Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 44

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி

“நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ” என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி.

அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றாற் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில் நீட்டி முழக்கி இழுபட்ட குரலில் பூரணியை நோக்கி, “ஏண்டியம்மா, இது உன் பெண்ணா? என்ன வாய்? இந்த வயதிலேயே இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறதே” என்று அசட்டுப் பிசட்டென்று மங்கையர்க்கரசியைச் சுட்டிக்காட்டிக் கேட்டு வைத்தாள்.

“பெண் இல்லை, அவளுடைய தங்கை” என்று யாரோ சொன்னார்கள். கூட்டத்தில் பெண்களின் ஏளன நகை ஒலி மறுபடியும் எழுந்து ஓய்ந்தது. தன்னுடைய புகழ், தன்னுடைய உலகத்தை விலைகொள்ளும் அபார ஞானம், நெருப்புக் கொழுந்து போன்ற பரிசுத்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் அப்பால் அந்தச் சாதாரணப் பெண்களிடம் இருக்கிற ஏதோ ஒன்று தன்னிடம் இல்லாமல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய உள்ளத்தில் ஒரு மூலையில் அந்த ஏதோ ஒன்றின் இல்லாமைக்காக மின்னற்கோடு போல் ஓர் ஆற்றாமை தோன்றி ஒரு கணம் நின்று மறைந்தது.

“சும்மா வந்து வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு நழுவிடப் பார்க்காதே, ஏதாவது இரண்டு பாட்டுப் பாடிவிட்டுப் போ பூரணி” என்று காமுவே உரிமையோடு எழுந்து வந்து அவளைக் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டாள். அவள் உள்ளம் பாடுகிற உற்சாகத்திலா அப்போது இருந்தது? மறுக்க முடியாமல் தேவாரத்தில் ஒரு பதிகத்தைப் பாடி முடித்தாள் பூரணி.

“கொல்லர் தெருவில் ஊசி விற்கிறாற்போல ஓதுவார் வீட்டிலேயே தேவாரத்தையும் பாடி ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறாயே? வேறு ஏதாவது பாடு” என்று மேலும் வம்பு செய்தாள் காமு. அவளுடைய உற்சாகத்தை முறித்தெடுத்து விட்டுப் புறப்பட முடியாமல் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டு பாடிவிட்டு, “எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். தங்கை மங்கையர்க்கரசி கடைசி வரை உன்னோடு இருப்பாள், நான் வருகிறேன்” என்று எழுந்திருந்தாள் பூரணி.

‘பாட்டியிடமும் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டுப் போய்விடலாம்’ என்று உட்பக்கம் போனவள் மற்றொரு அதிர்ச்சியையும் தன் செவிகளில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கே பாட்டி வேறு யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள். பேச்சு தன்னைப் பற்றியது போல் தோன்றவே, பூரணி வெளியிலேயே தயங்கி நின்றாள்.

“யாரு அந்தப் பெண்? கோயில் மாடு மாதிரி வளர்ந்திருக்கு. கல்யாணம் ஆகவில்லை என்கிறாயே?”

“தமிழ் வாத்தியார் அழகிய சிற்றம்பலத்தின் பெண். பூரணின்னு பேர். அதுக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை. ஒரு தம்பி படிப்பை விட்டுவிட்டுச் சீர்கெட்டுக் கடைசியாகப் அச்சகத்திலே வேலை செய்யறான். மற்ற இரண்டு பேரும் படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லை. அந்தப் பெண் தான் வளர்த்துக் காப்பாத்தணும். கல்யாணமாவது கார்த்தியாவது. தெருத் தெருவாகப் பிரசங்கம் செஞ்சிட்டிருக்குது அது. நானும் சாடை மாடையா இரண்டு தரம் கேட்டேன். அதுக்குக் கல்யாணத்தைப் பத்தியே நெனைப்பிருக்கிறதாத் தெரியவில்லை. பேர், புகழ் எல்லாம் சம்பாதிச்சிருக்கு. சுவரெல்லாம் அது பேரை கலர் நோட்டீசு அடிச்சு ஒட்டியிருக்கான். எது இருந்து என்ன? அதது வயசில ஆகணும். அது மனசிலே என்ன நினைச்சிட்டிருக்குதோ?

இலட்சியங்களினால் மலர்ந்து ஆயிரமாயிரம் புனித எண்ணங்களில் தோய்ந்திருந்த அந்தப் பரந்த உள்ளத்தில் ஈட்டியாகக் குத்தியது, அந்த உரையாடல். மனத்தில் அந்தப் புண்ணைத் தாங்கிக் கொண்டு சிறிது நேரம் இருந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் பூரணி. ஞாயிற்றுக்கிழமையன்று ‘கவிகள் காணாத பெண்மை‘யைப் பற்றிப் பேசுவதற்காகச் சிந்தனைகளைத் தொகுத்துக் கோர்வைப்படுத்திக் கொண்டிருந்த உள்ளத்தில் உல்லாசம் பாழ்பட்டு உளைச்சலும், அலுப்பும் வந்து தளரச் செய்தன. ஓதுவார் வீட்டு வளைகாப்புக்குப் போனால் தன் மனத்தில் இவ்வளவு பெரிய ஆழமான புண்கள் உண்டாகும் என்று தெரிந்திருந்தால் அவள் போயே இருக்க மாட்டாள்.

‘ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம். அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். செல்வமும் செல்வாக்கும் சம்பாதிக்கலாம்! ஆனால் சாதாரண உலகத்தில் சாதாரண மனிதர்கள் வாழும் சாதாரண வாழ்க்கையைச் சம்பாதித்துக் கொள்ளாதவரை, சாமானிய உலகில் அவளைப் பெண்ணாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே’ என்று நைந்து எண்ணினாள் அவள். பெரிய வாழ்வைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள் அவள். மிகச் சிறிய வாழ்க்கையை அவசரமாக நினைவுபடுத்தினார்கள் அவர்கள். அரவிந்தனோடு பழகத் தொடங்கிய புதிதில் இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசையும், அவசரமும் அவள் மனத்தில் உண்டாயிற்று. இன்னும் கூட அழகிய இலட்சியக் கனவாக அரவிந்தன் அவள் மனத்தில் பதிந்திருக்கிறான். ஆனால் அவள் இப்போது தாகம் கொண்டு துடிக்கவில்லை. அந்த வாழ்வுக்கு அரவிந்தனும் அப்படித் தாகம் முற்றித் துடித்ததாகத் தெரியவில்லை. இருவரும் அன்பால் ஒன்று  சேர்ந்தார்கள். இப்போதோ அகல்விளக்கின் சின்னஞ்சிறு சுடரிலிருந்து குத்துவிளக்கின் பெரிய சுடர்களை ஏற்றி ஒளிர விடுவதுபோல் சிறிய அன்பிலிருந்து பெரிய பொது காரியங்களைச் செய்து சமூகத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கொளுத்தப் பெறாத ஊதுவத்திபோல் உள்ளங்களில் மட்டும் மணந்து வெளியே மணக்காமல் இருந்தது, அந்த அன்பு! மங்கையர்க்கழகத்து மொட்டைக் கடித நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஆனால் உலகம் அதைவிட விழிப்பாக இருந்து தொலைக்கிறதே!

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. திரையரங்கம்(தியேட்டர்) நிறையப் பெண்கள் கூடியிருந்தார்கள். பூரணி பேசுவதற்காக எழுந்து நின்றாள். அரவிந்தன், மங்களேசுவரி அம்மாளின் இளைய பெண் செல்லத்திடம் ஒரு பெரிய உரோசாப்பூ மாலையைக் கொடுத்துப் பூரணிக்குப் போடச் சொன்னான். வளையலணிந்த கரங்கள் தட்டப்படும் ஒலி திரையங்கையே(தியேட்டரை) அதிரச் செய்தது. பூரணி பேசத் தொடங்கினாள். கூட்டத்தில் அமைதி நிலவியது. “இது ஏழைகளின் உதவி நிதிக்கான கூட்டம். துன்பப் படுகின்றவர்களுக்கு உதவ நாம் கடமைப்பட்டவர்கள். ‘துன்பப்பட்டு அழுகின்றவர்களின் கண்ணீர் உலகத்தை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த படை’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அழச்செய்து பிறரை வருத்துகிறவர்கள் பதிலுக்குத் தாங்களே அழவேண்டிய சமயம் வரும். நீங்களெல்லாரும் இந்த நிதிக்கு உதவி செய்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது” என்று முன்னுரை கூறிவிட்டுத் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிப் பேச முற்பட்டாள் அவள். இனிமையும் எடுப்பும் மிக்க அவள் குரல் தேன் வெள்ளமாய்ப் பொங்கியது. பேச்சினிடையே அவள் உணர்ச்சி வசப்பட்டாள். ஒரே இராகத்தை வளர்த்து விரிவாக்கிப் பாடும் நல்ல சைக் கலைஞனைப் போல் அவள் சொற்பொழிவு வளர்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கிற அளவு அமைதி. “உலகத்துக் கவிகளெல்லாம் தத்தம் காவியங்களுக்கு நாயகியாக எத்தனையோ பெண்களைப் படைத்தார்கள். ஆனால் காவியப் பெண்கள் சித்திரத்துத் தாமரைபோல் வாடாமலும் கூம்பாமலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மை வாழ்வில் பெண் படுகிற வேதனைகள் அதிகம். பெண் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் அதிகம். கண்ணகிக்கும், சாகுந்தலைக்கும், சீதைக்கும் காவியங்களில் ஏற்பட்ட துன்பங்களை ஊழ்வினையின் பெயர் சொல்லி மறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய வாழ்வின் நிகழ்கால வீதிகளில் தான் பெற்ற குழந்தையைத்தானே விற்க வரும் பெண்ணை அல்லவா பார்க்கிறோம்? பெண்களில் வாழ்வு உண்மைத் தாமரைபோல வாடுவதாயிருக்கிறது. கவிகள் அதை சித்திரத்தில் எழுதி ஏமாற்றியிருக்கிறார்கள். துன்பங்களிடையே நாம் இருக்கிறோம். அவற்றைத் தகர்க்க வேண்டும்?” பேச்சுத் தடைபட்டது. கண் விழிகள் வெளிறின. அடித்தொண்டையிலிருந்து இதயத்தை வெளியே இழுத்தெறிந்து விடுவதுபோல் ஓர் இருமல் இருமினாள் பூரணி. கமலப் பூப்போன்ற அவள் வலது கை இருமிய வாயைப் பொத்திக் கொண்டது. இருமி முடித்தவள் தனது உள்ளங்கையைப் பார்த்தாள். அதில் இரண்டு துளி ரத்தம் மின்னியது. முருகானந்தம் சோடாவை உடைத்து எடுத்து வந்தான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue