Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 51

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  50 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

19

குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனை
வண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்
கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே.
      — திருஞானசம்பந்தர்


“நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்…”

இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப் பின்புறம் கோர்த்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மனத்தில் திட்டங்களும் தீர்மானங்களும் உலாவும் போது கால்களையும் இப்படி உலாவவிட்டுப் பழக்கம் அவருக்கு.

“என்னப்பா இது? நான் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறேன், உன்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடப் பதில் வரவில்லையே!”

“நீங்கள் சொல்வது என்னவென்று நான் சரியாக விளங்கிக் கொள்வதற்கு முன்னால் எப்படிப் பதில் பேச முடியும்?”

“அதுதான் சொன்னேனே, அரவிந்தன்! பூரணி நீ சொன்னால் எதையும் மறுக்காமல் சம்மதிப்பாள் அல்லவா? முதலில் இது எனக்குத் தெரிய வேண்டும்.”

“நான் சொன்னால் தான் கேட்பாள் என்பதென்ன? நீங்கள் சொன்னாலும் கேட்கக்கூடியவள் தானே?”

“அப்படியில்லை! இந்தக் காரியத்தை நீதான் என்னைக் காட்டிலும் தெளிவாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். ஒப்புக் கொள்ளச் செய்யவும் முடியும்!”

“எதற்கு ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும்?”

“அவசரப்படாதே! நானே சொல்லிக் கொண்டு வருகிறேன். கவனமாகக் கேள்!”

தனது கூர்ந்து நோக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று சேர்த்து அவர் முகத்தையே பார்த்தான் அரவிந்தன். அவர் தொடர்ந்தார். “இன்னும் ஏழெட்டு மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது.”

“ஆமாம் வருகிறது.”

“அரசியல் துறையில் ஈடுபடுகிறவர்களும், பதவி வகிக்கிறவர்களும், இன்று நாட்டில் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் புகழும் குவித்து மாமன்னர்களைப் போல் வாழ்கிறார்களென்பதை நீயே நன்கு அறிவாய்.”

“அறிவேன், அதற்காக…”

“நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் இப்போது சொல்ல இருப்பதைக் கேட்பதற்கு முன்னாலேயே அதன்மேல் உனக்கு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டாகிவிட்டாற்போல் தோன்றுகிறதே?”

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் மேலே சொல்லுங்கள்.”

“நான் உன்னை எதற்காகவோ வற்புறுத்தி ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே! நல்ல சமயத்தில் இந்த யோசனை என் மனத்தில் உருவாயிற்று. நகரத்தில் முக்கியப் பிரமுகர்கள் எல்லாருக்குமே இந்த யோசனைப் பிடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று ஆமோதித்துக் கூறி எல்லாருமே ஒத்துழைப்பதாகச் சொல்கிறார்கள். பணச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் தாங்க முடியும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது”

“நீங்கள் தேர்தலுக்கு நிற்கப் போகிறீர்களா?”

“நானா? விளங்கினாற் போலத்தான் விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பாவா என்கிறாயே. நான் நின்றால் சாமீன் தொகை இழக்க வேண்டியது தான். எனக்கு ஏது அத்தனை பேரும் புகழும்?”

“பின் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”

“இன்னும் உனக்குப் புரியவில்லையா, அரவிந்தன்? பூரணியை வடதொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தலாம் என்பது என் திட்டம். அவள் நின்றால் நிச்சயம் ஆகிவிடும். மேடை மேடையாகப் பேசிப் புகழும் பெருமதிப்பும் பெற்றிருக்கிறாள். அவள் போய்ப் பேசாத கிராமங்கள் இல்லை. அநேகமாகத் தொகுதியின் எல்லாப் பிரதேசங்களிலும் அவளை நல்லமுறையில் தெரிந்திருக்கிறது.”

சுதந்திரம் பெறுகின்றவரை தொண்டாக இருந்த அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. பூரணியைப் போன்ற ஒரு நல்ல பெண்ணைச் சூதும் வாதும் நிறைந்த அழுக்கு மயமான அரசியல் பள்ளத்தில் இறங்கச் சொல்கிறீர்களே! இப்போது அவள் பெற்றிருக்கும் பேரும் புகழும் அவளுடைய தமிழறிவுக்காகவும், தன்னலமற்ற சமூகத் தொண்டுக்காகவும், தன்னலமற்ற பேரறிஞர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் என்பதற்காகவும் அவளை அடைந்தவை. அரசியலில் ஈடுபடுவதன் காரணமாகவே அவள் இவற்றை இழக்க நேர்ந்தாலும் நேரலாம். தவிர இந்த நூற்றாண்டில் முதல் இல்லாமல் இலாபம் சம்பாதிக்கிற பெரிய வியாபாரம் அரசியல் தான். பண்புள்ளவர்கள் அந்த வம்பில் மாட்டிக் கொள்ளாமல் சமூகப் பணி செய்து கொண்டிருப்பதே நல்லது. மேலும் பூரணி இப்போது முழு நோயாளியாகி ஓய்வு கொள்ளப் போயிருக்கிறாள். அவள் கொடைக்கானலிலிருந்து திரும்ப மாதக்கணக்கில் ஆகும் அவளுடைய நிம்மதியைக் குலைத்து இதில் கவனம் செலுத்தச் செய்வது நல்லதாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“அவளுக்கு ஒரு சிரமமும் இல்லையே? வந்து அபேட்சை மனுத்தாக்கல் செய்து விட்டுப் போனால், மறுபடியும் தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது திரும்பவும் வந்து நாலு இடங்களில் பேசினால் போதும். மற்ற காரியங்களையெல்லாம் நாம் பார்த்துக் கொள்கிறோம். நீ இருக்கிறாய். அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டான் இருக்கிறான். ஒரு நாளைக்கு நூறு கூட்டம் போட்டு பேசச் சொன்னாலும் அந்தப் பையன் சளைக்காமல் பேசுவான். பிரச்சாரமே அதிகம் வேண்டா. ஒரு பெண் தேர்தலுக்கு நிற்கிறாள் என்பதே போதும். பூரணியைப் போல் இத்தனை பேருள்ள பெண் நிற்கிற போது போட்டியிருந்தாலும் வலுவிழந்து போகும். நீ என்ன நினைக்கிறாய் அரவிந்தன்? இதில் உனக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?”

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால். . .”

“ஆனால் என்ன ஆனால்?… தைரியமாக எனக்கு நல்ல முடிவு சொல்! பூரணியைப் போல் நல்லவர்கள் நுழைவதாலேயே அரசியல் நிலை சீர்திருந்தலாமல்லவா! தான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகிற புனிதத் தன்மைதான் அவளிடம் இருக்கிறதே! அப்படி இருக்கும் போது நாம் ஏன் அஞ்சவேண்டும்?”

“நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது.”

“இதோ பார், அரவிந்தன்! இந்தக் காரியத்தை இவ்வளவு அலட்சியமாக நீ கருதலாகாது. என் மானமே இதில் அடங்கியிருக்கிறது. நகரத்துப் பெரிய மனிதர்கள் அடங்கிய கூட்டத்தில் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். பூரணியை நிறுத்தினால் தான் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்குமென்று எல்லாரும் நம்புகிறார்கள். அடுத்த ஞாயிறன்று தேர்தல் பற்றிய தீர்மானங்களுக்காக மறுபடியும் நாங்கள் சந்திக்கிறோம். அன்று அவர்களுக்கு இதுபற்றி உறுதி சொல்வதாக நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.” மீனாட்சிசுந்தரத்தின் குரல் திட்டமாக உறுதியாக – சிறிதளவு கண்டிப்பும் கலந்து ஒலித்தது.

“இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் போதுமான அரசியல்வாதிகளும் தலைவர்களும் இப்போதே இந்த நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் விவேகானந்தர் போல், இராமலிங்க வள்ளலார் போல் ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் ஆன்ம எழுச்சியையும் உண்டாக்குகிற ஞானிகள்தான் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் இந்த நாட்டில் தோன்றவில்லை. தயவு செய்து பூரணியையாவது இந்த வழியில் வளர விடுங்கள்? அரசியல் சேற்றுக்கு இழுக்காதீர்கள்.” சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினான் அரவிந்தன். இவ்வளவு உறுதியாக வேறெந்தக் காரியத்துக்கும் அவன் இதற்குமுன் அவரிடம் மன்றாடியதில்லை. அவரை எதிர்த்துக் கொண்டு கருத்து மாறுபட்டு வாதாடியதுமில்லை. அவர் அவனுக்குப் படியளப்பவர். அவரிடம் பணிவும் நன்றியும் காட்ட வேண்டியது அவன் கடமை. அவருக்கு அறிவுரை கூறுவது போல், அவருக்கு முன்பே தன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு பேசலாகாது. ஆயினும் உணர்ச்சிவசப்பட்டுச் சற்று அதிகமாகவே பேசியிருந்தான் அவன்.

மீனாட்சிசுந்தரம் அயர்ந்து விடவில்லை. அவன் அருகே வந்தார். மெல்லச் சிரித்தார். வாஞ்சையோடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். தணிந்த குரலில் அவனை நோக்கிக் கூறலானார். “அரவிந்தன்! பச்சைக் குழந்தை மாதிரி அநாவசியமான கவலையெல்லாம் நினைத்துக் கலங்குகிறாயே! உன்னைப் போலவே எனக்கும் பூரணியின் எதிர்கால நலனில் மிகவும் அக்கறை உண்டு. அவளுக்குக் கெடுதல் தருவதை நான் கனவில் கூட நினைக்க மாட்டேன். வெற்றியைத் திடமாக நம்பிக் கொண்டு தான் நானும் இதில் இறங்குகின்றேன். ஆயிரக்கணக்கில் பணம் தண்ணீர் போல் செலவழியும். நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலம் முழுவதும் விற்றுத் தேர்தலில் போடப்போகிறேன். வைகைக் கரையில் அயனான நன்செய் விலைபோகிறது. பூரணியைத் துன்பப்படுத்துவதற்கா இவ்வளவு செய்வேன்? இத்தனை வருடங்களாகப் பெற்ற பிள்ளை போல் என்னிடம் பழகுகிறாயே? உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படியானால் அப்புறம் உன் விருப்பம்.”

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue