அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
50. வேலை வாங்கும் முதலாளி
தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.
ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார்.
அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக் கழுவணும். பிறகு குழாய்க்கு நேராகக் குடத்தை வைக்கணும் நீர் நிரம்பியதும் குடத்தை எடுத்து வரணும்” என்றெல்லாம் சொல்லி அனுப்பினார்.
அப்படியே அவன் குடத்துடன் சென்றான். குடத்தை விளக்கினான், கழுவினான். குழாய் அடியிலே குடத்தை வைத்துவிட்டு, நின்று கொண்டிருந்தான்.
வெகுநேரமாகியும் குடிநீர் கொண்டுவரச் சென்றவனைக் காணவில்லையே என்று எண்ணி, முதலாளி, வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.
“டேய், அங்கே இன்னும் என்ன செய்கிறாய்? தண்ணிர் வரவில்லையா?” என்று கேட்டார்.
“இல்லை எசமான். தண்ணிர் நன்றாகத்தான் வருகிறது. குழாய்க்கு நேராகத்தான் குடத்தை வைத்திருக்கிறேன். இன்னும் நிரம்பவில்லை” என்றான்.
“ஏண்டா அப்படி? என்று குழாய்க்குச் சென்று பார்த்தபோது, அவன் குடத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்து இருந்தான். அதை முதலாளி நிமிர்த்து வைத்ததும் குடம் நிறைந்தது.
“தாங்கள் இதைச் சொல்லவில்லையே எசமான்” என்றான் வேலையாள்.
வேலையாள் முட்டாள் என்று நடத்துவதால் முதலாளிகளுக்கும் புத்திக் குறைவு நேர்கிறது போலும்.
————-
51. மருமகன்களின் அறிவுத் திறமை
பெருஞ் செல்வந்தர் ஒருவர் தன் பெண்ணுக்கு வெகு நாட்களாக ஓர் அறிவாளி மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் இரண்டு பேர் தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தனர்.
செல்வந்தரும் வந்தவர்களை வரவேற்றுத் தன் மூத்த மாப்பிள்ளைக்கும் சேர்த்து மூன்று இலைகள் போட்டு உணவு பரிமாறி, அவர்களைச் சாப்பிடச் செய்தார்.
அப்போது பரண்மேல் ஏதோ ஒடுகிற சத்தம் கேட்கவே “அது ஒன்றுமில்லை; எலி ஒடுகிறது” என்றார் மூத்த மாப்பிள்ளை.
வந்தவரில் ஒருவன் “அட தெரியாமல் போச்சே! காது குடைய அதிலே ஒர் இறகு பிடுங்கியிருக்கலாமே?” என்றார்.
அது கேட்டு, அடுத்தவன் ஓயாமல் சிரித்தான். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதும், அவன் சொன்னான்,
“அந்த ஆள் ஓடினது உடும்பு’ என்று நினைத்து அப்படிச் சொல்கிறான். அதனால்தான் சிரித்தேன்’ என்றார்.
உடனே செல்வந்தர், “உங்கள் புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சினோம். மிக மிக நன்றி, நீங்கள் இருவருமே போய் வாருங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
————–
52. அறத்தால் வருவதே இன்பம்
“அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.
இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “ஏன் இப்படிப் புரண்டு புரண்டு படுக்கிறீர்கள்; துரக்கம் வரவில்லையா?” என்று கேட்டாள் மனைவி.
‘ஒன்றும் இல்லை’ என்றான் கணவன். மணி 12 ஆகியது. ஒன்று அடித்தது, இரண்டும் ஆகிவிட்டது. அப்போதும் உறங்காமல் இருந்த கணவனைப் பார்த்து உண்மையைச் சொல்லுங்கள், என்ன காரணம்?” என்று. வருத்தத்துடன் மனைவி கடுமையாகக் கேட்டாள்.
எதிர் வீட்டுக்குப்பக்கத்தில், மாடியில் உள்ள வங்கியில் உரூ 10,000 கடன் வாங்கியிருந்தேன். நாளையுடன் கெடு முடிகிறது. நாளை காலை 10 மணிக்குள் பணத்தைக் கட்டியாக வேண்டும். கையிலும் பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல், உறக்கம் வராமல் தவிக்கிறேன்” என்றான் கணவன். “தெரிந்தவர் யாரிடமாவது கேட்டுப் பார்த்தீர்களா?” என்றாள்; “இன்று காலை முதல் இரவு வரை, போகாத இடமெல்லாம் போய், கேட்காதவரிடமெல்லாம் கேட்டும் பலன் ஒன்றும் இல்லை. அலைச்சல் தான் மிச்சம்” என்றான் கணவன்.
இது கேட்ட மனைவி, “கொஞ்சம் இருங்கள் வருகிறேன்” என்று சொல்லிச் சென்றாள். அந்த வங்கி மாடிக்குச் சென்று, கதவைத் தட்டி, உறங்கிக் கொண்டிருக்கும் மேலாளரை எழுப்பினாள். “என்னம்மா! இந்த நேரத்தில்?” என்று அவர் கேட்க,
“என் கணவர் உங்கள் வங்கியில் வாங்கிய 10 ஆயிரம் உரூபாயை நாளை கட்டவேண்டுமாமே! அவரிடம் கையில் பணம் இல்லை. யார் யாரையோ கேட்டுப் பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. அவரால் நாளைக்கு அந்தப் பணத்தைக் கட்ட முடியாது. இதை சொல்விப் போகத் தான் வந்தேன்” என்று, அவரிடம் சொல்லிவிட்டு வந்து, தான் வீட்டில் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு வந்து, கணவரிடம் –
“இனி அவன் தூங்க மாட்டான். நீங்கள் தூங்குங்கள்” என்று சொன்னாள், சுடமை தவறாத அன்பு மனைவி.
————
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment