Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 50

அகரமுதல





(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  49 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

18


தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே பெரிது செய்தால் அந்தக் குறைகளும் பெரிதாகத் தெரிகிற மாதிரித்தான் இருக்கிறது இப்போதுள்ள பாரத நாட்டு வாழ்க்கை ‘வளர்ச்சி’! இந்த நாட்டு இளைஞர்கள் சோர்வும் பசியும் ஏமாற்றமும் அவநம்பிக்கைகளும் கொண்டு படிப்புக்கேற்ற வேலையின்றி உழைப்புக்கேற்ற புகலிடம் இன்றி வேதனைப்படுகிறார்கள். தொடர் வண்டியின் முன் விழுந்தும் மரக்கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டும் நஞ்சு தின்றும் சாவதற்கா இவர்கள் பிறந்தார்கள்?”

பேனா வெள்ளைக் காகிதத்தைக் கிழித்து விட்டு நின்றது. மை இல்லை. நல்ல கருத்துகள் மனத்துக்குள் வெள்ளமாகப் புரண்டு வருகிற நேரத்தில் வறண்டு போய்த் தொல்லை மிகக் கொடுக்கும் பேனாவின் மேல் கோபம் வந்தது அரவிந்தனுக்கு. அதை அப்படியே முறித்துப் போட்டுவிடலாமா என்று சினம் தோன்றியது. எழுதும்போது பேனாவில் மை இல்லாமல் போகிற இடையூறு போல் பெரிய இடையூறு உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது என்ற கொதிப்புடன் மேசை இழுப்பறையைத் திறந்து அவன் மைக்கூட்டை எடுத்தான். நீர் வறண்டு தரை தெரியும் வெய்யிற் காலத்து வானம் பார்த்த பூமிக் கிணறு மாதிரி மைக்கூடும் காலியாக இருந்தது. பொறுக்க முடியாத எரிச்சல் மூண்டது அவனுக்கு. அந்த எரிச்சலோடு இரைந்து கத்தி, ஊழியனை மை வாங்கி வரச் சொல்லலாமெனக் கூப்பிட்டான். பின்புறம் ஏதோ கை வேலையாக இருந்ததனால் ஊழியன் உடனே வரவில்லை. “எல்லாப் பையன்களுக்கும் காது அடைத்துப் போய்விட்டது. நாமே போய் வாங்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்து வெளியேறி மேலக்கோபுரத் தெருவில் திரைப்பட நிலையத்துக்கு அருகில் இருந்த ‘ஷாப்‘பில் போய் மைப்புட்டி வாங்கிக் கொண்டு திரும்பினான்.

புதுப்படம் போட்டிருந்தார்கள் போலும். திரைப்பட நிலையத்தின் முன் வரிசை நீண்டிருந்தது. தற்செயலாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் மேற்சென்ற அரவிந்தனின் பார்வை வியப்புடன் ஒரு முகத்தின் மேல் நிலைத்துப் பதிந்தது. கோபுரம் சரிந்து விழுவது போல் மனத்தில் ஓர் உணர்வு உடைந்து சரிந்தது. நெற்றி சுருங்கப் பார்த்தான் அவன்.

ஏழு நாட்களாகப் பட்டினி கிடந்து சாவதாகப் பஞ்சைப் பாட்டுப்பாடி அரவிந்தனுடைய அனுதாபத்தையும் ஒரு உரூபாயையும் பெற்றுக் கொண்டு போனானே, அந்த வாலிபன் வாயில் ‘சிகரெட்டு’ புகை சுழலத் திரைப்படம் பார்ப்பதற்காக பன்னிரண்டரையணா சீட்டு வரிசையில் நின்று கொண்டிருந்தான். அதைக் கண்டதும் உலகமே தலைகீழாகச் சுழல்வது போலிருந்தது அரவிந்தனுக்கு. முருகானந்தமாயிருந்தால் அந்த வாலிபனை வரிசையிலிருந்து வெளியே இழுத்துச் செம்மையாக உதைத்திருப்பான். அரவிந்தனுக்கும் மனம் குமுறிற்று. அருகில் போய் அவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்ற துடிப்பும் கூட ஏற்பட்டது. ஆனால் வரிசை நகர்ந்ததன் காரணமாக அதற்குள் அந்த வாலிபன் உட்பக்கம் முன்பாகப் போயிருந்தான்.

‘எக்கேடும் கெட்டுத் தொலையட்டும்! இவர்கள் உருப்படப் போவதில்லை. இரயிலுக்குப் போகிற அவசரம் போலப் பரபரப்போடு பலப்பல தவறுகளைச் செய்து இரவும் பகலும் பாழாக்கித் தங்கள ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சிந்தனையில்லாமல் கோயில் காளைகள் போல் திரிகிற இந்த விடலைக் கும்பல் எந்த வழியால் உய்யப் போகிறது? இவர்களைத் திருத்துவதற்கு மகாத்துமாக்கள் பிறக்கவேண்டும். வெறும் மனிதர்களால் முடியாது. மாதம் ஆயிரம் உரூபாய் சம்பாதிக்கிற பதவியுடையவர் வாரத்துக்கு ஒருமுறை தான் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். மாதம் முப்பது உரூபாய் வாங்குகிற கூலியாள் வீட்டில் மனைவி குழந்தையும் பட்டினி கிடக்க ஒரே படத்துக்கு ஏழு தடவைகள் போகிறான்.

கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது? அப்போதே அந்த வாலிபனிடம் ஒரு உரூபாயை முழுசாகத் தூக்கிக் கொடுத்திருக்கக் கூடாது. நானே உணவகத்துக்குக் கூட்டிப் போய்ச் சாப்பாடு பண்ணி அனுப்பி வைத்திருக்க வேண்டும். பரவாயில்லை, எனக்கு இதுவும் ஒரு பாடம் தான். சுலபமாக நம்பி ஏமாறதபடி என்னை நான் விழிப்பாக வைத்துக் கொள்வேன் இனிமேல்’ என்று நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி வருவதைத் தவிர அரவிந்தனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அச்சகத்தில் போய் உட்கார்ந்து புத்தகக் கட்டோடு கிடைக்குமாறு தனித் தபாலில் பூரணிக்கு ஒரு கடிதமும் எழுதினான். முருகானந்தம்-வசந்தா கடிதத் தொடர்பு வேறு அவன் மனத்தை உறுத்திச் சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆயினும் அதுபற்றி அவன் பூரணிக்கு ஒன்றும் எழுதவில்லை. மீனாட்சிசுந்தரம் ஏதோ முக்கியமான விசயம் பற்றிப் பேச வேண்டுமென்று தன்னை இருக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறாரே. அது என்ன விசயமாக இருக்குமோ, என்னும் சந்தேகங்களைப் பின்னலாயிற்று அவன் மனம்.

அரவிந்தன் மீனாட்சிசுந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாள் வந்தாள். ‘இரண்டு மூன்று முக்கியமான கடிதங்கள் மங்கையர் கழகத்துக்கு வந்திருப்பதாகவும் அவற்றுக்குப் பூரணியைக் கலந்து கொண்டுதான் பதில் எழுதவேண்டும்’ என்றும் சொல்லிப் பூரணியின் கொடைக்கானல் முகவரியை அரவிந்தனிடம் கேட்டாள் அந்த அம்மாள்.

“நேரில் நீங்களே போகப் போகிறீர்களா, அம்மா?” என்று புத்தகங்களை அந்த அம்மாள் மூலமே அனுப்பிவிடும் குறிப்போடு கேட்டான் அவன்.

“இல்லை, கடிதம் எழுதிக் கலந்து கொள்ளத்தான் முகவரி கேட்டேன்” என்று அம்மாள் கூறிவிடவே புத்தகம் கொடுத்தனுப்புவது சாத்தியமில்லையென முகவரி மட்டும் எழுதிக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனாள் அந்தப் பெண்மணி.

‘உடல்நலமில்லாமல் ஓய்வு கொள்ளப் போன இடத்திலும் கூட பூரணியைக் கவலையின்றி நிம்மதியாய் இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே’ என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான் அரவிந்தன். இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. மணி ஏழே முக்காலை எட்டிய சமயம், சிறிது நேரத்தில் மீனாட்சிசுந்தரம் வந்து சேர்ந்தார்.

“இப்படி உள்ளே வா அரவிந்தன்! நான் பேசவேண்டிய விசயம் மிக அந்தரங்கமானது. உன்னுடைய உதவியில்லாமல் இந்தத் தீர்மானத்தையும், நினைவையும் நான் நிறைவேற்றிக் கொள்வதற்கில்லை. இதனால் நமது தொழிலும் செல்வாக்கும் பெருகலாம். எத்தனையோ இலாபங்களும் சௌகரியங்களும் சுலபமாகக் கிடைக்க இது ஒரு வழி” விசயத்தை விண்டு சொல்லாமல் பூடகமாகவே பேசிக் கொண்டு போனார் அவர். “என்ன விசயமென்று நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும்?” என்று கேட்டுக் கொண்டே அவருடைய மேசைக்கு முன்னால் நின்றான் அரவிந்தன்.

“முதலில் நீ உட்கார்ந்து கொள்!”

அரவிந்தன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான்.

“நான் கேட்பதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே! பூரணி நீ சொன்னால் எதையும் தட்டமாட்டாள் அல்லவா?”

எதற்காக, ஏன், என்ன நோக்கத்தோடு இதை அவர் கேட்கிறாரென விளங்காமல் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue