ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
6. வட இந்தியாவும் தென் இந்தியாவும்
(கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை )
ஆபத்தம்பரும் பௌத்தாயனரும்
சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசி சூத்திரகாரராகிய ஆபசுதம்பர், கோதாவரி ஆற்றின் மேலைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யசுர் வேத தாட்சினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டு போகப்படுவாரல்லர். (Sacred Text Books of the East 11, page: XXXVII – XLII) அவரைக், குறைந்தது, மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு போய் நிறுத்த விரும்புகிறேன். காரணம் பாரதப் பெரும் போருக்கு ஐந்து தலைமுறைக்குப் பிற்பட்ட அஃதாவது, கி.மு. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சுவேதகேதுவை, ‘’அவர்” அஃதாவது அண்மையில் வாழ்ந்தவராக, அவர் பேசுகிறார். (Pargiter: Ancient Indian Historical Tradition, Page : 330) மேலும், ‘’ஆப்சுதம்பர், பாணினியின் இலக்கண நெறியைப் பின்பற்ற வில்லை”, “அவர் அதை அறிந்திருப்பதும் நடைபெறாத ஒன்றாம் என்றும் திருவாளர் பூலர் கூறுகிறார். (Sacret Text Book of the East. 11, page:XLII) பெரும்பாலும், அவர், பாணினிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவராவர். கி.மு. நான்காம் நூற்றாண்டு வாழ்ந்தவர் பாணினி என்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தையும், திருவாளர்கள் “கோல்டுசுடக்கர்’ அவர்களும் பி.ஆர். பந்தர்கார் அவர்களும், தகர்த்துவிட்டு, அவருடைய காலம், கி.மு. ஏழாம் நூற்றாண்டுதான் என்பதை வலுவாக உறுதி செய்யும் எண்ணற்ற சான்றுகளைக் கொடுத்துள்ளனராகவும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலோர், பாணினி கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற தவறான முடிவிலிருந்து, தங்கள், இன்னமும் விடுவித்துக் கொண்டாரல்லர். ஆபசுதம்பர், பாணினிக்கு முற்பட்டவராயின், அவருடைய காலம், நான் மேலே கருத்துத் தெரிவித்த காலத்திலும் முற்பட்ட காலமாதல் வேண்டும். ஆபசுதம் பரைப் போலவே, “சாகா” என்ற வேதக்கொள்கையின் விளக்கவுரைகாரராகிய பௌதாயனர், அவரைவிட இருநூறாண்டு மூத்தவராவர், இவ்விரு சூத்திரகாரர்களும் (Soothrakaaras) கிருஷ்ண யசுர் வேதத்தின் கதைத்திரிய” சாகா பிரிவைச் சேர்ந்தவராவர்.
இக்கொள்கை, விந்தியத்திற்குத் தெற்கிலேயே சிறப்பாகப் பரவியிருந்தது. வட இந்தியாவில், இந்நெறியைப் பின்பற்றுபவர், கடந்த ஆயிரம் ஆண்டுகால எல்லைக்குள் வடநாட் டிற்குக் குடிபெயர்ந்த தென் இந்தியப் பிராமணர்களின் வழிவந்தவராவர். ஒரு பிரிவு “சாகா”வைப் (வேதக் கொள்கை ஒன்றை பின்பற்றுவோர் அனைவரும், தாங்கள் வாழ்ந்திருந்த இடத்தில் வாழ்ந்திருந்தமைக்கான சிறு அடையாளம் தன்னையும் விட்டுவைக்காமல், வடக்கிலிருந்து தெற்கே குடிபெயர்ந்துவிட்டனர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் நம்மால் இயலாது. ஆதலின், ‘தைத்திரீய” சாகா, தனி சாகாவாகப் பிரிந்து வழங்கிய காலந்தொட்டு, அத் தைத்திரீய” சாகா, தென்னிந்திய சாகாவாக ஆகி யிருத்தல் வேண்டும். (பாண்டவர் பக்கம் இருந்து போரிட்ட தென்னாட்டவருள் பதித்திரி” என்பார்களும் இருந்தனர். அவர்களின் சாகா, தைத்ரேயம்” என அழைக்கப்பட்டது என்றும், வைசம்பாயனர், யாக்ஞவல்கியரின் எச்சிலை விழுங்கியது குறித்த கட்டுக்கதை, ஒரு பறவையின் பெயர், சாகா என வழங்கப்படுவதற்கான பிற்காலக் கற்பனை என்றும் எண்ணுகின்றேன். இது போலும் பேரழிவு சார்ந்த நிகழ்ச்சிக்கான சிறுகுறிப்பு தானும் புராணங்களிலோ, அல்லது மரபு வழிச் செய்திகளிலோ காணப்படவில்லை. ஆகவே, கிருட்டிண யசுர் வேதம், தட்சிண பிராமணர்களின் “சாகா”வாசு ஆதற்குப் போதுமான போக்குவரத்து, கி.மு. 14, கி.மு.13 நூற்றாண்டு காலத்தில், தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் இடையில் இருந்துவந்தது. இச்சமய நெறிக்கான விதிமுறைகளை, முதன்முதலில் வகுத்த ஒருவர், பௌதாயனர் ஆதலின் அவரை, கி.மு 900இல் கொண்டு நிறுத்த விரும்புகின்றேன். இக்காலம், பாரத்தாயனார்க்குப், பொருத்தம் அற்ற பழங்காலமாகத் தோன்றக்கூடும், ஆனால், கோதாவரி ஆற்றங்கரையில், இராமர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியர் இருந்து வந்தனர் என்பதையும், தென்னிந்தியாவை, இராமன் அமைதி நிலவும் இடமாக மாற்றியது, ஆங்கு ஆரியர்கள் மேலும் பரவுவதற்கு வழிசெய்தது என்பதையும், வேதவியாசர் மற்றும் வைசம்பாயனர் காலத்தில், கிருட்டிண யசுர் வேத மாணவர்கள், அந்த ஆற்றை அடுத்திருந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இருந்தனர் என்பதையும், அச்சாகாவின், முதுபெரும் சூத்திரகாரர் பௌதாயனர் ஆவர் என்பதையும் நினைவில் கொண்டால், மேலும், பாணினி கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதையும், ஆபசுதம்பர், பாணினியின் சமகாலத்தவர் அல்லது சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பதையும், பௌதாயனர், ஆபசுதம்பரை விடக், குறைந்தது இரண்டு நூற்றாண்டுகாலம் முற்பட்டவர் என்பதையும் ஏற்றுக் கொண்டால், பௌதாயனர் காலம் பற்றிய என்னுடைய மதிப்பீடு எவ்வாறு மறுக்கப்படும் என்பதைக் காண முடியவில்லை. ஆனால், பௌதாயனர், அத்துணைப் பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும், அவர் பெயரால் வழங்கப்படும் சூத்திரங்களுக்கு அப்பழங் காலத்தைக் கொடுக்க இயலாது; ஆபசுதம்பரின் சூத்திரங்களைப் போல் அல்லாமல், பெளதாயரின் சூத்திரங்கள், அவரைப் பின்பற்றுவோர்களில், மிகமிகப் பிற்பட்ட காலத்தவரால், பெரும் அளவில் புதியன புகுத்தலுக்கும் திருத்தங்களுக்கும் ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. காரணம் : அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு நெறிகள், அவை மிகமிகப் : பிற்பட்டன ஆதல் கூடுமோ என்ற ஐயுணர்வை எழுப்புமளவு அத்துணை விரிவாக உள்ளன. வான்கோள்களை, அவை ஆட்சிபுரியும் வார நாட்களின் வரிசையில் குறிப்பிட்டிருப்பது, அச்சூத்திரங்கள், பிற்காலத்தில், வரன்முறையின்றித் திருத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
வடஆரியப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான தென்னாட்டவர் பழக்க வழக்கங்கள்
தென்னாட்டுப் பிராமணர்களின் வாழ்க்கைமுறைகளுக்கான விதிகளை வகுக்கும் போது, பௌதாயனர், ஆரிய வருத்தத்து ஆரியர்களுக்கு, ஒருவகையில் வெறுப்பூட்டுவனவும், தென்னாட்டவர்களுக்கே உரியனவுமாய வழக்கங்களை இயல்பாகவே விவாதிக்கிறார். தென்னிந்தியர்கள், ஆரிய வழிபாட்டு நெறியை ஏற்றுக் கொண்டு, ஆரிய வாழ்க்கை முறைகளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட பின்னரும், கைவிட்டு விடாது, மேற்கொண்டிருந்த பழைய, தசுயூவழக்கங்கள் ஐந்து, பௌதாயனரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : சமயதீக்கை பெறாதவரோடு உடன் இருந்து உண்ணல். மகளிரோடு இருந்து உண்ணல் ; பழைய உணவை உண்ணல், ஒருவன், தன் தாய்வழி அம்மான் மகளோடும், தந்தையோடு உடன் பிறந்தாள் மகளோடும், காதல் உறவு கொள்ளுதல்; கூறிய இவ்வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும், அந்நாட்டு நடைமுறை விதியே, அதிகார உரிமை யுடையதாகக் கருதப்பட வேண்டும். (யத்தத் அனுபதென சஃகபோசனம், திரியா சஃகபோசனம், பர்யுசித போசனம்; மாதுல் பித்ருவசுற்துஃகிதிர் கமநம் ; இதி… தத்ர தேசப்ராமாண்யம் எவள்யாத் – Baudhayana Dharma Sutras. 1:1, 2, 3, 6) வடநாட்டு வாழ்க்கைச் சட்ட வல்லுநராகிய கௌதமர், உள்நாட்டு வழக்கங்களை, அடிப்படை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பௌதாயனர் அறிந்திருந்தார். (Mithyaitaditi Gawtaman. 1:1,2,7) அவரால் முடிந்திருந்தால், இப்பழக்க வழக்கங்களைப் பௌதாயனர் அகற்றி இருப்பார் என்பதை இது காட்டுகிறது.
ஆனால், நருமதை ஆற்றுக்குத் தெற்கில் உள்ள ஆரியர்களை, அவர்களின் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடத் தூண்டுவதற்கான வலுவற்றவராக அவர் இருந்தார். பண்டைய பழக்கவழக்கங்கள், அத்துணை எளிதில் அழிந்துவிடுவதில்லை. உண்மையைக் கூறுவதாயின், அவை என்றுமே அழிவதில்லை . மாறாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுவரையும், ஒன்று, இருந்தது இருந்தவாறே, அல்லது சிறிதே திரிந்த நிலையில் இறவாது இடம் பெற்றிருக்கும்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment