Skip to main content

செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

 அகமுதல





செம்மொழிச் சிந்தனை : என்னுரை

உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் தலைமையில் ’செம்மொழிகளின் வரிசையில் தமிழ்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுரையினை வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இக்கருத்தரங்கில் பெருமளவில் பங்கேற்ற தமிழறிஞர்கள், மொழிநூல் அறிஞர்கள் போன்ற அனைவரின் ஒருமித்த பாராட்டுதலையும் பெற்ற இந்த ஆய்வுரை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய களஞ்சியம் இதழிலும் வெளியிடப் பெற்றது.

இதைத் தொடர்ந்து செம்மொழித் தமிழ் தொடர்பான வேறொரு கட்டுரையினை அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதி தினமணி நாளிதழில் வெளியிட நானும் ஒரு சில ஆய்வுரைகளைப் பல்வேறு கோணங்களில் வடித்து அவற்றைச் ‘செம்மொழிகளின் வரிசையில் தமிழ்’ என்ற தலைப்பில் தனிநூலாக வெளியிட்டிருந்தேன்.

பத்து ஆண்டுகள் தொடர்ந்து தமிழறிஞர்களையும், ஆய்வாளர் களையும், தமிழார்வலர்களையும், அயலகத் தமிழர்களையும் ஒருங்கே கவர்ந்த இந்தச் சிந்தனைகள் அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய கூரிய தமிழ்நெஞ்சத்தைத் தொட்டபோது அவை நெருப்புத் தழலாக ஓங்கி உயர்ந்து ஒளிபரப்பித் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் பற்றிப் படர்ந்து சுடரொளி வீசத் தொடங்கின.

இந்தப் பின்னணியில் 1996 – ஆம் ஆண்டில் தினமணி நாளிதழ் மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்குரிய முயற்சிகளை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒரு தலையங்கம் தீட்டியது. அன்றைய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு. தமிழ்க் குடிமகன் அவர்களுக்கு இது தொடர்பாகத் தகுந்த நெறிப்படுத்துதல்களை மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்கவே அவர் என்னைத் தொடர்பு கொண்டு தமிழக அரசு சார்பில் மைய அரசுக்கு தமிழக அரசின் கோரிக்கையாக வழங்க பரந்த நோக்கில் பிறமொழிக்குழுவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தமிழை ஒரு செம்மொழி என்று நிறுவும் ஆய்வறிக்கையினை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தயாரிக்க வேண்டுகோள் விடுத்தார்.

நான் தயாரித்த அறிக்கையைப் படித்து வியந்து பாராட்டிய மாண்புமிகு கலைஞர் அவர்கள் அதனை வல்லுநர்களுக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலையும் பெற்று மையஅரசுக்கு வழங்க ஆணையிட்டார்.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தேறிய வல்லுநர்க் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்ற இந்த அறிக்கை தமிழக அரசின் சார்பாக மைய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1996-இல் மைய அரசுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கையினைத் தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் இப்பொருண்மை குறித்தும் அதோடு தொடர்புடைய பல்வேறு தலைப்புக்களில் தொடர்ந்து சிந்தித்தும், எழுதியும், பேசியும் வந்துள்ளேன். இன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. தாலின் அவர்களை, சூலை 1998-இல் வட அமெரிக்காவிலுள்ள செயின்ட் (உ)லூயிசு மாநகரில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற தமிழர் விழாவின்போது சந்தித்து இந்த அறிக்கை பற்றியும் ஆசியவியல் நிறுவனத் தமிழ்ப் பணிகள் குறித்தும் விரிவாக உரையாடினேன். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் இடையறாத முயற்சிகளால் மைய அரசிடமிருந்து தேசிய நிலையில் 2004-இல் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பாடு வழங்கப்பட்டது. இந்த உயரிய தகுதிப்பாட்டிற்கு நான் தயாரித்த ஆய்வறிக்கை அடிப்படை ஆவணமாக அமைந்தது என்னை மகிழ்ச்சியடையச் செய்தது.

மைய அரசுக்கு அனுப்பப்பட்ட என் ஆய்வறிக்கையினைத் தாங்களே தயாரித்ததாக இருட்டடிப்புச் செய்து பலர் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டது எனக்கு அப்போது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எனவே 2004 முதல் 2007 வரை நான்கு ஆண்டுகள் செம்மொழித்தமிழ் என்னும் பொருண்மை குறித்து எழுதுவதையும் பேசுவதையும் நான் சற்றுக் குறைத்துக் கொள்ள நேரிட்டது.

எனினும் 2008 – இல் செம்மொழித் தொடர்பான முதல் பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்வேறு நாட்டு அறிஞர்களின் இணைந்த முயற்சியாக மைசூரில் நிறுவப்பட்ட செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையோடு ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில் மிகச் சிறப்பாக என்னால் சென்னையில் நடத்தப்பட்டது. என் பாசத்திற்கும் பெருமதிப்பிற்குமுரிய பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இந்த உலகளாவிய கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை வழங்கினார்கள். அரசு சார்பில் என்னால் தயாரிக்கப் பெற்று மைய அரசுக்கு அனுப்பப்பட்ட செம்மொழித் தமிழ் ஆய்வறிக்கையை மைய அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துப் பரிந்துரை செய்த அனைத்திந்திய மொழிகள் ஆய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் உதயநாராயண (சிங்கு) போன்றோர் கலந்து கொண்டு இக்கருத்தரங்கினைச் சிறப்பித்தனர். சுகாட்டுலாந்து நாட்டுப் பேரறிஞர் ஆசர் (கீ.உ. Asher) அமெரிக்க நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் டேவிட்டு பக்கு, உருசிய நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்குசாண்டர் துபியான்சுகி மற்றும் கொரிய, சப்பானிய, செருமன் நாட்டு அறிஞர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உலகு தழுவிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினர். இவ்வுரைகளைத் தொகுத்து ஆங்கில மொழியில் வெளியிட்டதோடு ‘வரலாற்று நோக்கில் செம்மொழித் தமிழ்’ என்ற தலைப்பில் நீண்ட அறிமுக உரையும் ஆங்கில மொழியில் என்னால் எழுதப்பட்டது.

மாண்புமிகு பேராசிரியர் அவர்களின் தொடக்க உரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு அறிஞர்கள் பலருக்கும் இலவசமாக அனுப்பி வைத்தோம். மாண்புமிகு பேராசிரியர் அவர்களின் ஆழமான தமிழ்ப் புலமையினையும் உறுதியான தமிழ்ப்பற்றினையும் தமிழாய்வை, உலகு தழுவிய பரந்த நிலையில் பிற நாட்டு நல்லறிஞர்களின் துணையோடு ஒரு பன்னாட்டு இயக்கமாகவே வளர்க்கும் ஆசியவியல் நிறுவனத்தின் இடையறாத ஆய்வுப் பணிகளில் அவருக்கிருந்த ஈடுபாட்டையும் இவ்வுரை மிகவும் தெளிவு படுத்தியது.

