Skip to main content

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97

 

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97



(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94 – தொடர்ச்சி)

ஒரு பெரியவர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லாரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.

இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டா, அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார்.

சிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் தான் துன்பப்படவேண்டா. சும்மாயிருங்கள் என்று சொன்னேனே! மறுபடியும் ஏன் அச்சீட்டை தேடிக் கொண்டே யிருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர்.

“நான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதை அந்தப் பயணச்சீட்டைப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும்” என்று கடுமையாகக் கூறினார்.

மறதி எல்லாருக்கும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய மறதி எவருக்கும் இருத்தல் கூடாது.
————–

ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி பையன் ஒருவனை உடனகூட்டிக் கொண்டு வந்து அவர் முன்னே வந்து நின்றாள். என்ன என்றார்கள். “இவன் சருக்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள், நான் சொல்லி இவன் கேட்கவில்லை. அதற்காகத் தங்களிடம் அழைத்து வந்தேன்” என்றாள் “அப்படியா” என்று சற்று எண்ணி இன்னும் மூன்று நாட்கள் கழித்து அழைத்து வாருங்கள் என்றார். போய்விட்டார்கள். மூன்றாம் நாள் நாயகம் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை அறிந்து, பல கற்களுக்கு அப்பால் மிகவும் துன்பப்பட்டு தன் பையனை அழைத்துக் கொண்டுபோய் பழையபடி நின்றாள். “நீங்கள் யாரம்மா” என்றார்கள் நாயகம் அவர்கள். மூன்று நாட்களுக்கு முன்பே, இந்தப் பையன் சருக்கரை சாப்பிடுகிறான்; கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொன்னேனே! நான்தான் என்றாள். ‘ஒ அவனா? தம்பி! இனிமேல் நீ சருக்கரை சாப்பிடாதே போ” என்றார்கள். அந்த அம்மாவுக்கு சிறிது வருத்தம். “இவ்வளவுதானா? இதைச் சொல்லவா மூன்று நாட்கள். இதை அன்றைக்கே சொல்லியிருக்கலாமே!” என்று கேட்கவில்லை. நினைத்தாள். அவ்வளவுதான்

உடனே நாயகம் அவர்கள், “தாயே! நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டும் சருக்கரை சாப்பிடுகிறனன் அல்லன்; நானும் அதிகமாகச் சாப்பிடுகிறவன். மூன்றாம்நாள் விட முயன்றேன்: முடிய வில்லை, நேற்று விடப்பார்த்தேன். பாதிதான் முடிந்தது. இன்றைக்கு முயன்றேன்; சக்கரையே சாப்பிடவில்லை; என்னால் அதை விட முடிந்தது. அதனாலேதான் அறிந்தேன்; சருக்கரை சாப்பிடுவதை விடமுடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது” என்றார்கள்.

இது நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டில் உள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொடவேண்டும். நபிகள் நாயகம் அவர்கள் எதைச் சொல்லுகிறார்களோ, அதையே அவர்கள் செய்வார்கள். செய்யக் கூடியதை மட்டுமே சொல்லுவார்கள். செய்துகொண்டே சொல்லுவார்கள்.

இப்பழக்கம் நம்நாட்டில் பரவுவது நல்லது.
————–

நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணீர்த் தொட்டியில் கைகால்களைச் சுத்தம் செய்யும் பொழுது மரத்திலிருந்து ஒருதேள் தண்ணீர் தொட்டியில் விழுந்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. நாயகம் அவர்கள் இரக்ககுணம் கொண்டு, அத் தேளைத் தரையில் எடுத்துவிடத் தொட்டார்கள். அவ்வளவுதான். தேள் கொட்டி விட்டது. கையில் நெறி ஏறுகிறது. அந்த நிலையிலும் தண்ணீரில் நீந்த முடியாமல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடியாய் துடிக்கும் தேளின் துன்பத்தைப் பார்த்து, மனம் சகியாமல் மறுபடியும் அதை தண்ணீரிலிருந்து எடுத்து விட முயற்சித்தார்கள்.

உடனே, பக்கத்திலிருந்த அசரத்து அபூபக்கர் அவர்கள் “என்ன பெருமானே! தேள், தங்களைக் கொட்டுகிறது; மறுபடியும் அதை எடுத்துவிடப் போகிறீர்களே!” என்று கூறித் தடுத்தார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், “நஞ்சுள்ள ஓர் உயிரே தன் குணத்தைக் காட்டத் தவறாதபோது மனிதன் தன் குணத்தைக் காட்டத் தவறலாமா?” என்று கூறிக் கொண்டே இருகைகளாலும் அத்தேளைத் தண்ணீரோடு சேர்த்து அள்ளி வெளியில் விட்டுவிட்டு, அதற்குப்பின் தொழுகைக்குச் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது.

இப்போதனை தன்னை மனிதன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்