Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் – முன்னுரை

 அகரமுதல

குமரிக்கோட்டம்

முன்னுரை


காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன.

‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம்.

இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, உரோசம்  நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும்.

மகன் தலைகால் தெரியாமல் ஆடுகிறான் , சாதி ஆச்சாரத்தைக் கெடுக்கிறான் என்று சீறுகிறார் தந்தை. அவரால், காதல், சாதிக் கட்டுப்பாடுகளை மீறக்கூடிய சக்தி என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடிய வில்லை மகன் அழுதபோதும் சரி, அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுங்கூட நெடுநாட்கள் வரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை – ஒரு களங்க மற்ற கன்னியின் புன்னகையைக் காணும் நாள்வரை.

அந்த நாளோ, அவருக்கு அபூர்வமான ஆசிரியன் கிடைத்துவிட்டான். பல திங்கள் படித்துப் பெற வேண்டிய பாடத்தை அவர், ஒரே ஒரு பார்வையின் மூலம் பெற்றார். மகனது மனத்தின் தன்மை அவருக்குப் புரிந்தது. ஆனால் தம் மனத்திலே கிளம்பிய ‘காதலை’ என்ன செய்வது என்று புரியாமல் சில நாட்கள் இருந்தார். அவர் மட்டுமா – யாருந்தானே ! பிறகு அதற்கும் வழி கண்டார். ஆனால் குறுக்குவழி !

அந்தக் குறுக்குவழி , பெண்களை விபசாரப் பகுதியில் தள்ளும், பயங்கரப் பாதை. குமரிக்கு, அந்த வழியில் நடக்கும் நுழைவுச் சீட்டுதான் கிடைத்தது. ஆனால், அவளுடைய அண்ணனும், இலட்சிய வீரனான் , வைதீகரின் மகனும் அவளைக் காப்பாற்றினர். திருப்பணி புரியக் கிளம்பிய வைதீகர், பிறகு நேர்வழி நடந்தார், குமரியுடன்.

அவர்களைப் பற்றிய கதை இது. அவர்கள் வேறு யாருமல்ல, இன்றைய சமுதாய அமைப்பு முறையிலே நாம் காணக்கூடிய. ஒரு சராசரிக் குடும்பம். இனி அவர் களைச் சந்தியுங்கள்.


கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம் – தொடரும்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue