Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 – தொடர்ச்சி)

          ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும்   

          ஏதிலர் தமக்கே இரையா காமல்,   80

          தாய்மொழி மானம் தமதென நினையும்

ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும்

உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும்

செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்      

          புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்;        85

          தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;         

          கூத்தும் அவ்வணம் கூர்மதி யாளர்

காத்துப் போற்றின் கைம்மேற் பலனாம்

உயர்தமிழ் மூன்றனுள் ஒன்றென நினையார் 

          மயலறி வுடையார் மறந்தனர் வெறுத்தனர்;    90

          கல்லா மாந்தர் கையகப் பட்டது;

நில்லா தொழிந்தது நீள்புகழ் பட்டது;

கற்றோர் பலரும் முற்றுகை யிடின்அது

நற்றமிழ் மரபாய் நாட்டினிற் பரவும்;     

          ஆதலின் அருண்மொழி! அரும்பெறற் பூங்கொடி     95

          ஓதல் வேண்டும் உயர்தமிழ் இசையை;

தெருவெலாம் ஊரெலாம் சென்று நாடெலாம்

உருகும் இசைத்தமிழ் ஒலித்து முழக்கி

வெல்லுதல் ஒன்றே விழைந்தனென்; அதன்றலை    

—————————————————————

          வந்தித்து – வணங்கி, வாயென – உண்மையென, புணர்த்துவர் – சேர்ப்பர், ஏதிலர் – பகைவர், செயிர் – குற்றம்.

++++++++

          சிந்தனைக் கருத்தளாஅய்ச் செந்தமிழ்ப் பாட்டால்  100

          பிந்திய மக்களைப் பேணலும் ஆகும்;

ஏற்றுள நம்பணி எளிதினில் வெல்லும்;

சாற்றிய மீனவன் தான்விடு சுவடியும்

வேற்றிடன் புகாஅது விளைபயின் நல்கப்       

          பூங்கொடி கையிற் புகுந்தது நல்லாய்!   105

          ஈங்குன துளம்யாது?’ என்றலும் உரைப்போள்

          `பெரியீர்! நும்மொழி பேணுதல் ஒன்றே

அறிவோம் யாங்கள், ஆதலின் என்மகள்

நெறிமுறை பிறழா நேரிசைச் செல்வி   

          கொடுமுடி தந்த கோமகள் எழிலி  110

          என்பாள் உழைச்செலீஇ இசையின் நுணுக்கம்

முன்போய்ப் பெறுகென மொழிந்துளேன், அவளும்

அன்பால் இயைந்தனள்’ என்னலும், பூங்கொடி        

          `குறள்நெறி வழுவாக் கொற்றவ! எழிலி 

          திறன்முழு தறியும் விழைவினேன்’ என்றனள்; 115

          `அழியாப் புகழ்மிகுத் தடங்கி வாழும்

எழிலி திறமெலாம் இயம்புவென் யா’னென   

          விழிமலர்ப் பூங்கொடிக்கு விளம்பினர் அவரே.         118

—————————————————————

          புகாஅது – புகாமல், செலீஇ – சென்று.

+++++

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்