக நடப்பது ‘மூடத்தனம்’ என்றும் ஆகாது.
“மனம்” செல்லும் இடமெல்லாம் செல்லாமல் தடுத்து நிறுத்தி, தீமையை உணர்த்தி, நல்லவழியில் மனத்தை செலுத்துவது எதுவோ, அது “அறிவு” என்பதும், இவன் “அறிஞன்” எனப்படுவான் என்பதும் வள்ளுவர் வாக்கு.
————
99. சங்கக்கால நூல்களில் ஒரு காட்சி
அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று
என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.
அவர்களிடம் அத் தாய் கேட்டாள், “எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே!” என்று அழுதாள்.
அவர்கள் கூறினார்கள், “வீணாக ஒடித் தேடியலையாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டார்கள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும்? சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.
“முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை? அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.
கதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, “இறக்கை முளைத்த பறவையை கூண்டில் அடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.
———-
100. எப்போது புத்தி வரும்?
நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற்குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த ஆதரவை மட்டும் இளம்மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார் வழக்கறிஞர். அவ்வளவுதான்,
அடுத்த நாள் பெரிய மனைவி காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் தான்தான் முதல் மனைவி; இந்த வீடு எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்றும், தனக்குப் பின்தான் இளம்மனைவிக்குப் போய்ச் சேரவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடரச் செய்தார்கள். இளம் மனைவி மீனாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் எதிர் வழக்காடினார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்தும் வழக்கு முடியவில்லை. காமாட்சியம்மாளுக்கு நான்கு ஏக்கர் நிலமும், மீனாட்சியம்மாளுக்கு மூன்று ஏக்கர் நிலமும் செலவானது. ஐந்தாம் ஆண்டில், “இறந்துபோன கணவன் உயில் எழுதி வைத்திருப்பதால் இளம்மனைவி மீனாட்சி யம்மாளுக்கே வீடு சொந்தம்” எனத் தீர்ப்பாகி விட்டது.
சும்மா விடுவார்களா காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள், “அவ்வீடு பரம்பரையாக வந்த வீடாதலால் நீலமேகம் பிள்ளைக்கு உயில் எழுதிவைக்க உரிமை யில்லை” என்று கூறி மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. மேலும் இரண்டிரண்டு நஞ்சை நிலங்கள், நீதிமன்றச் செலவிற்கும், வீட்டு செலவிற்கும், கூட்டாளிகளின் செலவிற்கும், இருவர்க்கும் செலவாயின.
இளம் மனைவி மீனாட்சியம்மாள் தன் சிறிய தாயாரை அனுப்பி, மூத்த மனைவி காமாட்சியம்மாளைப் பார்க்க விரும்புவதாக சொல்வி அனுப்பினாள். காமாட்சி யம்மாள் ஒடோடி வந்து தன் சக்களத்தியிடம் “என்னடி செய்தி” எனக் கேட்டாள். இளையவள் தன் கையிலிருந்த ஒரு நாளிதழைக் கொடுத்து, “அக்காள்! இதைப் படித்துப் சார்!” என்றாள்.
அந்த இதழில் வெளிவந்திருந்த செய்தி இதுதான்.
“இலண்டனில் ஒருவன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அவன் கைக்குட்டைதவறிப் போய்க் கீழே விழந்து விட்டது. பின்னால் வந்தவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். முன்னால் வந்த ஒருவன், “அது தன் கைக்குட்டை கொடு” எனக் கேட்டான். பின்னால் வந்தவனோ “கீழே கிடந்த கைக் குட்டையை நான்தான் கண்டெடுத்தேன். எனக்குத்தான் சொந்தம்” எனக் கூறினான். இருவரும் நீதிமன்றம் சென்று வழக்காடினார்கள். வழக்கிற்கு இருவருடைய சட்டைகளும், கால்சிராய்களும் விற்று செலவாகி விட்டன. ஆனால் கைக்குட்டை யாருக்குச் சொந்தம் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று இருந்தது.
காமாட்சியம்மாள், மீனாட்சியம்மாளிடம் கேட்டாள், “என்னடி செய்வது” என்று,
மீனாட்சி : அக்கா! உனக்கு 6 ஏக்கர் நிலம் போச்சு; எனக்கு 5 ஏக்கர் நிலம் போச்சு இன்னும் வீடு யாருக்குச் சொந்தம் என்று முடிவாகவில்லை. நாம் மீதம் இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
காமாட்சி : அதற்கு என்னடி செய்வது?
மீனாட்சி : எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வீட்டின் நடுவில் ஒரு சுவர் எழுப்பி, நீ மேல் பாகத்தில் இரு நான் கீழ்பாகத்தில் இருக்கிறேன். அவரவர் நிலத்தை வைத்து அவரவர் சுகமாக வாழலாம்.
காமாட்சி : உன் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை; நான் ஒப்ப மாட்டேன்.
மீனாட்சி : அக்கா பிடிவாதம் பிடிக்காதே இன்னும் வழக்காடிக் கொண்டிருந்தால் இருக்கின்ற நிலமும் போய்விடுமே!
காமாட்சி : என் யோசனைப்படி நடப்பதானால் மட்டுமே இதற்கு சம்மதிப்பேன்.
மீனாட்சி : உன் யோசனை என்ன? காமாட்சி : வீட்டைப் பங்குபோடுவது கூடாது; நடுவில் சுவர் எழுப்புவதும் கூடாது. நம் இருவர்க்கும் மிஞ்சியிருக்கிற “ஏக்கர் நஞ்சை நிலத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக சமைத்து உண்டு, ஒன்றாகவே இந்த வீட்டில் சேர்ந்திருந்து வாழவேண்டும் என்பதுதான் என் யோசனை.
மீனாட்சி : அக்கா! நீ ஏன் இதை முன்னதாகவே சொல்லவில்லை?
அதற்கு காமாட்சி, “எனக்கு இப்போதுதானே புத்தி வந்தது” என்றாள்.
கதை முடிந்தது. இவர்களுக்கு இப்பொழுதாவது புத்தி வந்து இருக்கிறது. நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நம்மவரில் சிலருக்கு எப்போது புத்திவரும்.
——-xxxx——
நிறைவு
அறிவுக்கதைகள் நூறு
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
Comments
Post a Comment