Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 47

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  46 தொடர்ச்சி)

“நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன்.

பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில் ஏறுவதற்கு முன்னால் ஓரிடத்தில் ஆற்றின் கரையோரமாக ஒரு தோப்பில் இறங்கி உணவை முடித்துக் கொண்டார்கள். உணவை முடித்துக் கொண்டதும் அவர்கள் மறுபடியும் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.

வளைந்து, நெளிந்து, முடிவற்று, ஊர்ந்து கொண்டிருக்கும் கருநாகம் போன்ற மலைப்பாதையில் கார் ஏறியது. பாதையின் இருபுறமும் எதேச்சையாய்க் கவனிப்பாரற்றுக் கிடக்கும் செல்வம் போல் இயற்கையின் கொள்ளை கொள்ளையான அழகுக் காட்சிகள். கீழே அதலபாதாளத்துக்கு இறங்கும் நீலப்பசுமை விரிந்த பள்ளத்தாக்குகள். மேலே வீறுகொண்டு வீங்கிய மலைக் கொடுமுடிகள். எத்தனை நிறத்துப் பூக்கள்! எத்தனை விதமான கொடிகள்! எவ்வளவு பெரிய மரங்கள்! எட்டிப் பிடித்து இழுத்துத் தடவுகிறாற்போல் மிக அருகில் மேகம் தவழும் ஆகாயம். கார் வளைவுகளிலும் திருப்பங்களிலும் திரும்பும் போதெல்லாம் ‘இதோ இங்கேதான் நான் இருக்கிறேன்’ என்று ஓடிவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் புதிய புதிய இயற்கைக் காட்சிகள். குலை தள்ளிய தாய்மைக் கோலம் காட்டும் மலை வாழைத் தோட்டங்கள், கொத்துக் கொத்தாய்க் கொடி முந்திரிப் பழங்கள் தொங்க திராட்சைக் கொடி படர்ந்த பசும் பந்தல்கள், எல்லாம் வனப்பின் வெள்ளமாய்த் தெரிந்தன. ‘கை புனைந்து இயற்றாக் கவின் பெருவனப்பு’ என்று இயற்கை அழகை நக்கீரர் வருணித்ததை நினைத்துக் கொண்டாள் பூரணி. மலை வாசத்தின் சிறப்புக்களைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. எழுதியிருக்கும் உருக்கமான கட்டுரை அவளுக்கு நினைவு வந்தது.

‘கொடைக்கானல் இத்தனை அழகாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை, வசந்தா! போன கோடையின் போது உன் அம்மா கூப்பிட்டார்கள். நான் வராதது எத்தனை நட்டம் என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது’ என்று தன் அருகில் மௌனமாக வீற்றிருந்த வசந்தாவின் பக்கம் திரும்பிக் கூறினாள் பூரணி.

அலுப்படைந்து சலித்தாற் போன்ற குரலில் வசந்தா பதில் சொன்னாள். “முதல் தடவை வருவதனால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எனக்கு என்னவோ வருடந்தவறாமல் பார்த்துச் சலித்து விட்டது. நாங்கள் இலங்கையில் இருக்கும் போது அப்பா ஒவ்வோர் ஆண்டு மார்ச்சு மாதம் எல்லாரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார். சூலையில் தான் மறுபடியும் இலங்கை திரும்புவோம். அப்பாவின் நினைவுக்காகத்தான் அம்மா இன்னும் இங்கிருக்கிற பங்களாவை விற்காமல் வைத்துக் கொண்டிருக்கிறாள்.”

“கண்டிப்பாக விற்கக் கூடாது. உங்கள் அம்மாவிடம் நான் சொல்லிவிடப் போகிறேன். உங்கள் அப்பாவுக்கு இருந்த இயற்கை இரசனை உங்கள் அம்மாவுக்கு இல்லையா, என்ன?”

“அப்பாவுக்கு இந்த மலைப் பங்களாவில் ஒரே பித்து. பங்களாவுக்கு முன்னால் ஒரு பெரிய (உ)ரோசா தோட்டம் போட்டிருக்கிறார். அவர் இருந்தவரை ஆசைப்பட்டு ஒரு பூக்கூட பறிக்க முடியாது. பூக்களைச் செடியிலிருந்து பறிப்பதை அறவே வெறுப்பார் அப்பா.”

இவ்வாறு மெல்ல மெல்ல வசந்தாவின் அமைதி மூட்டத்தைக் கலைத்துத் தன்னோடு கலகலப்பாகப் பேசிக் கொண்டு வரச் செய்திருந்தாள் பூரணி. சமையற்கார அம்மாள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சண்பகனூர் வந்தது. வெண்பட்டு நூலிழைகள் ஆகாயத்திலிருந்து இறங்குகிற மாதிரி சாரல் விழுந்து கொண்டிருந்தது. கம்பீரமாக எழுந்து கோணிக்கொண்டு மாடு முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு சிகரம் தெரிந்தது. “இதுதான் இங்கே உயர்ந்த சிகரம். இதைப் பெருமாள் மலை என்பார்கள்” என்று பூரணியிடம் கூறினாள் வசந்தா. மலைச்சாரலை வரை வரையாகப் பாத்தி கட்டி ஏதேதோ பயிர் செய்திருந்தார்கள்.

பச்சை நிறத்துச் சல்லாத் துணியால் திரையிட்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, அதை சற்றே விலக்கி எட்டிப் பார்த்து மெல்லென நகைப்பது போல் மலைகளுக்கிடையே அழகாகத் தெரிந்தது கொடைக்கானல் நகரம். நகரின் நடுப்பகுதியான ஏரியின் தென்புறத்தில் மலைச்சரிவில் அரண்மனையைப் போல் கட்டியிருந்த வீட்டின் முன் போய் கார் நின்றது. நீல இருள் கவிந்த அந்தச் சாரல் பெய்யும் சூழலில் எட்டாயிரம் அடிக்கு மேல் உயர்ந்த ஒரு மலை நகரத்தில் திருமண வீட்டின் அழகு பொலிவுற்றுத் தெரிந்தது. அவற்றையெல்லாம் பார்த்துப் பூரணியின் உள்ளம் சிறு குழந்தைபோல் உற்சாகத் துள்ளல் பெற்றது. மனதுக்குப் புத்தம் புதிய சுறுசுறுப்பு வந்து விட்டது போலிருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக அந்த மலை நகரத்தின் அழகுகளைச் சுற்றிப் பார்த்தாள் அவள். வந்த அன்றைக்கு மறுநாள் அரவிந்தனுக்கும் மங்களேசுவரி அம்மாளுக்கும் கடிதங்கள் எழுதினாள். அரவிந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், அந்தச் சூழ்நிலையில் சில புதிய நூல்களைப் படித்து சிந்திக்க விரும்புவதாகவும், அவற்றை மதுரை தமிழ்ச் சங்கத்து நூல் நிலையத்திலிருந்து எடுத்து அனுப்பினால் உதவியாயிருக்கும் என்று எழுதியிருந்தாள். மங்களேசுவரி அம்மாளுக்கு எழுதிய கடிதத்தில் வசந்தாவை உற்சாகமாகவும் கலகலப்பாகவும் மாற்றிக் கொண்டு வருகிறேன். சித்திரையில் முகூர்த்தம் பாருங்கள். அதற்கு முன்பே மாப்பிள்ளையையும் பார்த்து விடுங்கள் என்று எழுதியிருந்தாள்.

நான்கு தினங்களுக்குப் பின் அவள் பெயருக்கு ஒரு பெரிய புத்தகக் கட்டு வந்தது. அரவிந்தன் கடிதமும் எழுதியிருந்தான். அதே தபாலில் வசந்தாவின் பெயருக்கு ஒரு கவர் வந்திருந்தது. அப்போது அவள் கடைவீதிக்குப் போயிருந்ததனால் பூரணியே அந்தக் கவரையும் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். உறையின் மேல் வசந்தாவின் பெயரை எழுதியிருந்த கையெழுத்து மங்களேஸ்வரி அம்மாளுடைய எழுத்தாகத் தெரியவில்லை. செல்லத்தின் கையெழுத்தாக இருந்தது. மனத்தில் சந்தேகம் தட்டினாலும் பூரணி அதைப் பிரிக்கவில்லை. அவள் கடையிலிருந்து வந்ததும் அவளிடமே கொடுத்துவிட்டாள். சந்தேகம் மட்டும் பூரணியிடம் தங்கியது.

அன்று அந்தக் கடிதத்தை வசந்தா படித்தபின் அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் பூரணிக்கு வியப்பளித்தது. வசந்தாவின் இதழ்கள் அடிக்கடி ஏதோ பாட்டை முணுமுணுத்தன. கூந்தல் ரோஜாப்பூக்களைச் சுமந்தது. இதழ்களில் சிரிப்பு. முகத்தில் புதிய மலர்ச்சி; நடையில் உல்லாச மிதப்புத் தெரிந்தது. மாலையில் “அக்கா! இன்று ஏரிக்குப் போய் படகில் சுற்ற வேண்டும்” என்று வசந்தாவே வலுவில் வந்து பூரணியை வற்புறுத்தினாள்.

“இன்று உனக்கு என்ன வந்துவிட்டது வசந்தா? உற்சாகம் பிடிபடாமல் துள்ளுகிறதே?” என்று வியந்து வினவினாள் பூரணி.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue