Skip to main content

க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்

 




(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி)

இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர், தமது மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கவும், தமிழ்ச்சொற்களை வடமொழிச் சொற்களாக்கவும் தமிழ் தழுவிய கிரந்த எழுத்துகளை ஆக்கினர். அவற்றுள் குறிப்பிடத்தக்க  எழுத்துகள் ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ என்பன.

வருஷம், விஷயம், புஷ்டி, ரோஜா என்னும் சொற்கள் தமிழிலிருந்து ஆக்கப்பட்டவை. இந்த எழுத்துகளைத் தமிழுடன் கலந்து எழுதியமையால்தாம் தமிழில் மணிப்பவளநடை தோன்றியது. பல தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்தன. இன்றும் பார்ப்பனர் நடத்தும் செய்தித்தாள்கள் தமிழ் அழிப்புப் பணிகளைச் செய்கின்றன.

வானொலி நிலையங்களும்   இவ்வகையில்   விலக்கல்ல.    பார்ப்பன ஏடுகளும், பார்ப்பனர்களும், பார்ப்பனர் சார்பாக வாழும் தமிழர்களும், தமிழ்மொழி வளர வேண்டுமாயின், பிற மொழிச்சொற்களைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்கின்றனர்.  இவர்கள், தமிழ்மொழியை அறியாதவர்கள்.  மக்கள் மொழி இயக்கம் என ஒன்று அமைத்துச் சில்லோர், தமிழ் ஒழிப்புப் பணி செய்கின்றனர்.  எழுத்துச் சீர்திருத்தம், மொழிச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தமிழ் மொழியை அழிக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.

தட்டச்சு, கணிப்பொறிகளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகளை மாற்றியமைக்க வேண்டுமென்று பாடுபடுகின்றனர் பலர்.  இவர்கள் யாவரும் தமிழ் வளர்க்கவே பாடுபடுவதாகப் பசப்புகின்றனர்.  ஆனால், அது உண்மைக்கு மாறானது.  தமிழில்; பல சொற்கள் மக்கள் மொழியில் பிழைபடப் பொருளற்ற வகையில் பலுக்கப்படுகின்றன.  காட்டாக, சில பேச்சு வழக்குச்சொற்களான பொண்ணு, புள்ளை, பொண்டாட்டி, வந்திச்சி, போனிச்சி, குடுத்தேன், நவந்துக்க, சென்னேன், வயக்கம், பயக்கம், வளக்கம் முதலியன காண்க.  இக்கொச்சைச் சொற்கள் தமிழ் மொழியை வளர்க்கா. 

இத்தகைய கொச்சைச் சொற்களையும், நாற்றம், எண்ணை, தண்ணி போன்ற வழுச்சொற்களையும் தமிழ் மக்கள் இலக்கியத்தில் தவிர்க்க வேண்டும்.  எவரேனும், கொச்சைச் சொற்களையும், வழுச்சொற்களையும் எடுத்தாண்டிருப்பின், திருத்தி வெளியிடுவதே தமிழை வளர்க்கும்.  ஒரு தமிழ்மகள் பாடிய நாட்டுப்புறப்பாடலின் ஈரடிகளை ஈண்டு தருகிறோம்.  தன் கணவன் இறுதி மூச்சை விட்டபின் புலம்பியது அது.

            சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சில் காட்டூடே

            நில்லென்று சொல்லி நிறுத்திவழி போனீரே!!

இக்காலம் தமிழ்நாட்டில் தமிழின் நிலை சீர்குலைந்து நிற்கின்றது. தமிழ்மக்கள் பேச்சு வழக்கில் தமிழ்ச்சொற்களைக் காண்பதரிது.  தமிழ்மக்கள் பெயர் தமிழில் இல்லை;  தமிழர் கடைகளின் பெயர்கள் தமிழாக இல்லை.  தமிழ் எப்படி வாழும்? வளரும்?

                  (நன்றி : தமிழ் மக்கள் இலக்கியம்)

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்