அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
53. மாப்பிள்ளை தேடுதல்!
முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி.
நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டா. உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான்.
அவனும் அகமகிழ்ந்து ‘சரி’ என்றான். அப்போது வீட்டுக்காரன் “ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன், பின்னால் பழி சொல்லாதே. என் மகன் வெங்காயம் சாப்பிடுவான்” என்று சொன்னான்.
அதைக் கேட்ட அந்தணனும், தன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்ல. அவள் மகிழ்ந்தாள். ஆனால் “மாப்பிள்ளை எப்போதுமே வெங்காயம் சாப்பிடுவாரா?” என்று மட்டும் போய்க் கேட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தாள்.
இவனும் அதுபோலவே வந்து கேட்டான். அதற்கு மாப்பிள்ளையின் தந்தை, “எப்போதாவது மாமிசம் உண்ணும்போது மட்டும் வெங்காயம் சாப்பிடுவான்” என்றான்.
“எப்போதும் மாமிசம் சாப்பிடுவானா?” என கேட்க அவன் “சே.சே.கள்ளுக் குடிக்கிறபோது மட்டுமே மாமிசம் உண்பான்” என்றான்.
“எப்போதும் கள்ளுக் குடிப்பானா?” என்று கேட்க ‘சூதாட்டத்திலே தோற்றுப் போகிறபோது மட்டும் தான் குடிப்பான், கவலையை மறக்க” என்றான்.
இன்னும் என்ன பாக்கி? “வைப்பாட்டியும் உண்டா?” என்றான் இவன். அதற்குப் பையனின் தந்தை அவன் 8 மாதமாக ஜெயிலில் இருக்கிறான். எப்படி இப்போது வைப்பாட்டி வீட்டிற்குப் போவான்? வைப்பாட்டி பணம் கேட்டதால்தானே திருடிவிட்டு சிறையில் இருக்கிறான் வேறு ஒன்னுமில்லிங்க.
“பொழுது போகச் சூதாடுவான் கவலையை மறக்கக் கள்ளு குடிப்பான். கறி தின்பான். கறி வாடைக்கு வெங்காயம் தின்பான். அவவளவுதான். வேறு என்னங்க அவனிடம் தப்பு இருக்கு?” என்றான்.
“போதும் ஐயா! போதும்! மாப்பிள்ளை அழகும், நீ வரதட்சணை வேண்டா என்ற கருணையும் இப்போது தான் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே, திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அந்த அந்தணன்.
———-
54. நாம் திருந்துவோமா?
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. மறுபடியும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர்.
மனம் வெதும்பிய தந்தை ஒரு நாள், ‘கரும்புக்கட்டு’ ஒன்றை வாங்கிவரச் செய்து, அவர்களை அழைத்து ‘இந்தக கரும்புக் கட்டை அப்படியே உடையுங்கள்’ என்றார். அவர்கள் நால்வரும் எவ்வளவோ முயன்றும் கட்டோடு கரும்பை உடைக்க முடியவில்லை.
பின் தந்தையானவர் கட்டை அவிழ்த்துவிட்டார். கடைசி மகனை அழைத்து, அவற்றை உடைக்கச் சொன்னார். பையன் வேகமாக ஒவ்வொரு கரும்பாய் எடுத்து, அத்தனையையும் அவன் ஒருவனாகவே ஒடித்துத் தீர்த்தான்.
தந்தை தம் மக்களைப் பார்த்துச் சொன்னார் : “கரும்பு, கட்டோடு இருக்கும்போது அதை ஒடிக்க முடிய வில்லை. கட்டு அவிழ்ந்து தனித்தனியானதும் உங்களில் சின்னப் பையன்கூட ஒடித்துவிடுகிறான்.
“அப்படியே, நம் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தால் இந்த ஊரில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் நம்மை ஒன்றும் அசைக்க முடியாது. உங்களுக்குள் வேற்றுமை வளர்ந்து, நீங்கள் பிரிந்திருந்தால், சிதறிப் போன கரும்புக்கு ஏற்பட்ட கதிபோல உங்களையும் விரைவில் ஏமாற்றி அழித்துவிடுவார்கள்” என்றார்.
அவன் மக்களும் மனம் திருந்தினர். நாம் திருந்துவோமா?
————
55. பந்தலிலே பாகற்காய்
பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின்கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தார்கள்.
இழவுக்குப்போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்த பல பெண்களோடு சேர்ந்து அழத் தொடங்கினர். அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப் பாகற்காப் காய்த்துத் தொங்குவதைப் பார்த்துவிட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, இராகம் இழுத்து, “பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்” என்று ஒப்பாரி வைத்தாள்.
இதைப் புரிந்துகொண்ட மற்றவள், “போகையிலே பார்த்துக்கலாம்; போகையிலே பார்த்துக்கலாம்” என்று ஒப்பாரியிலேயே பதில் சொன்னாள்.
இவர்களிருவரும் ஒப்பாரியிலேயே பேசிக்கொண்டதைக் கவனித்த வீட்டுக்காரி, நாம் சும்மாயிருந்தால் பாகற்காய்க்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, உடனே –
‘அது விதைக்கல்லோ விட்டிருக்கு, அது விதைக்கல்லோ…… விட்டிருக்கு’ என்று ஒப்பாரியிலேயே பதிலுக்குப் பாடி முடித்தாள்.
இது கேட்ட இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்து, தம் முயற்சி பலிக்காமல் ‘கணவனைப் பறிகொடுத்தவளுக்கு பாகற்காயைப் பறிகொடுக்க மனமில்லையே’ என்று புலம்பிக்கொண்டே, வீடு வந்து சேர்ந்தனர்.
———–
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment