அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88- தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
89. சிந்தனை செல்லும் வழி
சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் –
‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர்.
அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று –
ஏணிமரத்தின் மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கிறான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணிமரததைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
சற்றுநேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை “ஆணி இறங்கவில்லையா? கான்கிரீட் சுவரா? – ” என்ன? என்று கேட்கவே,
“மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகிறேன்.” என்று சொல்வி, மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்க ஆரம்பித்தான்.
ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தவன், நன்றாக மேலே பார்த்துவிட்டு “கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே” என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்துவிட்டு சொன்னான். “என்மேல் தப்பில்லை, ஆணி கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டைலையும் கொண்டை இருக்கவேண்டிய இடத்தில் கூர்மையையும் சிந்திக்காமல் வைத்துவிட்டான், சுவரில் இஃது எப்படி இறங்கும்” என்றான்.
அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான் “ஆணிக் கம்பெனிக்காரன் மீதும் தப்பில்லை, இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கிற ஆணி – ” என்று கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு பின்பு நன்றாக சிந்தித்து போய் “இந்த சுவருக்கான ஆணியை வாங்கிக்கொண்டு வா” என்று அனுப்பினான்.
எப்படி? குறுக்குவழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இஃது ஒன்று போதுமானது.
————–
90. ஒற்றுமைக்காக
ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காகச் சந்தைக்கு அனுப்பினான்.
தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.
மேல்தூசி, கீழ்த்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ‘நாம் தேங்காயோடு இணைந்திருக்கும் போது துன்பமில்லை. இப்போது நம்மைப் பிரித்து விட்டார்கள், இப்படிச் சிதறிக் கிடக்கின்றோம்’ என்றது கீழ்த்தூசி.
அதற்கு மேல்தூசி “இது தோப்புக்காரன் தப்புமல்ல; குத்தகைக்காரன் தப்பும் அல்ல; நம் தப்புதான். நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகி விடும்.”
“நாம் சேர்ந்து இழைந்து வாழ்ந்துவருகிற சிறு இழுக்கும் கயிறாகி மணிக்கயிறாகி, பந்தல்கயிறாகி, வால் கயிறாகி, தேர்வடக் கயிறாகி ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இருந்தால், நம்மைவிட்டுப் பிரிந்த நமது எதிரிகளான தேங்காய்கள்கூட நம்மேல் மோதி தானாகவே “டாண் டாண்” என்று உடைபடும் என்றது.
அப்படியே, தேங்காய் நார்த்தூசிகளின் ஒற்றுமை வலுவினால் உண்டான தேர்வடக் கயிற்றில் மோதித் தேங்காய்களே உடைபடுகின்றன.
‘ஒற்றுமைக்கு இவ்வளவு பலம் உண்டு’ என்று அறிந்த நாமும் இனி சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வோமா?
————
91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது
ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்-கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான்.
தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான்.
தோப்புக்காரன் கேட்டான், “எதற்காக என் மரத்தின் மீது ஏறினாய்?” என்று.
திருடன் சொன்னான், “கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க.” என்று.
தென்னை மரத்திலா புல் இருக்கும்? என்று தோப்புக் காரன் கேட்டான்.
“இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே” என்று பதில் சொல்லிப் போய்விட்டான். தென்னை மரத்தில் ஏறியவன்.
இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையை செயலில் காட்டுவது மட்டுமல்ல; பேச்சிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
—————-
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment