இலக்கிய மரபுகளும் மக்கள் வாழ்க்கை முறையும்-புலவர் கா.கோவிந்தன்
கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம் – புலவர் கா.கோவிந்தன்
(தமிழர் பண்பாடு, தொடர்ச்சி – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு-7
கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்
இலக்கிய மரபுகளும் மக்கள் வாழ்க்கை முறையும்
இராமாயணத்திலிருந்து பழந்தமிழர் நாகரீகம் குறித்து மிகச் சிலவற்றை மட்டுமே பெற இயலும். இப்பொருள் பொறுத்தவரையில், இராமாயணம், மிகப் பெருமளவில் ஒரு தலைப்பட்ட அகச்சான்றாகவே இருக்க முடியும் என்பதை நினைவு கோடல் வேண்டும். நினைத்தாலே திகில் ஊட்டும் பகைவர்களாகவே இராட்சதர்களை, ஆரியர்கள் கருதினர். ஆதலின் அவர்கள், அதற்கேற்ப உடலமைப்பில், மனிதரைத் தின்னும் அரக்கராகவும், கொடுமையின் கோர உருவமாகவும், அவ்வாரியர்களால், இயல்பாகவே வருணிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு அடுத்த காலத் தமிழ்ப்பாக்களின் இலக்கிய மரபுகளை ஆராய்வதிலிருந்து நன்மிகப் பழங்காலத்துத் தமிழர் நாகரீகம் பற்றிய மிகவும் உண்மையான விளக்கத் தினைப் பெறலாம். இலக்கிய மரபு எனக் கூறும்போது, திறனாய்வில் நாமே வகுத்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள் எனும் பொருளுடையதாக நான் கொள்ளவில்லை. தமிழிலக்கிய மரபுகள் என்பதை, ஒராசு அவர்களால் விளக்கிக் கூறப்பட்ட விதிமுறைகள் போலவும், வீரகாவியப் பாக்களுக்கான அரிசுடாடில் விதிமுறைகள் போலவும், கவிஞர்களால், கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்ட, பிற்காலத் திறனாய்வாளர்களால் முறைப்படுத்தப்பட்டன ஆகா. பழைய தமிழிலக்கிய மரபுகள், மனித வாழ்க்கையின் மீது இயற்கைச் சூழலின் செயல்பாடுகள் வளர்த்துவிட்ட பழைய வழக்கங்களின், கல் போலும், திண்ணிய பெரும் பிழம்பாம். இலக்கிய மரபுகள். அதிலும் குறிப்பாக, மிகவும் பிற்பட்ட காலத்தே வலிந்து இயற்றப்பட்ட, சமற்கிருத, தமிழ்ப்பாக்கள் எழுவதற்கு மிகமிக முற்பட்ட காலத்தில் இருந்த, கலப்பற்ற, தூய, பழைய இலக்கிய மரபுகள், மக்களின் இயற்கையோடியைந்த உண்மையான பழக்க வழக்க ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் வானம்பாடிகளைப் போலத் , தங்களை மறந்து பாடினர். அவர் பாக்கள், அக்கால மக்கள் நடத்திய வாழ்க்கையினை உள்ளது உள்ளவாறே காட்டும் உண்மையான காலக் கண்ணாடியாக இருந்தன. பழைய இலக்கிய மரபுகளைத் தோற்றுவித்த வாழ்க்கை முறைகள் வேறுபட்டு, பாக்களின் கற்பனைப் பொருள்களெல்லாம் வெறும் இலக்கிய மரபுகளாகிவிட்ட நிலையிலும், பிற்காலப் பாவலர்கள், பழங்காலத்தைச் சேர்ந்த, வழிவழி வந்த இலக்கியக் கற்பனைகளை விடாமல் மேற்கொண்டு வருகின்றனர், உதாரணத்திற்குப் பண்டை நாள்களில் கால்நடைகளே மக்களின் செல்வமாக அமைந்தன. இனத்தலைவர்கள், ஒருவர், பிறிதொருவர் கால்நடையைக் களவாடும்போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் எழுந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடும் போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடுவதில் போர் தொடங்குவதாகப் பாடல் புனைவது மனித வரலாற்றின் வளர்ச்சி நிலையில், ஒரு கட்டத்து உண்மை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. பிற்காலத்தில், போருக்கு வேறு பல காரணங்களும் உருவாகிவிட்டன. ஆனால், இலக்கிய மரபோ, பாவலனைப் போர்களின் மாறாத் தொடக்கமாக, தொடக்ககால ஆனினை கவர்தலையே பாட வைக்கிறது. அவ்வாறே, கி.பி. ஆறாவது நூற்றாண்டில், வலிந்து பாடப்பெறும் தமிழ்ப் பாடல்கள் தோன்றிவிட்ட காலத்திற்கு முன்வரையும் பிற்காலப் பாடல்களில், காதல், போர் பற்றிய இருவகைப் பாடல்களை இயற்றுவதை எண்ணில் அடங்கா. இலக்கிய இலக்கண விதிமுறைகள், விடாப்பிடியாக முறைப்படுத்தி வந்துள்ளன. இவ்விலக்கிய மரபுகளிலிருந்து, மக்கள் மேற்கொண்டிருந்த உண்மை வாழ்க்கை நிலையைப் பாவாணர்கள் பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டிய அக்காலங்களுக்குக் கற்பனையில் பின்நோக்கிச் செல்லலாம். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, பாக்கள் எழுவதற்கு முற்பட்டதான ஒரு காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று, இந்தியர்கள், இந்நனிமிகு பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை – மின்னலின் ஒளிக்கீற்றுக்கள் போல் அங்குமிங்குமாகக் காணக் கிடைக்கும் காட்சியைப் பெறலாம். நன்மிகப் பழங்காலத்தை, இவ்வாறு நுழைந்து பார்ப்பதன் மூலம், தென்னிந்தியர்களின் கி.மு. 2000 அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக் கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர் அந்நனிமிகச் சேய்மைக் கண்ணதாய பழங்காலத்தில் வளர்ச்சி வேகம், வானூர்தி , கம்பியில்லாத் தந்திகளின் காலமாம் இன்றைய வளர்ச்சி வேகத்திலும் மிகமிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சுவிடுவதற்கும் இடைவெளியில்லா விரைவான மாற்றமும் வழுக்குப் பனிப் பாறைகளின் ஆறு போலப் புலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் பண்டைய நாட்களின் மெதுவான, சிந்தனைச் செயல்பாடுகளும் இருகோடித் துருவங்கள் போலும் வேறுபாடுடையன. ஆகவே, கி.மு. 2000இல் எது உண்மை நிகழ்ச்சியோ, அதுவே, அதனினும் நனிமிகவும் பிற்பட்ட பழங்காலத்திலும், உண்மை நிகழ்ச்சியாகும். எண்ணுதற்கும் அப்பாற்பட்ட அப்பழங்காலத்தில், மனிதன், ஏனைய உயிரினங்களைப் போலவே, முழுக்க முழுக்க, நில இயல் கூறுபாடுகளுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தான். அவன் வாழ்க்கை, பெரும்பாலும், அவனுடைய சுற்றுச்சூழல் நிலைகளுக்கு உடன்பாடான விளைவினதாகி, அவ்வகையில், இயற்கையின் கட்டுப்பாடுகளைக் கடக்கக் கற்றுக் கொண்டு, துருவப் பனிப்பாறைகளோடு வெற்றிகரமாகப் போரிடவும், வான்வெளியின் மேல்நிலைகளுக்குப் பறப்பதன் மூலம், நிலைத்து ஈர்ப்பாற்றல் விதிகளின் எல்லையைக் கடக்கவும் செய்யும் இன்றைய வாழ்க்கையோடு உளம் கொளத்தக்க மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment