மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்
மாமூலனார் பாடல்கள் – நிறைவுரை
-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்கள்
அரசர்கள் முதலியோரின் உண்மை வரலாறுகள் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை
எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள், பல தமிழ் நூல்கள் அழிந்தவாறு அழிந்தனவோ?
அன்றி, பழந்தமிழ் நாட்டுப் பெரியார்கள் தம்மையும், தம் போன்ற மக்களையும்
பொருட்படுத்திக் கொள்ளாது தமிழையே நினைந்து, தமிழுக்காகவே வாழ்ந்து,
தமிழ்த் கொண்டு ஆற்றி மறைந்தார்களோ? அறியோம். சில பெரும் புலவர்கட்குப்
பின்னால் தோன்றியவர், புனைந்துரைத்த பொய்க்கதைகள் உண்மை வரலாறுகளாகக்
கருதப்பட்டன தொல்காப்பியர் வள்ளுவர் முதலியோர் பற்றி வழங்கும் வரலாறுகள்
அத்தகைய பொய்க் கதைகளே. பொய்க்கதையை உண்மை வரலாறு என நம்புவதினும், வரலாறு
இல்லை என்று கூறுவது சாலச்சிறந்தது.
புலவர்கள் எங்கே பிறந்தார்கள். எப்படி
வளர்ந்தார்கள் உண்டார்கள். உறங்கினார்கள் போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி
அறியமுடியாது. அவர்களுடைய புலமைச் சிறப்பு. குறிக்கோள், தமிழ்த்தொண்டு,
முதலியன, அவர்களியற்றிய பாடல்களால் விளங்குகின்றன. ஆகவே மாமூலனாரைப்
பற்றியும் அவர் இயற்றிய பாடல்களைக் கொண்டு அறிவதோடு அமைய வேண்டியதே.
நக்கினார்க்கினியர் தமது தொல்காப்பியப்
பெருளதிகார உரையில், “யோகிகளாய், உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர்
அறிவன் தேயத்து அனைநிலை வகையோர்” என்று குறிப்பிடுகின்றார் இக்கூற்றைக்
கொண்டு இவரை அந்தணர் என்றவுடன் இக்கால பிராமண குலத்தைச் சார்ந்தவர் என்று
முடிவு கட்டுதல் கூடாது. அறிவிற் சிறந்தவர் எவ்வரையும். பிராமணர்
குலத்துடன் தொடர்புடுத்தும் பொல்லாத வழக்குத் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில்
தோன்றிவிட்டது பிராமணர்களில் சிலர் அறிவிற் சிறந்திருந்தார்கள். அதனால்
அறிவிற் சிறந்தாரெல்லாரும், பிராமணராகத்தான் இருக்க வேண்டும், அல்லது
பிராமணருக்குப் பிறந்திருக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை நிலைநாட்ட
முயன்றுவருகின்றனர். அதனாலன்றோ, வள்ளுவரை, ‘ஆதி’ என்ற புலைச்சிக்கும்
‘பகவன்’என்ற பிராமணனுக்கும் பிறந்ததாகக் கதை கட்டிவிட்டனர். இக்கொள்கைகளும்
இவைபோன்ற வரலாறுகளும் ஒதுக்கப்பட வேண்டியவை.
மாமூலனார் சிறந்த புலவர் என்பதனை அவர்
பாடல்களால் அறிகின்றோம். அவர் சேரநாட்டு அரசர்களைப் பற்றி
மிகுதியாகப்பாக்களில் குறிப்பிடுவதனாலும் மலைநாட்டு இயற்கைக் காட்சிகளையும்
பழக்கவழக்கங்களையும் தெளிய உரைப்பதனாலும் பழந்தமிழ் நாடாம் சேர நாட்டில்
பிறந்திருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகின்றது. ‘மூலம்’என்ற நாளை
(நட்சத்திரத்தை)க் கொண்டமைந்த ‘மூல’நாளில் பிறந்ததால் ‘மூலர்’என்று
அழைக்கப்பட்டனர் போலும். இன்றும் சேரநாட்டு அரசர் குடியில் பிறந்தோருக்கு
அவர் பிறந்தநாளையே பெயராகச் சூடுவதைக் காண்கின்றோம். ஆகவே மாமூலனார் மலையாள
நாட்டிற் பிறந்த பெரியார் என்று கொள்ளலாம். மலையாள நாடும் பழந்தமிழ்
நாடுதானே. இவர் மலையாள நாட்டில் பிறந்திருந்தாலும் தமிழ்நாடு முழுவதும்
சுற்றியராகவும் இந்தியா முழுவதும் நன்கு அறிந்தவராகவும் வாழ்ந்துள்ளார்.
நாட்டு வரலாற்றை நன்கு அறிந்தவர் ஆவார். இப்பாடல்களில் ஆங்காங்கே
வரலாற்றுக் குறிப்புகள் காணப்பட்டதை அறிந்தோம், தமிழ்நாட்டு வரலாறு
உண்மையான முறையில் எழுதப்படுகிற போது இவர் குறிப்புக்களும் பெரிதும்
பயன்படும்.
தமிழ்நாடு அரசர்கள் காலம்
வரையறுக்கப்படுகின்ற போது தான் இவர் காலத்தையும் வரையறுத்துக் கூறுதல்
முடியும். வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்ட அரசர்களையும் கிறித்து
பிறப்புதற்கு முன்பு ஆண்ட அரசர்களைப்பற்றியும் மிகுதியும்
குறிப்பிடுகிறார்.( இவர் கி.பி. முதல் நூற்றாண்டிலோ, அதற்கு முற்பட்டோ
வாழ்ந்திருத்தல் வேண்டும்.) அகப்பொருள் பற்றிய பாடல்களில், அப்பாடல்களின்
இலக்கண முறைக்கு ஏற்ப வேண்டிய செய்தியை மட்டும் குறித்தாரேயன்றி
விளக்கமாகக் கூறிலர். வரலாறு கூறுவதும் இவர் நோக்கமன்று அல்லவா?
கிடைத்துள்ள முப்பது பாடல்கள்தாம் இவர் பாடியன என்று நினைத்தல் கூடாது. அழிந்தனபோக எஞ்சியனவே இவை என்று கொள்ளுதல் வேண்டும்.
மாமூலனார் பாடல்கள், விளக்கவுரை, அராய்ச்சிக் குறிப்பு முற்றும்.
[பின் குறிப்பு :-
மறைவாக ஏடுகளில்
இருந்த சங்க இலக்கியங்களைப் புலவர்களிடையே கொண்டு சேர்த்தவர்கள்
சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலான அறிஞர் பெருமக்கள். அறிஞர்களிடையே
இருந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் சங்க இலக்கியச்
செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். "சங்க இலக்கியத்தை வங்கக் கடலில்
எறிவோம்" எனத் தமிழ்ப்பகைவர்களும் அறியாமையால் அவர்கள் பேச்சில் மயங்கிய
தமிழ்மக்களும் கூக்குரலிடத் தொடங்கிய பொழுது, "சங்க இலக்கியம்
போற்றித்தங்கத் தமிழ் வளர்ப்போம்" என முழங்கியவர் பேராசிரியர்
சி.இலக்குவனார். வெறும் முழக்கத்துடன் நில்லாமல் சங்கஇலக்கியம் என்னும் வார
ஏட்டையும் தொடங்கி அதன் வழி மக்களிடையே சங்க இலக்கியங்களைப் பரப்பியவர்.
சங்க இலக்கியங்களுக்கு விளக்கங்கள் எழுதுமாறும் அவற்றின் அடிப்பிடையில்
கட்டுரைகள் முதலானவற்றைப் படைக்குமாறும் பிறரிடமும் அறிவுறுத்தியவர். தான்
பணியாற்றும் கல்லூரிகளெங்கும் சங்க இலக்கியங்களைப் பாடமாக
அறிமுகப்படுத்தியவர். இதனால் சங்க இலக்கியங்கள் அறிந்த தலைமுறைகளை
உருவாக்கியவர். சங்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட மூத்த அறிஞர்கள் இன்று
உள்ளமைக்கும் அவர்கள் வழி இன்றைக்கும் சங்க இலக்கிய ஈடுபாடுகொண்ட தமிழ்
ஆராய்ச்சியாளர்கள் இருப்பதற்கும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் சங்க
இலக்கிய இதழே அடிப்படையாகும். அவ்விதழில் மாமூலனார் பற்றி அவர் எழுதிய
தொடர் விளக்கக் கட்டுரைகளே அவ்விதழில் மாமூலனார் பற்றி அவர் எழுதிய தொடர்
விளக்கக் கட்டுரைகளே “சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்” என 1990-ஆம் ஆண்டு
திருமகள் நிலையத்தாரால் வெளியிடப்பெற்றது. 'அகரமுதல' இதழும் அத் தொடரை
இதுவரை வெளியிட்டு வந்தது. இப்பொழுது வெளிவருவது இறுதியாய் அவர் சுருக்கமாக
மாமூலனார் பற்றி அளித்த குறிப்புரையாகும்.
பேராசிரியர்
சி.இலக்குவனார் அன்றைய சூழலில் மாமூலனார் தெரிவித்த வரலாற்றக் குறிப்புகளை
எடுத்து விளக்கியுள்ளார். இவற்றின் அடிப்படையில் மேலும் விரிவாக ஆராய்ந்து,
படைப்புகளைக் கொணர வேண்டியது இக்கால அறிஞர்கள், ஆய்வாளர்கள் கடமையாகும்.
அவ்வாறு ஆராய்ச்சி மேற்கொள்ள, அகரமுதல மின்னிதழில் வெளிவந்துள்ள மாமூலனார்
பாடல் விளக்கங்கள், ஆராய்ச்சியுரைகள் பெரிதும் துணைநிற்கும்.
தமிழாராய்ச்சி பெருகட்டும்! சங்கத்தமிழறிவு விரியட்டும்! தமிழ் தழைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், ஆசிரியர்]
Comments
Post a Comment