கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி)
பூங்கொடி
16. எழிலியின் வரலாறறிந்த காதை
இசைச் செல்வி
கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்!
தன்னலம் விழையாத் தையல் எழிலிதன்
திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ!
அறமனச் செல்வி, அழகின் விளைநிலம்
எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் 5
இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி
இசேயே பாட இசையாள், தமிழில்
ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள்,
மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில்
ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி 10
ஈங்குன துளம்யாது?’ என்றலும் உரைப்போள்
இசைவய மாக ஈர்க்குந் திறத்தினள்,
நரம்பிசை பிழையாக் குரலால் நெஞ்சம்
உருக இன்னிசை ஓதும் பெற்றியள்;
எதிர்ப்பெலாங் கடந்தாள்
மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச்
செல்வர் சிலரும் செய்தி இதழரும் 15
மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது
தொழிலாக் கொண்டனர் தொல்லைகள் தந்தனர்;
புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள்;
தன்கண் வருவாய் தழைவது வேண்டிலள்;
அதனை விழைவோர் தாமே அஞ்சுவர்? 20
எதையும் அஞ்சிலள் எடுத்தநற் பணியில்
ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென்
—————————————————————
எழிலி – அழகி, இசையால் – பாட்டால், இசையாள் – புகழுடையாள், மன்றினில் – அரங்கினில், ஈர்க்கும் – கவரும், செய்தி இதழர் – பத்திரிகையாளர், புன்கண் – துன்பம், தன்கண் – தன்னிடம்.
+++
றூக்கமும் உரனும் மீப்பட லாயினள்;
அயலி லிருந்தே அழிவினை வித்தும்
பயனில பேசும் பதர்சிலர் ஒழிய 25
மயல்ஒழிந் தாரெலாம் மதித்தனர் போற்றினர்;
தளிர்க்கும் அவள்புகழ் தகைப்பார் இல்லை;
முளைப்பவர் எவரும் முகங்கவிழ்த் தேகினர்;
இவ்வணம் இசையால் ஏற்றம் பெற்றனள்;
காதல் மணம்
அவ்வுழை ஒருவன் அழகிய கூத்தன் 30
ஆடல் வல்லான் அதனதன் நுணுக்கம்
நாடிய புலத்தான் நாடெலாம் வியந்து
`நிகரிலை இவற்கென நிகழ்த்துநற் பெயரோன்
புகழில் மிதப்போன், பூவை எழிலியை
மலர்மண மாலை சூட்ட விழைந்தனன்; 35
கலைஞர் இருவர் கருத்தும் ஒன்றின;
கூத்தும் பாட்டும் குலவி மகிழ்ந்தன;
ஏத்தும் புகழோ எழுந்தது திசைஎலாம்;
கூத்தன் அயல்நாடு செல்லுதல்
மண்டிய புகழை மாந்திய மாந்தர்
தெண்டிரை கடந்த திசையினில் வாழ்வோர் 40
கண்டு மகிழக் கருதின ராகி
வேண்டி அழைத்தனர் விரைந்தனன் கூத்தனும்;
ஈண்டிருந் தாள்இசை எழிலி தனித்தே;
ஆழி கடந்தவன் ஆடற் றிறமெலாம்
ஊழியல் முறையால் உணரக் காட்டினன்; 45
`கண்டிலாப் புதுமை கண்டனம்’ என்று
—————————————————————
மீப்படல் – மேம்படல், தகைப்பார் – தடுப்பார், முளைப்பவர் – தோன்றுபவர், இவற்கு – இவனுக்கு, மண்டிய – நிறைந்த, தெண்டிரை – கடல், ஊழியல் முறை – நூலின் முறை, கண்டனம் – கண்டோம்.
+++
கூத்தன் ஒரு தீவை அடைதல்
கண்டவர் புகழ்ந்து கைப்பொருள் நல்கப்
புகழும் பொருளும் மிகவரப் பெற்றே
அகநிறை களிப்பால் ஆழ்கடல் மிசையே
மீள்வோன், பெருவளி மிடல்கொடு தாக்க 50
நீள்கலம் உடைந்து நெடுங்கடல் மூழ்கலும்;
பாய்மரம் சிதறிய பகுமரம் பற்றி
ஓய்விலா அலைகள் உந்தி உதைப்பக்
கடுங்கண் மறவர் கல்லா மாந்தர்
கொடுங்கள் உண்டியர் குழீஇ வாழும் 55
மொழிபெயர் தீவின் கழிபடு கரையில்
விளிவில னாகிச் சார்ந்தனன் கூத்தன்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment