மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது

மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது

lion pig
பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட
பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது?
மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு
மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது?
கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக்
கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?
கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது
கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது!
கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க்
கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது?
புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன
புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது!
கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில்
காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது
வடிவமின்றி முடிவுமின்றி வரியை ஒடிப்பது-அதை
வரம்பில்லாத கவிதையென்றா கயிறு திரிப்பது?
சிப்பிக்குள்ளே சிறுதுகளும் முத்தாய் மாறலாம்-கலைச்
சிந்தையிலே உணர்வுபொங்கிக் கவிதை ஊறலாம்
குப்பைக்குள்ளே கோழிகிண்டிப் புழுவைத் தின்னலாம்-அது
குன்றிமணி யானதென்றால் யாவர் நம்பலாம்?
குடைபிடிக்கும் குஞ்சர்களை மேடை ஏற்றலாம்-வெறுங்
கூலங்களை நூலாய்ப்போட்டுக் கூத்துக் காட்டலாம்!
துடைப்பத்துக்கும் பட்டுக்குஞ்சம் கட்டிப் பார்க்கலாம்-அது
துள்ளித்துள்ளிக் கவிஞனென்று ஊரை ஏய்க்கலாம்!
காலம்மாறும் ஊரும்தேறும் கல்விசிறந்திடும்-இந்தக்
காலிப்பானை சட்டிகளைக் காறி உமிழ்ந்திடும்!
கோலம்மாறி எத்தர்களின் கொட்டம் ஒடுங்கிடும்-புகழ்க்
குன்றின்மீது தமிழ்க்கவிதை என்றும் ஒளிர்ந்திடும்!
வம்பர்கூடித் தமிக்கவிதை மரபை உடைக்கவா? -சில
மாடுமுட்டி மலைசரிந்து மண்ணில் கிடக்கவா?
கும்பலோடு குஞ்சரோடு முயன்று பாரடா!-உங்கள்
குறுக்கொடித்துக் கொழுப்படக்கும் கவிதை வீறடா!

 seeninainamohzmmed04

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்