Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : புலவர் கா.கோவிந்தன்: காத்தியாயனரும் பதஞ்சலியும்

 




(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி)

பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர். பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்தியாயனார், ஒரு தென்னிந்தியர் ஆவர். அக்குறிப்பு பின்வருமாறு. ‘பாணினி அவர்களின் அட்டாத்தியாயின் வார்த்திக ஆசிரியரான வரருசி காத்தியாயனரின் இயற்பெயர்), ஒரு தென்னாட்டவர் என்ற உண்மை, தென்னாட்டவர், வியாகரண பாசுயகாரர் ஆகிய பதஞ்சலியின் தந்திர வடிவங்களில் விருப்புடையவராவர்: (பிரியதத்தித தாட்சிணாத்யாஃக) சொல்லும் அதன் பொருளும், அவற்றின் தொடர்பும் நிலை பேறுடையவாயின், அச்சொல், அப்போது உலக வழக்கில் உள்ள பொருளில் வழங்கப்படுமாயின், இலக்கண அறிவு. “லொகவெதெக” என்பதை ஆள்வதற்குப் பதிலாகத் “தத்திதப்ரத்யய’த்தைப் பயன் கொண்டு வரருசி , ‘லௌசீகெ வதிகெசு‘ என்பதை ஆண்டுள்ளார் எனக் கூறும் மகாபாசியத்தின் முதல் ஆனிகாவில், அபூர்வதருமம், தியாகதருமம் குறித்த சரியான சொற்களை ஆளுவதில் விதிமுறை வகுக்கிறது (சிந்த்ஃகே சப்தார்த்ஃக சம்பந்திஃகே லொகதொரத்ஃகப்ரயுக்த சப்தப்ரயொகெ சாசத்ரென தரும நியமஃக யத்ஃகா லெளகிகவைதிகெசு) என்ற அறிவிப்பிலிருந்து உண்மையாகிறது. ஒரு சமற்கிருத இலக்கண ஆசிரியர் மரபே, தென்னிந்தியாவில் உருவாகிவிட்டது. பாணினி நன்மிகச் சேயதான காந்தார் நாட்டில், எழுதிய இலக்கணத்தை அவர்கள் கற்றுத் தெரிந்தனர். அந்நூலின் பொருளுக்கு மேலும் விளக்கம் ஊட்டும் உரைகளை எழுதுமளவு தேர்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்ய இதுவே போதுமானது.

காத்தியாயனர், ஒரு தென்னாட்டவராகவே, சமற்கிருத இலக்கியங்களில், ‘’பாண்ட்ய ‘’, “சொட’’, “கெரள” என முறையே திரிந்து வழங்கப்படும் “பாண்டிய’, “சோழ”, “சேர” என்ற சொற்கள் பாணினியால் ஆராயப்படவில்லை என்பதை உணர்ந்து, அவற்றின் சொல் அமைப்பு குறித்து, விதிமுறைகளை வகுக்க முனைந்தார். ‘’வழிவழி மரபில் வந்தவர் எனும் பொருள் உடையதான ‘அஞ்” என்ற விகுதி, ஒரு சொல்லின் ஈற்றில் வந்து, அவ்வாறு வருவதால் ஒரு நாட்டினைக் குறிப்பிடும் அதே நிலையில், சத்திரிய இனத்தைச் சேர்ந்த, ஓர் அரசமரபையும் குறிப்பிடும்” எனக் கூறும் ஒரு விதியினைப் பாணினி அவர்கள் இயற்றினார்கள் , [சளபத சப்தாத் சத்திரியாத் “அஞ்” (அட்டாத்தியாயீ 4 : 168)] இவ்விதி, போதுமான பொருள் விளக்கம் உடையதல்லதாகவே, காத்தியாயனர், பல துணைவிதிகளை இணைத்தார் : அவற்றுள் மூன்றாவது விதி, ‘’சத்திரிய அரச இனங்களையும் நாடுகளையும் ஒரு சேர உணர்த்தும் சொற்களைப் பொறுத்த மட்டில், அச்சொற்களை, அவற்றுள் அரசனை உணர்த்தவும் செய்ய வேண்டுமாயின், “மகன்” என்னும் பொருள் உணர்த்துவதான ஒரு விகுதி இணைக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது. (சத்திரிய சமான சப்தாசு சனபதாத்சுய ராச நியபத்யவத்’) அவ்வகையில், பாஞ்சாலர்களின் அரசன் “பாஞ்சாலஃகு’’ என வரும். இவ்விதியும், பாண்டிய என்ற சொல் தோன்றுவதற்கான விளக்கம் தரவல்லதாகாது. ஆகவே, “பாண்டு” என்ற சொல்லைப் பொறுத்தமட்டில், ட்யன் என்ற விகுதி ஆளப்படும். அவ்வகையில் பெறப்படும் சொல் ‘’பாண்ட்ய’ என்பதாம் எனக்கூறும் வேறு ஒரு விதியினைக் காத்தியாயனர் வகுத்தார். (பாண்டொர் ட்யன் வக்தவ்யஃகு” (பதஞ்சலியின் வியாக்கரண மகாபாசியத்தின் திரு. கெயி லாரன்சு அவர்களின் பதிப்பு : பகுதி : 2. பக்கம் 269) “சொட’’ மற்றும் வேறு சொற்களின் தோற்றம் குறித்துப், பாணினியின் வேறு ஒரு விதியினை மேற்கொண்டுள்ளார் காத்தியாயனர்.

“காம்போச என்ற சொல்லுக்குப் பின்னர் ஈற்றுவிகுதி எதுவும் இல்லை ” என்பதே அவ்விதி. இவ்வகையில், ஒரு நாட்டைக் குறிக்கும் “காம்போச” என்ற சொல்லிலிருந்து அதன் அரசன் பெயராம் “காம்போசஃக” என்ற சொல் பெறப்படும். காத்தியாயனர், இவ்விதியை, “காம்போச மற்றும் பிற சொற்களுக்கு இணைக்கும் “‘லுக்’ என்ற விகுதி சொட” மற்றும் பிற சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் விரிவுபடுத்தினார். (கம் பொசா திப்யொலுக் வகனம் சொடாத்யர்த்ஃகம்”.) இவ்வாத்திகம் (விதி) சொடஃகு, கதொஃகு, சௌஃகு என்ற சொற்களின் தோற்றத்திற்கு வழி செய்வதாகப் பதஞ்சலி கூறுகிறார். இவ்வகையில், இவ்விரு சொற்களும் அந்நாடுகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து பெறப்பட்டன. ஆனால், பாண்ட்யா என்ற சொல் மட்டும், ஒரு நாட்டின் பெயராகவும் ஓர் அரச இனத்தின் பெயராகவும் ஒரு சேர வழங்கப்பெறும் பாண்டு என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்ற கருத்துடையவர் காத்யாயனரும், பதஞ்சலியும் எனத் தெரிகிறது.

மதுரை சூழ்ந்த நாட்டிற்கு அரசு வழங்கிய பழங்குடி இனம், பாண்டியர்” என அழைக்கப்பட்டனரே அல்லது பாண்டு என அழைக்கப்படவில்லையாதலின், இச்சொற் பிறப்பு முறை ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. உண்மை இயல்பு இதுவாகவும், இச்சொற்பிறப்பு முறைமீது, பாண்டு என அழைக்கப்படும் வடநாட்டு சத்திரிய இனம் ஒன்று தென்னாடு நோக்கிக் குடிபெயர்ந்து, தென்னாட்டிலும், இலங்கையிலும் பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற மிகப் பெரிய கோட்பாட்டினைக் காட்டிவிட்டார் திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள். [Carmichal Lectures : 1918 Page: 9-13)]

காத்தியாயனரோ, பதஞ்சலியோ, பாண்டு என்ற சொல், ஒரு வடநாட்டு அரச இனத்தின் பெயர் என்று கூறவில்லை ஆளும் ஓர் அரச இனம், ஒரு நாடு இவற்றைக் குறிப்பதாதலே போதும். ஆளும் அரசர்கள் அனைவருமே சத்திரியர்களாகக் கருதப்பட்டனர் ஆதலின், பாலி மொழியில் “பண்டு” என வரும் “பாண்டு” என்ற சொல்லை, ஒரு சத்திரிய இனத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டதில் பதஞ்சலி பெரியதொரு பிழையினைச் செய்துவிடவில்லை. ஆனால், அதையே அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இனம் அல்லாத ஒரு வெளிநாட்டு இனத்தவர் படையெடுப்பினைக் கட்டிவிடுவது, முற்றிலும் தவறானதாகும், திருவாளர், டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், தம்முடைய கூற்றினை வலுப்படுத்துவதற்காக. மெகத்தனிசு அவர்களின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டப் பட்டதாகக் கூறப்படும் பொருளற்ற, பொருத்தம் அற்ற ஒரு கட்டுக்கதையினை வலிந்து புகுத்தியுள்ளார். எராக்லெசு, இந்தியாவில் ஒரு மகளை ஈன்றெடுத்தார். அம்மகளை அவர், பண்டைய எனப் பெயரிட்டு அழைத்தார். அவளுக்குத் தெற்கு நோக்கி நீண்டு, கடல் வரையும் பரவியிருந்த நாட்டை அளித்தார். ஆங்குக், கப்பம் கட்டுவதில் தவறியவர்களை வற்புறுத்தித் திறை செலுத்தும் முறைமைப்பாடு உடையவரின் துணை அரசியார்க்கு எப்போதும் கிடைப்பதற்காக, ஒரு நாளைக்கு ஒரு சிற்றூர், அரண்மனைக் கருவூலத்திற்கான கப்பத்தைக்கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டு, ஆங்கு, அவள் ஆட்சிக்குட்பட்ட மக்களை, 365 ஊர்களுக்குமாகப் பங்கிட்டு அளித்தான்’’ எனக் கூறுகிறது அக்கதை . (Macrindle. Ancient India as described by * Megasthenes and Arrian. – Page : 159.)

(தொடரும்)

புலவர் கா.கோவிந்தன்

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்