செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி
7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும்
சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச்
சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற
சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது
ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன.
2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு
300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு,
02.02.2014). இது சீன ‘வளர்ச்சி’யின் இன்னொரு ‘கோர’ முகம்!
ஒருபுறத்தில், தொழிற்சாலைகளுக்காகவும்,
பெரும் பெரும் திட்டங்களுக்காகவும் சிற்றூர்கள் அழிக்கப்பட்டுக்
கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் சிற்றூர்களில் பேணப்பட்டு வந்த மரபார்ந்த
சீனக் கலைகள், பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அழிந்து வருகின்றன. சீனப்
பல்கலைக்கழக மாணவர்கள் தமது முயற்சியில் அழிந்து போன அந்தக் கலைகளைப்
புதுப்பித்து, அதை பெய்சிங் போன்ற முதன்மை நகரங்களில் தமது பண்பாட்டு
அடையாளங்களாகக் காட்சிப்படுத்துகின்றனர். சில அரியவகை இசை, நடனம், சிற்பம்
முதலான கலைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதெனத் தெரிவிக்கின்றனர்.
‘வளர்ச்சி’ என்ற பெயரில், இவற்றையெல்லாம்
இழந்துவிட்ட சீன மக்கள் அதைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிகளின் மூலம்
தேடுகின்றனர். இதே நிலைதான் தமிழகத்திற்கும் வரும் என்னும் அச்சம் மிகையான
கருத்தல்ல.
தமிழகத்தில் உள்ள பல சமூகத்து மக்கள்,
குலத்தொழில்களாகப் பல அரிய கலைகளைச் செய்து வருகின்றனர். இயந்திரமயமாக்கல் –
நகரமயமாக்கல் முதலான போக்குகள், அச்சமூகங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன.
அச்சமூகத்து மக்கள் தம் குலத்தொழிலாகக் கருதி செய்து வரும் அத்தொழில்கள்
வெறும் தொழில்களாகப் பார்க்கப்பட வேண்டியவை அல்ல. மரபார்ந்த அறிவியலுடன்
பின்னிப்பிணைந்த, தமிழினத்தின் மிச்சசொச்சங்களாக அவை காட்சியளிக்கின்றன!
எடுத்துக்காட்டிற்கு ஒன்று: தமிழகத்தில்
கம்மாளர் என்றும் விசுவகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற சமூகத்தவர்கள் பல
நூற்றாண்டுகளாக மரத்தொழில், மரசிற்பம், நகைத் தொழில்உள்ளிட்ட மரபார்ந்த
தொழில்களைச் செய்து வருகின்றனர். மரத்திலான சிற்பங்களுடன் வீட்டு
முகப்பிலுள்ள கதவுகள், மர நாற்காலி, மேசைகளில் சிற்பங்கள், கோயில் தேர்கள்,
அழகுசெய் பொருட்கள் என இச்சமூகத்தினரால்உருவாக்கப்படும்பொருட்கள்
அனைத்தும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய தமிழின முன்னோரின் மரபுத்
தொடர்ச்சியின் அடையாளங்கள்!
தமிழகத்தில் குவிந்துள்ள மார்வாடிகள்
முதலான அயலார்கள் வட்டித் தொழில் முதலான தொழில்களின் மூலம் ஈட்டிய பண
வருவாயைக் கொண்டு, பல புதிய கருவிகளை மும்பையிலிருந்து இறக்குமதி
செய்துள்ளனர். இவ்வகைக் கருவிகள், வடநாட்டவர்களின்வீடுகளில் உள்ள
‘சுவத்திக்குக்’ குறியீடு, விநாயகர் சிலை போன்றவற்றை மரத்திலும்,
நெகிழியிலும் சில மணி நேரங்களில் அச்சடித்துத் தருகின்றன. புதுச்சேரியில்
இதுவரை 6 இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே
இத்தொழிலில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி
உள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள இத்தொழில்களை
வளர்த்தெடுக்கும் நோக்கில், அத்தொழில்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தி
அதைக் கல்விக்கூடங்களில் பயிற்றுவித்து அடுத்த கட்டத்திற்கு அதை
நகர்த்திச் செல்ல முடியும். அத்தொழில்களைச் செய்து வருகின்ற குடும்பங்களைச்
சேர்ந்த இளம்தலைமுறையினருக்கும் பிற சமூகத்தினருக்கும், வேண்டிய
சலுகைகள்அளித்து அத்தொழில்கள் அழிந்து விடாமல் பாதுகாத்திட முடியும்.
ஆனால், மிகை உற்பத்தி நோக்கில் நகரமயமாக்கலையும் இயந்திரமயமாக்கலையும்
தீவிரப்படுத்தி வரும் முதலாளிய அரசுகள், இதைச்செய்ய முன்வராது
என்பதே எதார்த்தமான உண்மை! கடந்த 2013 மே மாதத்தில், இ.கா.எ.அ / IKEA
[இங்குவார் காம்பிராடு, எலமிடாரிடு & அகுன்னாரிடு (Ingvar Kamprad,
Elmtaryd & Agunnaryd)] என்ற சுவீடன்நிறுவனத்திற்கு, இந்தியாவில்
10,500 கோடி உரூபாய்க்கு அயலக முதலீடு செய்து கொள்ள இசைவளிக்கப்பட்டது.
இந்நிறுவனம், வீடு – அலுவலகத்திற்கான நாற்காலிகள், மேசைகள்ஆகியவற்றை செய்து
தருகின்ற நிறுவனமாகும். அதாவது, 10,500 அளவிற்கு இத்தொழிலில் முதலீடு
செய்யவுள்ள இந்த ஒரே நிறுவனத்தால், இத்தொழிலை ஏற்கெனவே சிறுதொழிலாகச்
செய்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்வேலையிழந்து நிற்கதியாவர்.
இப்பொருட்கள் அனைத்தும், மேற்குலக நாட்டு மக்களின் பயன்பாட்டுப் பொருட்களை
ஒட்டியே வடிவமைக்கப் பட்டிருக்கும் என்பது இன்னொரு உண்மை.
இதே போக்கு நீடித்தால், தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களை, நாமும் தொல்பொருள்அருங்காட்சியகங்களில் காணும்நாள் வெகுதொலைவில் இல்லை!
(தொடரும்)
Comments
Post a Comment