தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
தாய்மொழி என்பது தாயின்மொழி – அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!
அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!
தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!
அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!
தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல், சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!
உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும், உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன, மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!
தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!
Comments
Post a Comment