கோவையில் மாண்புமிகு கலைஞர் அவர்கள் நடத்திய உலகளாவிய முதல் செம்மொழித்தமிழ் மாநாடு தமிழாய்வு வரலாற்றில் உச்சம் தொட்ட பன்னாட்டு நிகழ்வாக அமைந்தது. இம்மாநாடு நடை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்ப் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிற்கு இம்மாநாட்டின் வரலாற்றுப் பின்னணி, மாநாட்டுப் பங்கேற்பாளர்கள், மாநாட்டுக் குறிக்கோள் ஆகியன குறித்து விரிவான பேட்டி ஒன்றினை மாண்புமிகு கலைஞர் அவர்கள் வழங்கினார். இப்பேட்டியில் தமிழக அரசு சார்பாக ஆசியவியல் நிறுவனத்திலிருந்து நான் தயாரித்த ஆய்வறிக்கை, அதில் விவாதிக்கப்பட்ட பொருண்மை, அந்த ஆய்வறிக்கையின் தனித்தன்மை ஆகியவற்றை விரிவாக விளக்கிப் பேசி தமிழக அரசு சார்பில் எனக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். அதோடு ஆங்கிலத்தில் அமைந்த என் அறிக்கையில் விவாதிக்கப் பட்டுள்ள செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு சுருக்கமாகத் தமிழில் தாமே மொழியாக்கம் செய்து வழங்குவதாகக் குறிப்பிட்டு என் அறிக்கையினை ஏறத்தாழ இரண்டு பக்க அளவில் அழகிய தமிழில், மொழியாக்கம் செய்து சிறப்பாக வெளியிட்டார். இந்து, எக்சுபிரசு போன்ற ஆங்கில நாளிதழ்களோடு அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளும் அவரது பேட்டியினை வெளியிட்டன. முரசொலி இதழில் இது இரண்டு நாட்கள் தொடர்ந்து வெளி வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆங்கில இதழான The Rising Sun இதழில் என் நிழற்படத்தோடு இச்செய்தி விரிவாக வெளிவந்தது. கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டு வரவேற்புரையிலும் என் ஆய்வுரை குறித்துப் பாராட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மாண்புமிகு கலைஞரின் இந்த நேர்மையான பரந்த உள்ளம் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. மீண்டும் செம்மொழித் தமிழ் தொடர்பான கட்டுரைகளை எழுதுவதில் அதிக வேகத்துடன் ஈடுபட்டேன். செம்மொழித்தமிழ் மாநாட்டின் போது பொது அரங்கில் ‘தாய்மைத் தமிழ்’ எனும் தலைப்பில் உரையாற்றுமாறு நான் பணிக்கப் பட்டேன். மாண்புமிகு போராசிரியப் பெருந்தகை அவர்கள் ‘உலகச் செம்மொழிகள்’ என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலருக்கு ஓர் ஆய்வுரை வழங்குமாறு என்னைப் பணித்தார்கள். இந்த ஆய்வுரையும், ‘தாய்மைத் தமிழ்’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையும் அறிஞர்களை மிகவும் கவர்ந்தன.

உலகளாவிய நிலையில் தமிழாய்வை எடுத்துச் செல்வதில் மாண்புமிகு கலைஞர் அவர்கட்கும் மாண்புமிகு பேராசிரியர் அவர்கட்கும் மிகுந்த ஈடுபாடு இருந்தது. குமரிக்கடலில் வான்புகழ் வள்ளுவருக்குச் சிலையமைத்த பெருவிழாவில் கலந்து கொண்டு ‘உலகப் பொதுமறை திருக்குறள்’ என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்குமாறு நான் பணிக்கப்பட்டிருந்தேன்.

2000 ஆண்டின் இறுதி நாளிலும் 2001-ஆம் ஆண்டின் தொடக்க நாளிலும் (புத்தாண்டு) திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தென்குமரியில் நடைபெறுவதாக இருந்தது. விழா நடப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விழாவின் ஒரு பகுதியாக வெளிநாட்டு அறிஞர்கள் பங்கு கொள்ளும் ஓர் ஆய்வரங்கை அமைக்க மாண்புமிகு முதல்வர் விழைவதாகவும் என்னோடு தொடர்புடைய வெளிநாட்டு அறிஞர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆவன செய்யுமாறும் வேண்டினார். வெளிநாட்டு அறிஞர்கள் புத்தாண்டின் போதும் கிறித்துமசு நாட்களின்போதும் பெரும்பாலும் தங்கள் சொந்தக் குடும்பத்தோடு தங்கள் தாய்நாட்டில் தங்குவதையே விழைவர் என்றும் வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால்கூட பல மாதங்களுக்கு முன்னரே தம் பயண ஏற்பாடுகளை இறுதி செய்து விடுவர் என்றும் மிகக்குறுகிய காலத்தில் அவசர கோலத்தில் அவர்கள் இந்தியா வருவது அரிது என்றும் குறிப்பிட்டேன். எனினும், உடனடியாக அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று தொலைபேசியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களைத் தொடர்பு கொண்டேன். பலர் மறுத்தனர்; சிலர் தயங்கினர். எப்படியும் இறுதியில் அமெரிக்கா, செருமனி, இங்கிலாந்து, ச்ப்பான், தாய்லாந்து போன்ற பல நாடுகளிலிருந்து பேராசிரியர் ஆசர் (R.E. Asher) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அறிஞர்களைக் குமரியில் திசம்பர் மாதம் 30-ஆம் நாள் நான் கொண்டு நிறுத்தியது மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

தென்குமரியில் நடைபெற்ற ஆய்வரங்கில் திருக்குறள் குறித்த என் உரையினைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டிய மாண்புமிகு கலைஞர் அவர்கள் அதனை விரிவாக நூலாக வெளியிடக் கருத்துரைத்தார். அதோடு சென்னை திரும்பியதும் சில நாட்களில் மாண்புமிகு கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்க அழைப்பு வந்தது. ஆசியவியல் நிறுவனத் தமிழ்ப் பணிகளை வியந்து பாராட்டிய கலைஞர் அவர்களிடம் தேசிய நிலையில் செம்மொழித் தகுதிப்பாட்டினைக் கேட்டிருக்கும் நாம் உலக அளவில் இத்தகுதிப்பாட்டினைப் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திருக்குறள் தொடர்பான ஆய்வுப் பணிகளையும் உலகளாவிய நிலையில் மேற்கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோள் செயல்படுத்தப்படும் என்று கூறி புன்முறுவலுடன் விடை தந்தார். திருக்குறள் குறித்த உலகளாவிய ஆய்வுப் பணிகளில் அதிக முனைப்போடு ஆசியவியல் நிறுவனம் ஈடுபட மாண்புமிகு கலைஞரின் இந்த ஊக்க உரைகள் வலுவான அடித்தளத்தினை அமைத்துத் தந்தன.

தமிழுக்கு உலகளாவிய நிலையில் செம்மொழித் தகுதிப்பாடு கிடைக்கப் பாடுபடும் எண்ணத்தோடுதான் செம்மொழி மையத்தினை அவர் சென்னையில் தோற்றுவித்தார். திருக்குறளுக்கு உலகளாவிய தகுதிப்பாடு கிடைப்பதற்குரிய வாய்ப்புக்களை உருவாக்கும் எண்ணத்தோடு நான்கு உலகளாவிய மாநாடுகளைப் பல பிறநாட்டு அறிஞர்களோடு இணைந்து நடத்தியதோடு பல வெளியீடுகளையும் ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில் கொண்டு வந்தோம். இந்த நல்ல  முயற்சிகளுக்குத் துணைக்கரம் நீட்டி ஆதரவு நல்க முந்தைய தமிழக அரசிடம் நிதியும் இல்லை; மனமும் இல்லை; தமிழ் உணர்வும் இல்லை. ஆசியவியல் நிறுவனத்திற்கு 1982 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ஆண்டு மானியத்தினை செம்மொழி மாநாட்டினைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் வழங்காது உலகு தழுவிய உயர்நிலைத் தமிழ்ப் பணிகளைச் சிதைவடையச் செய்யும் மன உறுதியை அது பெற்றிருந்தது எங்களை வேதனையும் வியப்பும் அடையச் செய்தன. மாண்புமிகு கலைஞர் அவர்களின் ஆட்சி அப்போது தொடராததால் ஆசியவியல் நிறுவனத்தின் பல நல்ல தமிழ்ப்பணிகள் நலிவடைந்தன. தமிழ் வளர்ச்சியில் பெரும் தளர்ச்சி ஏற்பட்டது.

செம்மொழித் தமிழ் தொடர்பாக 2010 வரை என்னுள் எழுந்த சிந்தனைகள் பல நூல்களில், பல இதழ்களில் சிந்திச்சிதறிக் கிடப்பதை ஒன்றாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற என் எண்ணம் இந்நூல் வழியாகச் செயல்வடிவம் பெறுகின்றது. இந்த ஆய்வுரைகளுள் பெரும்பாலானவை தோன்ற எனக்கு ஊக்க ஊற்றாக அமைந்தவர்கள் மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுமே. இவர்கள் இருவரும் நல்கிய ஊக்க உரைகள் இப்பொருண்மையில் தொடர்ந்து நான் எழுதத் துணை நின்றன. செம்மொழிகளின் வரிசையில் தமிழ் என்ற தலைப்பில் அமைந்த என் நூலினை ஆங்கிலத்திலும் வெளியிடப் பலமுறை மாண்புமிகு பேராசிரியர் அவர்கள் என்னிடம் வேண்டினார்கள். அதனையும் விரைவில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். செம்மொழித்தமிழ் தொடர்பாக நான் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் என் சிந்தனைகள் செம்மொழித் தகுதிப்பாட்டினை மைய அரசிடமிருந்து பெற்றதற்குரிய தமிழக அரசின் அடிப்படை ஆவணமாக அமையவும் துணை நின்றவர்கள் மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களும் மாண்புமிகு இனமானப் பேராசிரியர் அவர்களுமே. நல்ல உள்ளம் படைத்த, தமிழ் மறவர்களான இவ்விருவரின் நினைவாக இந்நூலை வெளியிடுவதைப் பெறற்கரிய பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

செம்மொழித் தமிழ் என்ற ஒரே மையக்கருத்தில் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சூழல்களில் இக்கட்டுரைகள் எழுந்ததால் பல கருத்துகள் மீண்டும் மீண்டும் அமைந்து கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு ஆளாகியுள்ளதை நான் உணர்கிறேன். பல இடங்களிலும் முன்னர்ச் சொன்னக் கருத்துக்களை மீண்டும் மற்றொரு சூழலில் சொல்ல வேண்டிய அவசியம் இந்தத் தொகுப்பு நூலில் தவிர்க்க முடியாததாகவே அமைந்துள்ளன.  

தொடக்க நிலையில், அதாவது செம்மொழித்திட்டப் பணியினை தமிழக அரசு மேற்கொள்வதற்கு முன்னர், எழுந்த ஆய்வுரைகளை நான் எழுதியதற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் ஊக்க உரைகள் துணை நின்றன. அன்னாருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை உரிமையாக்குகிறேன்.

சிந்திச் சிதறிக் கிடந்த இந்த ஆய்வுரைகளைத் தொகுத்துத் தனிநூலாகக் கொண்டுவரத் துணைநின்ற என் மனைவி திருமதி இந்திரா சாமுவேலுக்கும் என் மகள் சீபா சாமுவேலுக்கும்  என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது.

இந்நூலைத் தட்டச்சு செய்த திருமதி காஞ்சனா தேவி, அழகிய முகப்போவியம் வரைந்த திரு செயபாலன், சிறப்பாக அச்சிட்ட மோகனா அச்சக உரிமையாளர் திரு. சிங்காரவேலு ஆகியோருக்கு என் பாராட்டுதலும் வாழ்த்துகளும் உரியன.

தமிழாய்வில் பல புதிய பார்வைகளையும் புதிய பரிமாணங் களையும் இணைக்க முயலும் நல்ல ஆய்வறிஞர்களுக்கு இந்நூல் சிந்தனை விருந்தாக அமையட்டும்.

சி.சான்சாமுவேல்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue