ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 – பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்- தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
வருணங்கள்
தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம். ஆரியர்களின் நால்சாதி அமைப்பு (சாதுர் வருணயம்) வேதகாலத்தில், ஆரிய வருத்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று. மகாபாரதப் போருக்குப் பின்னர் அருசுனன் எதிர்பார்த்தது போல், வட இந்தியாவில் பெரும் சாதிக்குழப்பம் (வருணசங்கரம்) நிலை கொண்டுவிட்டது. (பகவத்து கீதை 7.47 – 43). தென் இந்தியாவில் சாதுர்வருணயம் , எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது என்றும் நடைமுறையில் இருந்தது இல்லை. காரணம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் பிராமணர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முழுமையாக வேறுபட்டே இருந்தது. ஆரியச் சமய நெறிகள், தமிழ்நாட்டில் பரவுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னர், தமிழ்நாட்டு மக்கள் கற்கால அளவில், பாலை, மலை, கடல், காடு ஆறு ஆகிய நிலங்களில் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, முறையே, நாடோடும் மறவர், வேட்டுவர், மீனவர், ஆயர், உழவர் என ஐவகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இப்பழங்குடியினர் ஐவரும், ஆரியப் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளிலிருந்து, பல நிலைகளிலும் வேறுபட்ட, தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் வளர்த்துக் கொண் டனர். ஆரிய வாழ்க்கை நெறிகள், தமிழர் வாழ்க்கை நெறிகளைப் பாதிக்க இயலவில்லை . ஆகவே, தமிழரின், அம்மண்ணுக்கே உரிய நாகரீகப் பெருவெள்ளமும், வந்து புகுந்த ஆரிய நாகரீகச் சிற்றருவியும், யமுனையும், கங்கையும், பிரயாகை தொடங்கி, பலகாவதம் இரண்டின் வெள்ளமும், ஒன்றொடொன்று கலக்கப் பெறாமலே, ஓடி வருவது போல், அடுத்தடுத்து ஓடுவவாயின. நமக்கு இப்போது கிடைத்துள்ள தமிழ்ப்பாக்களில், நன்மிகப் பழைய பாக்கள், பலநூறு ஆண்டுக்காலம் வரையும், தமிழ்ப் பிராமணர்கள், தமிழரின் தேசீயப் பெருவாழ்வாம், வெள்ளப் பெருக்கிலிருந்து பெருந் தொலைவு ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர். தமிழ்ப்பாக்களின் போக்கை ஆட்கொண்டிலர் என்பதை உணர்த்துகின்றன.
பாணினியும், தென் இந்தியாவும்
மகாபாரதப் போர் முடிவிற்கும், இந்த அரசு இனம் ஆட்சியமைப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரு – பாஞ்சாலம், மகதம், அவந்தி மற்றும் பிற வட இந்திய நாடுகளில், அரச இனங்கள், வண்ணம் மாற்றிக் காட்டும் கண்காட்சி போல், மாறிமாறி ஆட்சி ஏறிய நிகழ்ச்சியில் தமிழரசர் பங்கு சிறிதே அல்லது அறவே இல்லை எனலாம். ஆகவே, பாணினி போலும், முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த, வட இந்திய சமற்கிருத நூலாசிரியர்கள், தென்னாட்டவரை, அறவே குறிப்பிடவில்லை , நான் எண்ணுவது போல், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கிய பாணினி, அசுமகம்” ஒன்று தவிர்த்து, நருமதை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டாரல்லர். “ இதிலிருந்து, திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள் தென்னிந்திய நாடுகளின் பெயர்களே பாணினிக்குத் தெரியாது எனஉய்த்துணர்கிறார். அசுடாத்தியாயி’ யைக் கற்ற, அறிவார்ந்த ஆசிரியன் எவனும், பாணினி, ஒரு பொறுப்பற்ற, அல்லது ஏதும் அறியாத இலக்கண ஆசிரியன் ஆவன் எனக் கூறுமளவு துணிவு பெற்றவனாக மாட்டான்,
ஆனால் நாம் பெற்றிருப்பது ஒரு சொல் அன்று. பாண்டியா, சோழா, கேரளா என்று மூன்று சொற்கள். ஆழமாகவும், முழுமையாகவும் ஆய்ந்து காணும் இலக்கண ஆசிரியன் எவனும் அச்சொற்களை அவன் அறிந்திருந்தால், தவறாமல் செய்திருக்க வேண்டிய, அச்சொற்களின் அமைப்பு பற்றிய விளக்கம் பாணினியால் அளிக்கப்படவில்லை. ஆகவே, தென்னிந்திய நாடுகளின் பெயர்கள் பாணினிக்குத் தெரிந்திருக்கவில்லை. அல்லது, வேறு வகையில் கூறுவதாயின், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்றே முறையான முடிவு ஆகும்” எனக் கூறுகிறார்.
பந்தர்க்கார் (Carmichael Lectures: 1918. page :4-7) இக்காரணகாரியங்களின் பொருத்தத்தை என்னால் ஏற்றுப் பாராட்ட இயலாமைக்கு வருந்துகின்றேன். பாணினி, அச்சொற்களை அறிந்திருக்க முடியும்; ஆனால், அவற்றைச் சமற்கிருதச் சொற்களாக மதித்திருக்க முடியாது. (உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள்) நாம், இப்போது பஞ்சாப் என்றும், ஆப்கானித்தான் என்றும் பெயரிட்டு அழைப்பனவும், அவற்றிற்குத் தெற்கில் உள்ள மேலும் சிலவுமான, அவர் நேரிடையாகத் தெரிந்திருந்த அண்டை மாவட்டங்களில் உள்ள இடங்கள், ஆறுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டு ஆய்வு செய்திருப்பது நடைபெற்றுளது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய அசுடாத்தியாயியை, அவருக்குத் தெரிந்திருந்த இந்திய நிலப்பரப்பில், முழுமையான நில இயல் நூலாக மதிப்பது சரியாகாது. தம்முடைய இலக்கண நூலில் குறிப்பிடாத நாடுகளின் பெயர்கள் அவருக்குத் தெரியாது என்று கூறுவதும், மேலும் ஒரு படி சென்று அவர் காலத்து ஆரியர்கள், அப்பெயர்களை அறிந்திருக்கவில்லை என நிலைநாட்டுவதும், அதைப் பெரும் நகைப்பிற்குரிய ஒன்றாகத் தள்ளிவிடுவனவாம்.
“இந்தியாவின் நனிமிகச் சிறப்பியல்பு வாய்ந்த மரமாம் ஆல், இரிக்கு வேத்தில் குறிப்பிடப்படவில்லை . ஆகவே, இரிக்கு வேதப் பாராயணப் பாடல்கள் பாடப் பெற்றபோது, ஆல் போலும் ஒரு மரம் இந்தியாவில் இல்லை என ஒருவன் மிகவும் ஆணித்தரமாக வாதிடவும் கூடும்” எனக் கூறுவதன் மூலம், இவ்வாதத்தை எள்ளி நகையாடியுள்ளார் திருவாளர் பருகிதர் அவர்கள் (Pargiter’s Ancient Indian Historical Tradition: Page: 625) “அது, ஆல் குறித்தும் உப்பு குறித்தும், இன்றைய ஆய்வாளர் முடிவுப்படி, ஆரியர்கள் சென்று தங்கியிருந்த பாரியாத்திரா . மலைக்குன்றுகள் (ஆரவல்லி மலைத் தொடர்) குறித்தும் ரிக்வேதம் ஊமையாகவே இருப்பதை ஒருவன் கருத்தில் கொண்டவழி , விந்தியமலை, மற்றும் பிற நில இயல் கூறுகள் குறித்து அவை ஏதும் கூறாதிருப்பது, அது, அவற்றை ரிக்வேதம் அறிந்திலது என்பதை உணர்த்துவதாகாது என்று, மேலும் அவர் கூறியுள்ளார். (Pargisers Ancient Indian Historical Traditions – Page : 299). இருவரில், ஒருவர், பெரும்பாலும், பாணினியின் சமகாலத்தவரும், பிறிதொருவர், அவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் சிறப்புற வாழ்ந்தவரும் ஆகிய பௌதாயனரும், ஆபசுதம்பரும் தென்னிந்தியாவில் வாழ்ந்து, வாழ்க்கைச் சட்ட திட்டங்களை வரைந்தனர். அவர்கள், ஆரியர்கள் தாம் உறுதியாக, மேலும் பாணினி எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல பெருமை சார்ந்த, முழுமை யான பல்பொருள் அறிவு நிரம்பியவராயின், தங்களுடைய வார்த்திகத்திலும், மகாபாசுயத்திலும், பாணினியின் இலக்கணக் கொள்கைகளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை, முறையே காத்தியா யனர்க்கும், பதஞ்சலிக்கும் நேர்ந்திருக்காது.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment