ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
‘’பௌதாயன தரும சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘’மாவல பித்(து)ர்ஃச் வரர் துஃகித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும். இற்றைய நாளில், தெலுங்கு பிராமணர்களிடையே, உண்மையில், இது கட்டாயமாம்; ஏனைய தென்னிந்திய பிராமணர்களிடையேயும் இதுவே பெரும்பாலான வழக்கமாம். தெலுங்கு பிராமணரல்லாதாரிடையே, தென்னாட்டுப் பிராமணரிடையே நன்கு தெரிந்த வழக்கமாம், ஒருவன் தன் உடன்பிறந்தாள். மகனை மணங்கொள்வது பொதுவான வழக்கமாம். அதனால், பிராமணரல்லாதாரால் பேசப்படும் தெலுங்குக் கிளைமொழியில், ‘’கோடலு” என்ற சொல், உடன்பிறந்தார் மகள் என்றும் பொருள்படும். மனைவி என்றும் பொருள்படும், உடன் பிறந்தான் மகனுக்கும், உடன் பிறந்தாள் மகளுக்குமிடையேயான திருமணமே, வழக்கமான திருமணமாம்; ஆதலின், அவைபோலும் திருமணம் நிகழாத போது, அவ்வுடன் பிறந்தாள் மக்கள், இழந்த அந்நல்வாய்ப்பினுக்கு ஈடுசெய்துகொள்ள முயல்வர். அது, வேறுபிற சூழ்நிலைகளில், நனிமிகக் கொடிய ஒழுக்கக் கேடோடு கூடிய கயமையாகக் கருதப்படுவதுபோல், கருதப்படுவதில்லை . உடன்பிறந்தான் மகனும் உடன் பிறந்த தாள் மகளும், ஒருவரையொருவர் மணந்து கொள்ளா நிலையிலும், சமுதாயப் பெரும்பழிக்கு ஆளாகா நிலையில், ஒழுக்க நலனைப் புண்படுத்தவல்ல, கேலியொடு கூடிய இன்ப விளையாட்டு, அவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்படுவதும் உண்டு. உடன்பிறந்தார் மக்களிடையேயான திருமண வழக்கத்தில் மற்றொரு விளைவு, தமிழில் “அத்தான்” என்ற ஒரே சொல், தந்தையொடு உடன் பிறந்தாள் மகனையும், மனைவியொடு உடன் பிறந்தவனையும், தமக்கையின் கணவனையும் ஒரு சேரக்குறிப்பதாம்”.
பருயுசித போசனம்” என்பது, பழையது உண்பதாம். ஆக்கிய சோற்றை, ஓர் இரவு, நீரில் இட்டுவைத்து உண்பது; உயிர்ச்சத்தும், ஊட்டச்சத்தும், அரைபட்டுப் போகாப் புழுங்கல் அரிசியாயின், அஃது ஓர் உடல் நலம் காக்கும் நல்ல வழக்கமாம். இவ்வழக்கம், வடநாட்டு ஆரியர்களால், அருவருப்போடு மதிக்கப்பட்டு, புனிதமற்ற செயலாகக் கருதப்பட்டது. ஆனால், ஆரிய எதிர்ப்பு இருந்தாலும், தமிழர்களால், அது விடாது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், வாழ்க்கைச் சட்டம் வகுப்போர், ஏதும் செய்ய மாட்டா செயல் இழந்து போனதைப் பருயுசித அன்னத்திற்கு அதாவது பழைய உணவிற்குப் பதிலாக உடல் உணர்வுகளுக்கு ஊக்கம் ஊட்டுவனவாய், காபி, சூட்டோடு புதிதாகப் பண்ணப்படும் அரிசி ஆப்பம் ஆகியவற்றை, மாற்றுப் பொருளாக்கித் தரும் நவநாகரீகம் செயல்படுத்திவிட்டது.
பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்
இக்காலத்தைச் சேர்ந்த, தென்னிந்தியப் பிராமணர், வட இந்தியப் பிராமணர்களைப் போலவே இறைச்சி உண்பவர்களாம். புலால் உண்ணும் விலங்குகள், பழகிய பறவைகள், பழகிய சேவற் கோழி, மற்றும் பன்றி ஆகியவை உண்ணப்படாதவை. ஆடுகள், ஐந்து ஐந்து கால்விரல்களைக் கொண்ட விலங்குகள் பஞ்ச பஞ்ச நகஹாறு முள்ளம்பன்றி, உடும்பு, முயல், முள்ளெலி, ஆமை, பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட ஐந்து விலங்குகள், (த்விகுரிஹை ), ” நீல்காய்’, புள்ளி இல்லா மான், புள்ளிமான், எருமை, காட்டுப்பன்றி, கால்களால் கிளறித் தின்னும் ஐவகைப் பறவைகள், கௌதாரி, பாறைகளில் கூடுகட்டி வாழும் புறா, “கபிஞ்சா’, “வார்த்ஃகராண்ச, மயில், கஹஸ்ரதம்ஷ்ட்ரி ‘, “சிலிசிம்’, “வர்மி”, “ப்ரஃகச்சிரசு”, “மசுகரி’, “ரொஃகிக” மற்றும் ராசி” போலும் மீன் வகைகள், ஆகிய இவை உண்ணப்படலாம் எனப் பௌதாயனர் கூறுகிறார். இந்நீண்ட பட்டியலோடு, காண்டாமிருகமும், கருப்பு மறிமானும் எதிர்ப்புக்களிடையே சேர்க்கப்பட்டன (Baudhayana Dharma Sutras. 15, 2:18) ஆபஸ்தம்பர், தின்னக்கூடாத விலங்குகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். ஆனால், இறைச்சி உண்பது. பற்றிய அவர் கொள்கைகள், பால் தரும் பசுக்கள், காளைகள் ஆகியனவும் தின்னப்படலாம் எனக் கூறும் தனியான ஒரு சூத்திரத்தைக் கொண்டிருப்பதோடு, மற்ற வகையில், பௌதாயனர் கொள்கையோடு ஒத்துள்ளன. (Apasthamba Dharma Sutras 1,3,17,30) .
‘’வாசகனேயர்’’ அவர்கள், ‘’காளை மாட்டின் இறைச்சி படையலுக்கு உரியது’’ எனப் பலர் அறிய வெளிப்படுத்திய கருத்தைத் தாம் கூறியதோடு இணைத்துக் கொள்வது பொருந்தும் என ஆபசுதம் பாயனர் கருதினார் என்பதிலிருந்து, மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான, உணர்வுபூர்வக் கருத்து தென்னாட்டில், தானாகவே கைவிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (யாஞ்யவல்கியர், ‘’பசு, காளைகளின் இறைச்சி முதிரா இளமையவாயின், அவற்றை உண்போரில் நானும் ஒருவன்” (Sat. Brah. 3:1,2,21) எனக் கூறுகிறார்.
ஆபசுதம்பர் கூற்றுப்படி, இறந்த முன்னோர்களை மகிழ்விக்கவும், செய்வோர்க்குப் பல்வேறு வகையான பலன்களை ஈட்டுவதற்கும், சிரார்த்தங்கள் ஒவ்வொரு மாதத்திலும் பிற்பகுதியில் செய்யப்படுதல் வேண்டும். அவர்கள் மனநிறைவு கொள்ளும் கால அளவு, படைக்கும் இறைச்சியின் வகைக்கேற்ப அமையும். அவ்வகையில், மாட்டிறைச்சி, அவர்களை ஓராண்டு காலத்திற்கு மனநிறைவு கொள்ளச் செய்யும். எருமை இறைச்சி, மேலும் நீண்ட காலத்திற்கும், காண்டா மிருகத்தின் இறைச்சி, அவற்றினும் நீண்ட காலத்திற்கும் மன நிறைவினைத் தரும். ‘சதபலி” என்ற மீன் வகையும், ‘’வார்தரானஸ்” எனப்படும் நாரை இனமும் நீண்ட காலத்திற்கு மனநிறைவைத் தரும். (Yajanavalkia’s Sat. Brah. 27, 16:4,726 – 28, 17:1-3)
தென்னிந்திய பிராமணர்கள், எப்போது, ஏன், இறைச்சி உண்ணலைக் கைவிட்டனர் என்பது ஒரு சுவையூட்டும்
நிகழ்ச்சியாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நான் கருதும் தமிழ்ப்புலவர் கபிலர், புலால் நாறும் கொழுத்த கறி இறைச்சித் துண்டங்களை, பூமணம் நாறும் புகை எழத் தீ கொளுத்திச் சமைத்த ஊனையும், துவையலையும், கறியையும், சோற்றையும் உண்டு வருந்தும் செயல் அல்லது, வேறு செயல் அறியாவாகலின், பாடுவார் கைகள் மென்மையுடையவாயின எனக்கூறியுள்ளார். பிறிதோரிடத்தில், தம் பாடற்காம் பரிசிற் பொருளாக, மது இருந்த சாடி வாய் திறப்பவும், ஆட்டுக் கிடாய் வீழ்ப்பவும், சமைக்கப்பட்டுக் குவிந்து கிடக்கும் கொழுவிய துவையலையும், ஊனையும் உடைய சோற்றையுமே” விரும்பியுள்ளார்.
“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ, ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா வாகலின், நன்றும்
மெல்லிய பெரும் ! —
– பாடுநர் கையே,மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு“
புறம் – 14:12-19; 1113-13
கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில், விஷ்ணு, சிவன் மீதான பக்திப் பெருவெள்ளம், தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடிற்று. இவ்வழிபாட்டு நெறிகள், சமணர் வழிகாட்டு நெறியோடு போரிட வேண்டியதாயிற்று. சமணத் துறவிகளாம் ஆசிரியர்கள்தாம், சமய உணர்வு. வாய்க்கப் பெறாத் தம் மாணவர்களுக்கு, இறைச்சி உணவினைக் கைவிடுமாறு முதன்முதலில் வற்புறுத்தினர். வைஷ்ணவ, சைவ வழிபாட்டு நெறிகள். இறைச்சி உணவு உண்டலைக் கைவிடாது போனால், சமணவழிபாட்டு நெறிக்கு எதிராக இருந்து, வெற்றி பெறல் இயலாது. ஆகவே, இறைச்சி உண்ணல், கள் உண்ணல் ஆகியவற்றிலிருந்து. ஒதுங்கி நிற்பதைத் தங்களின் அடிப்படைத் தத்துவங்களில்
ஒன்றாக மேற்கொண்டனர். தென் இந்தியாவில் வைஷ்ணவ , சைவ ஆகமங்களின் முதல் ஆசிரியர்களாக விளங்கிய பிராமணர்கள், இறைச்சி உணவினைக் கைவிட்டமைக்கு இதுவே காரணம் என யூகிக்கிறேன்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment