Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 4

 அகரமுதல





(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 3 இன் தொடர்ச்சி)


குமரிக் கோட்டம் – 4

அத்தியாயம் 1 தொடர்ச்சி


இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு “மகாசனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர் மறுத்துக் கலியாணம் என்பது, கட்டளையாக இருக்கக் கூடாது, நிருப்பந்தமாக இருத்தலாகாது, பரசுபர அன்பும் சம்மதமும் இருக்கவேண்டும், காதலர் கருத்து ஒருமித்து வாழ்வதே இன்பம் என்பன போன்ற கொள்கைகளை ஏற்க மறுத்து, சாதிப் பீடையை ஆண்டவன் ஏற்பாடு என்று விடாப் பிடியாகக் கொண்டு, ஒரே மகனை உலகில் பராரியாக்கிவிட்டு, பகவத்து கைங்கர்யம் என்ற பெயரால் சொத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருந்த குழந்தைவேல் செட்டியார், “தருமிசுட்டர், சனாதன சீலர், பக்திமான்,” என்று கொண்டாடப்பட்டார். கோயில் மாலை அவருடைய மார்பில் ! ஊர்க் கோடியில் உலவும் உலுத்தர்கள் வீசும் கற்கள், பழனியின் மண்டையில் ! பழனி மனம் உடையவில்லை. நாகவல்லியின் அன்பு அவனுக்கு, எந்தக் கடினத்தையும் விநாடியிலே போக்கிவிடும் அபூர்வ மருந்தாக இருந்தது.


“இன்று எத்தனைக் கற்கள்?” என்று தான் வேடிக் கையாகக் கேட்பாள் நாகவல்லி.

“பெரிய கூட்டம். வாலிபர்கள் ஏராளம். நாகு! பெண்கள் கூட வந்திருந்தார்கள் ” என்று கூட்டத்தின் சிறப்பைக் கூறுவான் பழனி. இவ்விதமாக வாழ்க்கை ஒரே ஊரில் அல்ல ! நாகவல்லி ஆறு மாதத்துக்குள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு மாற்றப்படுவது வழக்க மாகி விட்டது. அவள் மேல் குற்றம் கண்டுபிடித்ததால் அல்ல கணவன் சூனாமானாவாமே என்ற காரணத்தால், கசுட்ட சீவனந்தான். ஆனால், மற்றக் குடும்பங்கள், வீடு வாங்கினோம், நிலம் வாங்கினோம், இரட்டைப் பட்டைச் செயின் செய்தோம், இரண்டு படி கறக்கும் நெல்லூர்ப் பசு வாங்கினோம் என்று பெருமை பேசினவே தவிர, வாங்கின வீட்டுக்கு மாடி இல்லையே, நிலம் ஆற்றுக்கால் பாய்ச்சலில் இல்லையே, செயின் எட்டுச் சவரன் தானே, பசு வயதானதாயிற்றே என்ற கவலையுடனேயே இருந்தன . நாகவல்லி பழனி குடும்பத்துக்கு அத்தகைய பெருமையும் கவலையும் கிடையாது.

“நாகு ! தெரியுமா விசேடம்?”

“என்ன ? எந்தக் கோட்டையைப் பிடித்து விட்டீர்கள்?”

” இடித்து விட்டேன், கண்ணே !” “எதை ?”

“மருங்கூர் மிராசுதாரின் மனக் கோட்டையை. அவர் தன்னுடைய கிராமத்திலே எவனாவது சீர்திருத்தம், சுயமரியாதை என்று பேசினால் மண்டையைப் பிளந்து விடுவேன் என்று சம்பமடித்துக் கொண்டிருந்தாரல்லவா? நேற்று, அந்த மனக்கோட்டையை இடித்துத் தூள் தூளாக்கி விட்டேன். பெரிய கூட்டம்! பிரமித்துப் போய்விட்டார்.”

“பேசு! சரியான வெற்றி. எப்படி முடிந்தது?”

“ஒரு சின்னத் தந்திரம் ! மிராசுதார் மருமகன் இருக்கிறானே அவனுக்கும் மிராசுதாரருக்கும் மனசு தாபமாம். யுக்தி செய்தேன். அந்த மருமகனைத் தலைவராகப் போட்டுக் கூட்டத்தை நடத்தினேன். மிராசுதாரர் ‘கப்சிப்’ பெட்டிப் பாம்பாகிவிட்டார்.”

“அவன் நமது இயக்கத்தை ஆதரிக்கிறானா?”

இயக்கமாவது, அவன் ஆதரிப்பதாவது ! அவனுக்கு என்ன தெரியும் ஒப்புக்கு உட்கார வைத்தேன்?

” என்னதான் பேசினான்?”

“அவனா? நாகா, நீ வரவில்லையே ! வந்திருந்தால் வயிறு வெடிக்கச் சிரித்துவிட்டிருப்பாய் அவன் பேச்சைக் கேட்டு.”

“ரொம்ப காமிக்கு பேர்வழியோ?”

“காமிக்குமில்லை, கத்தரிக்காயுமில்லை; அவன் உலகமறியாதவன். ஆரம்பமே, எப்படித் தெரியுமோ? ஏலே! யார்டா அவன் காத்தானா, உட்காரு கீழே இப்ப, பிரசங்கம் நடக்கப்போவுது, கப்சிப்ன்னு சத்தம் செய்யாமே கேட்க வேணும். எவனாவது எதாச்சும் சேட்டை செய்தா தோலை உரிச்சுப்போடுவேன். ஆமாம்!’ இதுதான், நாகு! அவன் பிரசங்கம்.”

“அட இழவே! இந்தமாதிரி ஆட்களைச் சேர்த்தால் இயக்கம் கெட்டுத்தானே போகும்.”

“சேர்க்கறதாவது ! நடக்கறதாவது ! கூட்டம் நடத்த வேறு வழி கிடைக்காமே இருந்தது, அதற்காக அந்த ஆளை இழுத்துப்போட்டேன். கூட்டம் முடிந்ததும், பத்துப் பேருக்கு மேலே, மிகத் தீவிரமாகி விட்டார்கள். இனி, யார் தயவும் வேண்டாம் : நாமே கூட்டம் போடலாம் என்று சொன்னார்கள்.”

இப்படிப்பட்ட பேச்சுத்தான், பழனி – நாகவல்லிக்கு! வேறு என்ன பேசமுடியும், புதிய பங்களாவைப் பற்றியா, பவள மாலையைப் பற்றியா?

“எங்கே நாகு ! செயின்?” “பள்ளிக்கூடத்தில்!”

“என்ன விளையாட்டு இது? கழுத்தே அழகு குன்றிவிட்டது அந்தச் செயின் இல்லாமல், எங்கே செயின்?”

“சேட் இலீலாராமிடம் 25-க்கு அடகு வைத்திருக்கிறேன்.”

“ஏன்? “

“சும்மா, தமாசுக்கு! அந்த மிராசுதாரனின் மருமகனைச் சொல்லிவிட்டீர், உலகமறியாதவன் என்று. இன்னும் மூன்று மாதத்திலே தகப்பனாராகப்போகிற விசயம் கூட உங்களுக்குத் தெரியவில்லை. இருபத்து ஐந்து ரூபாய் வாங்கித்தான், இரண்டு மாத டாக்டர் பில் கொடுத்தேன், மிச்சமிருந்த பத்து ரூபாய்க்கு, பெர்னாட்சா வாங்கினேன்.”

பழனியின் குடும்பக் கணக்கு இவ்விதம் இருந்தது. அதே கோத்தில், குழந்தை வேலச் செட்டியார் தம் குமாசுதாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார், கணக்கு :

வட்டி வரவு: உரூ அ . ப .
வடிவேல் பிள்ளை மூலம். 65000
வாடகை வரவு : வில்வசாமி மூலம். 40000
நெல் விற்ற வகையில் வரவு. 260000
நேத்திரானந்தர் மடத்துக் கைங்கரியச் செலவு 600 00
பிட்சாண்டார் கோயில் வாகன கைங்கரியச் செலவு 126000
பிடில் சுந்தரேச ஐயர் மகள் கலியாணச் செலவுக்காக 30200
வாணக் கடைக்கு 4600
பூப்பல்லக்கு சோடிக்க 26000

என்று இவ்விதம். செட்டியார் வீட்டிலே, சூடிக் கொள்ள ஆளில்லாததால் மூலையில் குவிந்தன மலர் மாலைகள். பழனியின் மடியில் மலர்ந்த தாமரை போன்ற முகம், அதிலே உரோசா போன்ற கன்னம், முத்துப் பற்கள், அவைகளைப் பாதுகாக்கும் பவள இதழ், பவுன் நிற மேனி,………….. ஏழ்மை . ஆனால், கொள்கையின் படி வாழ்வு அமைந்ததால் இன்பம் அங்கே. செல்வம், ஆனால் மனம் பாலைவனம், செட்டியார் வீட்டில்.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue