Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4. 6-10

அகரமுதல


(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 1-5 தொடர்ச்சி)

இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்

4. தலைமக்கட் படலம்

6.     ஏந்திய செல்வ மோங்கு மிரும்புனல் மருதந் தன்னில்

                 வாழ்ந்தவே ருழவ ரோங்க வருமுதற் றலைவர் முன்பு

                 போந்தவ னரணந் தங்கிப் பொருள்வளம் பொலியக் காத்து

                 வேந்தனென் றானா னப்பேர் மேவினார் வழிவந் தோரும்.

           7.     கடல்கடந் தயனா டேகிக் கலனிறை பொருள ராகி

                 மடலுடைத் தாழைச் சேர்ப்பின் மணலுடை நெய்தல் வாழும்

                 மிடலுடை நுளையர் தங்கள் மேலைய தலைவன் முந்நீர்

                 நடையுடை வருணன் ஆனான் நண்ணினர் பின்னு மப்பேர்.

           8.     அன்னநால் வருந்தம் மக்கட் காவன வியலு மாற்றான்

                 மன்னிய தலைமைக் கேற்ற வாறுசெய் துலகர் போற்றும்

                 நன்னரா யிருந்த தாலந் நானிலத் தலைவ ராகப்

                 பின்னவ ரேற்றிப் போற்றும் பெரும்புகழ் பெற்றா ரம்மா.

           9.     மன்னிய குறிஞ்சி முல்லை மருதநீள் நெய்த லென்னும்

                 அன்னநா னிலங்க டோறு மாளர சிருக்கை யெய்தி

                 நன்னரி னமைந்து வேண்டும் நலமெலா முடைய தாகத்

                 தன்னிகர் தானே யான தமிழகம் பொலிந்த தம்மா.

           10.    முடியுடை மூவ ரோடு முதல்வர்தங் காப்பின் மிக்க

                 நடையுடைத் தாய பின்றை நானிலக் கிழமை நீங்கிக்

                 கொடையுடைத் தமிழ வேளிர் குறுநில மன்ன ராக

                 நெடுநிலக் கிழமை பூண்டு நின்றது தமிழர் வாழ்வே.

+++

6. அரணம் – கோட்டை, காவல். வேந்து – காப்பு.

7 சேர்ப்பு – கடற்கரை, மிடல் – வலி. நடை – ஒழுக்கம். வருணம் – கடல். வருணன் – கடலுக்குரியவன்.

+++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue